எமது தடுமாற்றம் இலங்கை அணிக்கு பாதிப்பாக அமையும் : சங்கக்கார

1966
What we wan't to do for SriLanka team - Sangakkara

இலங்கை கிரிக்கெட் அணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி சிரேஷ்ட வீரர் குமார் சங்கக்கார இங்கிலாந்தில் இருந்து Skype தொழில்நுட்பத்தின் ஊடாக சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார். இதன்போது அவர் சுமார் ஒரு மணி நேரம் வரை தனது கருத்துகளை வெளியிட்டார்.  

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் நேற்றைய தினத்திலேயே மாற்றங்களும் ஏற்பட்டன. அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமை பதிவியில் இருந்து விலகியதோடு உபுல் தரங்க ஒரு நாள் மற்றும் T-20 அணியின் தலைவராகவும், தினேஷ் சந்திமால் டெஸ்ட் அணித் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரில் இலங்கை அணி தோல்வி அடைந்த நிலையில் அடுத்து இடம்பெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாற்றங்களுடன் அணி எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

>> மெதிவ்சின் பொறுப்பு தரங்க மற்றும் சந்திமாலுக்கு பிரித்து வழங்கப்பட்டது

”ஜிம்பாப்வே அணியிடம் நாம் தோற்றது துரதிஷ்டவசமானது. எனினும் அடுத்த உலகக் கிண்ணத்திற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. தடுமாறுவது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மோசமான வேலை.  அவர்கள் மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் திறமையில் குறைவான நிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்று சங்கக்கார குறிப்பிட்டார்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் வீரர்களுக்கு திறமையை காட்ட முடியாமல் போவதாக முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில், ஓர் இடத்தில் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போன வீரராக கருதப்படும் உபுல் தரங்க தொடர்பில் சங்கக்கார சாதகமாகவே கருத்துகளை வெளியிட்டார்.

”தரங்க அணியில் இணைந்திருப்பது அதிர்ஷ்டமானது. நானும் கூட 9 ஆவது துடுப்பாட்ட வரிசை வரை துடுப்பெடுத்தாடி இருக்கிறேன். அணிக்கு வரும்போது ஆரம்பத்தில் உங்களுக்கு உங்களுடைய இடம் கிடைக்கும் என்று கூற முடியாது. உங்களுக்கு கிடைக்கும் இடத்தில் விளையாட வேண்டி இருக்கும். திறமையை காட்டிய பின்   உங்களுக்கு தகுதியான இடத்தை முதலில் பார்க்க வேண்டும். நான் வலுக்கட்டாயமாக 3ஆவது இடத்தில் துடுப்பெடுத்தாடவில்லை” என்று கருத்து வெளியிட்டார்.

>> ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் MCC அணிக்காக குமார் சங்கக்கார

புதிய மாற்றங்களுடனான இலங்கை அணிக்கு எதிர்வரும் இந்தியாவுக்கு எதிரான தொடர் இலகுவானதாக இருக்காது என்பது பலரதும் நம்பிக்கையாகும். இது பற்றி சங்கக்காரவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

”இந்தியாவுடனான தொடர் கடினமான ஒன்றாக இருக்கும். நாம் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தை பற்றி நினைப்பதாக இருந்தால் அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும். இந்திய அணி விளையாடுவது எவ்வாறு என்று நாம் உபாயத்துடன் பார்க்க வேண்டும். அதற்கு குறுகிய வழிகள் இல்லை. தியாகம், நல்ல திட்டம் மற்றும் தோல்வியில் தடுமாறாமல் இருப்பது போன்ற விடயங்களுடன் நீண்ட கால வெற்றிக்கு உழைக்க வேண்டும்” என்று சங்கக்கார வலியுறுத்தினார்.

கிரிக்கெட்டில் ஒரு அணி தொடர் தோல்விகளை சந்திக்கும்பொழுது அணித் தலைவர், வீரர்கள், முகாமைத்துவம் மற்றும் தேர்வுக்குழு அங்கத்தவர்கள் போன்ற தரப்பினர் விமர்சனங்களுக்கு உள்ளாகுவது சாதாரண விடயம். எனினும், இலங்கை அணியின் தற்போதைய தொடர் தோல்விகளுக்கு குறித்த தரப்பினர் அன்றி மேலும் பல தரப்பினர் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விடயம் குறித்தும் குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டார். அவை தொடர்பிலான விடயங்களையும் ThePapare.com ஊடாக எதிர்பாருங்கள்.