என்ன தவறு நடந்தது? தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட பாபர் அசாம்

595

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான பாபர் அசாம், ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் தமது அணி தோல்வியடைந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் 23 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்ததோடு, ஆறாவது முறையாக ஆசியக் கிண்ணத் தொடரினை வென்ற அணியாகவும் சாதனை செய்தது.

>> WATCH – இறுதிப்போட்டியின் வெற்றியை சாதகமாக்கிய முக்கியமான காரணம் என்ன? – ஷானக!

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் இலங்கை அணியுடன் தமது தோல்விக்கான காரணம் தொடர்பில் விபரித்திருந்தார்.

பாபர் அசாம் போட்டியின் முதல் 8 ஓவர்களிலும் தாம் செலுத்திய ஆதிக்கத்தினை பானுக்க ராஜபக்ஷ வனிந்து ஹஸரங்க மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகிய இருவருடனும் இணைந்து பெற்ற இணைப்பாட்டங்கள் மூலம் இல்லாமல் செய்து விட்டதாக தெரிவித்தார்.

”இலங்கை கிரிக்கெட் அணி சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியமைக்கு வாழ்த்துகள். அவர்களுக்கு எதிராக முதல் எட்டு ஓவர்களிலும் நாங்கள் ஆதிக்கத்தினை வெளிப்படுத்தினோம். ஆனால் ராஜபக்ஷவின் இணைப்பாட்டங்கள் பிரமாதமாக இருந்தன. இது உண்மையான ஆடுகளமாக இருந்தததோடு, துபாய் நகரில் விளையாடியது எப்போதும் போல நல்லதாகவே இருந்தது.”

ஒரு கட்டத்தில் 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி பானுக்க ராஜபக்ஷ வனிந்து ஹஸரங்க மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோர் உடன் பெற்ற இணைப்பாட்டங்கள் (112 ஓட்டங்கள்) மூலமாக 6 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதேநேரம் தமது துடுப்பாட்டம் குறித்தும் கவலை வெளியிட்ட பாபர் அசாம், மோசமான தோல்விக்கு துடுப்பாட்டத்தோடு களத்தடுப்பும் காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

”எங்களது ஆளுமைக்கு ஏற்றாற்போல் நாங்கள் துடுப்பாடவில்லை. நாங்கள் சிறப்பாக ஆரம்பித்த போதும் 15 தொடக்கம் 20 வரையிலான ஓட்டங்களை மேலதிகமாக எதிரணிக்கு வாரி வழங்கியிருந்ததோடு (பந்துவீச்சினை) சிறப்பாகவும் நிறைவு செய்யவில்லை. சில நேர்மறையான விடயங்களும் கிடைத்திருந்தன. இறுதிப் போட்டியில் சிறு தவறுகள் குறைவாகவே இருந்தன. எங்களது களத்தடுப்பு எதிர்பார்த்தது போல் அமையவில்லை. துடுப்பாட்டத்திலும் சிறப்பான நிறைவினைப் பெற முடியவில்லை. ரிஸ்வான், நவாஸ் மற்றும் நஸீம் ஆகியோர் நேர்மறையாக இருக்கின்றனர். ஏற்ற இறக்கங்கள் இருந்த போதும் நாம் குறைவான தவறுகளை செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.”

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<