உலகக் கிண்ண வீரர்கள் குழாத்தினை அணிகள் எப்போது அறிவிக்கும்?

546
Photo – Getty Images

அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ண தொடருக்கான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி மட்டுமே உலகக் கிண்ணத்திற்கான வீரர்கள் குழாத்தினை இதுவரையில் வெளியிட்டிருக்கின்றது.

அதேநேரம், உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் யாவும் தமது வீரர்கள் குழாத்தினை அறிவிக்க வேண்டிய கடைசி நாள் இம்மாதம் 23ஆம் திகதி என சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

கிரிக்கெட் ரசிகர்களது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள 12ஆவது………

இதற்கு அமைவாக உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் கிரிக்கெட் அணிகள் தங்களுடைய வீரர்கள் குழாங்களை எப்போது அறிவிக்கும் என்பதனை நோக்குவோம்.

இந்தியா

Photo – Getty Images

உலகக் கிண்ணத்தை வெல்ல எதிர்பார்க்கப்படும் முக்கிய அணிகளில் ஒன்றாக இருக்கும் இந்திய அணி, உலகக் கிண்ணத்திற்கான தமது வீரர்கள் குழாத்தினை அடுத்த திங்கட்கிழமை (15) அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2011ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் இம்முறைக்கான வீரர்கள் குழாத்தில், தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். T20 தொடரில் திறமைகளை வெளிக்காட்டி வரும் துடுப்பாட்ட வீரர்களான அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக்,  KL. ராகுல் மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோரும் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாகிஸ்தான்

Photo – AFP

ஐ.சி.சி. 2017ஆம் ஆண்டில் நடாத்திய சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் வெற்றியாளர்களாக மாறிய பாகிஸ்தான், உலகக் கிண்ணத் தொடரில் திடீர் திருப்பங்களை ஏற்படுத்தும் ஒரு அணியாக இருக்கின்றது.

மும்பை அணியின் வெற்றியுடன் நள்ளிவிரவில் நாடு திரும்பிய மாலிங்க

ஐ.பி.எல். தொடரில் நேற்று (03) ………

உலகக் கிண்ணத்திற்கான 23 பேர் அடங்கிய உத்தேச குழாத்தினை ஏற்கனவே அறிவித்துள்ள பாகிஸ்தான் அணி, அதிலிருந்து 15 பேர் அடங்கிய தமது இறுதி வீரர்கள் குழாத்தினை தற்போது நடைபெற்றுவருகின்ற உடற்தகுதி சோதனைககளினை அடுத்து ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி அறிவிக்க காத்திருக்கின்றது.

தென்னாபிரிக்கா

Photo – Getty Images

அண்மையில் இலங்கை கிரிக்கெட் அணியினை ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்த தென்னாபிரிக்க அணி, உலகக் கிண்ணத்திற்கான தமது வீரர்கள் குழாத்தினை தற்போது நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களின் அடிப்படையில், பாகிஸ்தான் அணி அறிவிக்கும் அதேநாளில் (ஏப்ரல் 18) அறிவிக்கவிருக்கின்றது.

அறிவிக்கப்படவுள்ள தென்னாபிரிக்க அணிக் குழாத்தில் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஹஷிம் அம்லா இடம்பெறுவாரா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க JP. டுமினி, லுங்கி ன்கிடி மற்றும் என்ரிச் நோர்ட்ஜ்ஜே போன்ற வீரர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகக் கிண்ணத்திற்காக தெரிவு செய்யப்படும் தென்னாபிரிக்க வீரர்கள் அடுத்த மாதம் 12ஆம் திகதியளவில் ஆரம்பமாகும் விஷேட பயிற்சி முகாமொன்றிலும் பங்கெடுக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான்

அதிரடி முடிவுகளோடு மூன்று வகைப் போட்டிகளுக்கும் கடந்த வாரம் புதிய  அணித்தலைவர்களை நியமனம் செய்த ஆப்கானிஸ்தான் அணி, துடுப்பாட்ட வீரரான குல்படின் நயீபிற்கு உலகக் கிண்ணத்திற்கான ஆப்கானிஸ்தான் அணியினை தலைமைதாங்கும் பொறுப்பினை கொடுத்திருக்கின்றது.

உலகக் கிண்ணத்திற்காக 23 பேர் கொண்ட உத்தேச குழாத்தினை தற்போது வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அங்கே ஆறு பயிற்சிப் போட்டிகளில் விளையாடியதன் பின்னர், உலகக் கிண்ணத்திற்கான தமது 15 பேர் அடங்கிய வீரர்கள் குழாத்தினை அறிவிக்கவுள்ளது.

அதோடு ஆப்கானிஸ்தான் அணி, உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுடனும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடவுள்ளது.

உலகக் கிண்ணத்தில் காலநிலை முக்கிய செல்வாக்கு செலுத்தும் -பீடர்சன்

அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகும்………

பங்களாதேஷ்

Photo – AFP

உலகக் கிண்ணத்திற்கான வீரர்கள் குழாத்தினை அறிவிக்கும் இறுதித் திகதியினை பங்களாதேஷ் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை என்ற போதிலும், பங்களாதேஷ் அணியின் முன்னாள் வீரரான ஹபிபுல் பசார் ஏப்ரல் 15ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் உலகக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்த பங்களாதேஷ் அணி, கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் போது இப்போது நடைபெற்று வருகின்ற உள்ளூர் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயற்படும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், உலகக் கிண்ணத்திற்கான தமது வீரர்கள் பயிற்சி முகாமை ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி ஆரம்பம் செய்யும் பங்களாதேஷ் அணி, உலகக் கிண்ணத்திற்கு முன்னர் அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கெடுக்கும் முக்கோண ஒருநாள் தொடரிலும் விளையாடுகின்றது.

