உலகின் மின்னல் வேக ஓட்ட வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் உள்ளிட்ட பல முன்னணி சர்வதேச வீரர்களுடன் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு சட்டத்தரணியான ரோவேனா சமரசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய விளையாட்டுப் பேரவையின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.
இதன்படி, இலங்கையில் உள்ள விளையாட்டு வீரர்களை சர்வதேச ரீதியில் மிளிரச் செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் அவர் மிக விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அபிவிருத்திக்கு மஹேலவுடன் கைகோர்க்கும் டயலொக் நிர்வாகி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன தலைமையிலான 14 பேர் கொண்ட தேசிய விளையாட்டுப் பேரவை, கடந்த வியாழக்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டனர்.
இந்தக் குழு நாட்டில் விளையாட்டத்துறை தொடர்பில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் மஹேல ஜயவர்தனவுடன் குமார் சங்கக்கார, டிலன்த மாலகமுவ, ஜூலியன் போலிங் உள்ளிட்ட இலங்கைக்கு பெருமை சேர்த்த முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மறுபுறத்தில் 14 பேர் கொண்ட இந்தக் குழுவில் மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் பெண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் முன்னாள் சம்பியனும், சட்டத்தரணியுமான தியுமி அபேசிங்க, இலங்கை பெண்கள் கூடைப்பந்தாட்ட அணியை 1989இல் தலைமை தாங்கியவரும், இலங்கையின் முன்னணி வியாபார நிறுவனங்களில் ஒன்றான ஹேய்லீஸ் நிறுவனத்தின் தற்போதைய நிறைவேற்று அதிகாரியுமான கஸ்தூரி வில்ஸன் மற்றும் சர்வதேச விளையாட்டு முகாமைத்துவத்தில் எம்.பி.ஏ பட்டப்படிப்பினை முடித்தவரும், லண்டனில் உள்ள் முன்னணி விளையாட்டு சட்டத்தரணியுமான ரோவேனா சமரசிங்கவும் பெண் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
Video – எனது சேவை கிரிக்கெட்டுக்காக மட்டுமல்ல..! – Mahela Jayawardena
இதனிடையே, தேசிய விளையாட்டுப் பேரவையில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு விளையாட்டு சட்டதரணியான ரோவேனா சமரசிங்க, இலங்கைப் பிரஜையாக இருந்தாலும், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார்.
கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரியின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான மொஹான் சமரசிங்கத்தின் மகள் தான் ரோவேனா.
பாடசாலைக் காலத்தில் விளைளயாட்டில் அதீத திறமையினை வெளிப்படுத்திய மொஹான் சமரசிங்க, அந்த கல்லூரி சார்பாக ஒன்பது விளையாட்டுகளில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இதில் ரக்பி, ஹொக்கி மற்றும் மெய்வல்லுனர் உட்பட ஏழு விளையாட்டுகளுக்கு அவருக்கு வர்ணங்கள் வழங்கப்பட்டன. 1963ஆம் ஆண்டு புனித தோமியர் கல்லூரி ரக்பி அணியின் தலைவராக செயற்பட்ட அவர், அந்த வருடம் நடைபெற்ற அனைத்துப் ரக்பி போட்டிகளிலும் புனித தோமியர் கல்லூரி வெற்றி பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எனவே, இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரரின் மகளான ரோவேனா சமரசிங்க, மைதானத்தில் அல்லாமல் விளையாட்டு நிர்வாகத்தில் பல வெற்றிகளை நாட்டிற்கு பெற்றுக் கொடுத்து வருகின்றார்.
தேசிய விளையாட்டு பேரவைக்கு சங்கா, மஹேலவுக்கு அழைப்பு
இதனிடையே, கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரோவேனா சமரசிங்க கடந்த ஆறு மாதங்களாக இங்கிலாந்தில் தங்கியுள்ளார்.
எனினும், கொவிட் – 19 வைரஸின் தாக்கம் குறைவடைந்த பிறகு மிக விரைவில் ரோவேனா சமரசிங்க இலங்கைக்கு வருகை தந்து தேசிய விளையாட்டுப் பேரவையின் பணிகளில் இணைந்துகொள்வார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
விளையாட்டு சட்டத்தை அமுல்படுத்துவதில் துறைசார் அனுபவமிக்க சட்டத்தரணிகளில் ஒருவராக விளங்குகின்ற ரோவேனா சமரசிங்க, சர்வதேச ரீதியில் பல முன்னணி வீரர்களின் சட்டத்தரணியாக செயற்பட்டுள்ளார்.