இங்கிலாந்து

Photo – Getty Images

ஐ.சி.சி. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் காணப்படும் இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கு அடுத்ததாக உலகக் கிண்ணத்தை வெல்ல எதிர்பார்க்கப்படும் முக்கிய அணியாக இருக்கின்றது.

உமர் அக்மலுக்கு அபராதம் விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல், ஒழுக்க ……..

ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கான வீரர்களை தெரிவு செய்து வைத்துள்ள இங்கிலாந்து அணி, அண்மையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொண்ட மேற்கிந்திய தீவுகளின் இளம் பந்துவீச்சு சகலதுறைவீரர் ஜொப்ரா ஆர்ச்சரிற்கு உலகக் கிண்ணத்தின் போது தமது அணியில் சந்தர்ப்பம் வழங்குமா? என்பதே பெரிய கேள்வியாக இருக்கின்றது.  

இதன்படி, எதிர்வரும் நாட்களில் உலகக் கிண்ணத்திற்கான தமது வீரர்கள் குழாத்தினை அறிவிக்கவுள்ள இங்கிலாந்து அணி, உலகக் கிண்ணத்திற்கு முன்னர் ஆறு ஒருநாள் போட்டிகளில் ஸ்கொட்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் விளையாடவிருக்கின்றது.

அவுஸ்திரேலியா

Photo – Getty Images

உலகக் கிண்ணத்தினை ஐந்து தடவைகள் வென்றிருக்கும் அவுஸ்திரேலிய அணி, கடந்த காலங்களில் தமது சிரேஷ்ட வீரர்கள் இல்லாத நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்த போதிலும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிரான அண்மைய ஒருநாள் தொடர்களை கைப்பற்றி உலகக் கிண்ணத்தில் சவால்தரக்கூடிய முக்கிய அணிகளில் ஒன்றாக மீண்டும் மாறியிருக்கின்றது.

உலகக் கிண்ணத்திற்கான தமது வீரர்கள் சீருடையை வெளியிட்டிருக்கும் அவுஸ்திரேலியா, உலகக் கிண்ணத்திற்கான வீரர்கள் குழாத்தை அறிவிக்கும் திகதியினை இன்னும் குறிப்பிடவில்லை. இது ஒருபுறமிருக்க பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி போட்டித்தடையினை பெற்றுக்கொண்ட துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோனர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய குழாம்  அறிவிக்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலிய வீரர்கள் மே மாத ஆரம்பத்தின் போது நியூசிலாந்து அணியுடன் சில பயிற்சிப் போட்டிகளில் ஆடுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.  

மேற்கிந்திய தீவுகள்

Photo – Getty Images

மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரர்கள் பலர் பல்வேறு நாடுகளில் இடம்பெறும் உள்ளூர் T20 தொடர்களில் பங்கேற்றுவரும் காரணத்தினால், உலகக் கிண்ணத்திற்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிக்கப்பட சற்று தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், உலகக் கிண்ணத்திற்காக அறிவிக்கப்படவுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் இடம்பிடிக்கவுள்ள கிறிஸ் கெயில், அன்ட்ரூ ரசல் போன்றோர் அவ்வணியின் துடுப்பாட்டத்துறையினை பலப்படுத்தும் துருப்புச் சீட்டு வீரர்களாக இருப்பார்கள் என நம்பப்படுகின்றது.

உலகக் கிண்ணத்தில் எதிர்வுகூற முடியாத அணிகளில் ஒன்றாக இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தல்களை பங்களாதேஷ், அயர்லாந்து அணிகள் பங்குபெறும் முக்கோண ஒருநாள் தொடருடன் ஆரம்பிக்கின்றது.

இலங்கை

Photo – Getty Images

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை ஒரு தடவை வெற்றி கொண்டு, உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இரண்டு தடவைகள் தெரிவாகிய கடந்த காலப் பதிவுகளை கொண்டிருக்கின்ற போதிலும், இலங்கை அணி இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தினை ஒரு கத்துக்குட்டியாகவே எதிர்கொள்கின்றது.

உலகக் கிண்ண வாய்ப்பை இழக்கும் நான்கு இலங்கை வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ….

இந்நிலையில் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள் குழாம், தற்போது நடைபெற்று வரும் சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரின் பின்னர் தீர்மானிக்கப்படும் என இலங்கை அணியின் தேர்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். எனவே, உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக அறிவிக்கப்படும் என கருதப்படுகிறது.  

இதேநேரம், உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி புதிய தலைவர் ஒருவரினால் வழிநடாத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.  

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தினை நோக்கும் போது அனுபவ வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், திமுத் கருணாரத்ன போன்றோர் விளையாடுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அண்மைக்காலமாக ஜொலிக்க தவறிவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் உபதலைவர் நிரோஷன் திக்வெல்ல, உபுல் தரங்க ஆகியோர் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் இடம்பிடிப்பது சந்தேகமான நிலையில் இருக்கின்றது.

இதேவேளை, இலங்கை அணி, உலகக் கிண்ணம் நடைபெறும் இங்கிலாந்தின் சூழ்நிலைகளை இசைவாக்கம் அடைந்துகொள்வதற்காக உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இங்கிலாந்தை ஒத்த காலநிலைகளில் ஸ்கொட்லாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<