குறிப்பாக, பல வருடங்கள் லண்டனில் உள்ள முன்னணி சட்டத்துறை நிறுவனமொன்றில் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கின்ற ரோவேனா சமரசிங்க, விளையாட்டு முகாமைத்துவம், விளையாட்டு சட்டத்தரணி ஆகிய துறைகளில் பல சர்வதேச வீரர்களுடன் பணியாற்றியுள்ளார்.
இவ்வாறு சர்வதேச ரீதியில் விளையாட்டு சட்டம் தொடர்பில் பரந்த அறிவினைக் கொண்ட இவர், தற்போது தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.
இதனால் எமது வீரர்களை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்கின்ற ஆற்றலும், மனப்பாங்கும் அவரிடம் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது.
இதில், உலகின் அதிவேக வீரரான உசைன் போல்ட்டுடன் இணைந்து செயற்படுகின்ற சட்டத்துறை நிறுவனத்தில் அவர் கடமையாற்றியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அரசியல் தலையீடு, ஊழல்கள் இன்றி விளையாட்டு இருக்க வேண்டும் – ஹரின்
அத்துடன், சர்வதேச வீரர்கள் பலருடன் கடமையாற்றியுள்ள ரோவேனா சமரசிங்க, சர்வதேச விளையாட்டு சட்டம், சர்வதேச அனுசரணையாளர் மற்றும் ஒளிபரப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட விடயங்களுக்கான சட்ட ரீதியான வேலைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்.
இதேநேரம், சுவிட்சர்லாந்தில் உள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டு நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணியாகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
அதேபோன்று, விளையாட்டு மற்றும் உடற்தகுதி முகாமைத்துவத்துக்கான நிறுவனத்தில் பணிப்பாளராக கடமையாற்றியுள்ள ரோவேனா சமரசிங்க, பிரித்தானியாவின் விளையாட்டு மற்றும் உடற்தகுதிப் பிரிவின் தொழில்சார் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் ஸ்கோஷ் சங்கம் ஆகியவற்றின் பணிப்பாளர் சபையில் ஒரு உறுப்பினராகவும் உள்ளார்.
இதுஇவ்வாறிருக்க, தேசிய விளையாட்டுப் பேரவையில் ஒரு உறுப்பினராக இடம்பெற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் விடுத்த அழைப்பினை ரோவேனா சமரசிங்க முழு சம்மதத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
Video – இலங்கையின் விளையாட்டுக்கு கைகொடுக்கத் தயார்! Kumar Sangakkara
இதன்படி, இலங்கையின் மெய்வல்லுனர் வீரர்கள் உள்ளிட்ட ஏனைய ஒருசில விளையாட்டுக்களைச் சேர்ந்த வீரர்களை சர்வதேச ரீதியில் மிளிரச் செய்வதற்கான வேலைத்திட்டத்தில் முக்கிய பங்காளராக இருப்பதற்கான விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல, தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவர் மஹேல ஜயவர்தனவும், ரோவேனா சமரசிங்கவுடன் தொலைபேசி வாயிலான கலந்துரையாடி இலங்கையின் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாகப் பேசியுள்ளார்.
இந்த நிலையில், 1973ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விளையாட்டு சட்டத்தை நீக்கி, புதியதொரு விளையாட்டு சட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான முழுப் பொறுப்பும் ரோவேனா சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, சுமார் 16 வருடங்களுக்கும் கூடுதலாக சர்வதேச விளையாட்டு சட்டத்தரணியாக பல்வேறு வகிபாகங்களை வகித்து வெற்றிகண்ட ஒரு சாதனைப் பெண்ணாக வலம்வருகின்ற ரோவேனா சமரசிங்க, மிக விரைவில் இலங்கையின் விளையாட்டின் அபிவிருத்தியிலும் முக்கிய பங்கு வகிப்பார் என நம்பப்படுகின்றது.
மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க