துடுப்பாட்டத்தில் மஹேல செதுக்கிய சிற்பங்கள்

1317

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை கடந்த வீரர்கள் பலர் உள்ளனர். இலங்கை அணிக்காக ஆடிய வீரர்களுள் சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, டிலகரட்ன டில்ஷான், மஹேல ஜயவர்தன என பலர் 10,000 ஓட்டங்களை கடந்துள்ளனர்.

எனினும், 12,000 ஓட்டங்களை கடந்த வீரர்கள் ஐந்து பேர் மாத்திரம் தான். அந்த ஐந்து பேர்களுள் 150 எனும் தனி நபர் ஓட்ட எண்ணிக்கையை (150+ score in an innings) பெறாமல் 12,000 ஓட்டங்களை கடந்த ஒரே ஒரு வீரர் மஹேல ஜெயவர்தன.

சரித்திரத் தலைவன் மஹேல ஜயவர்தன

டெஸ்ட் போட்டிகளில் ஏழு இரட்டைச் சதங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு வீரர், ஒருநாள் சர்வதேச போட்டிகளில்  150+ ஓட்டங்களை கடக்கவில்லை என்பது சற்று ஆச்சரியமான விடயம். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் மஹேல ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர். கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக என்றும் நிலைத்திருப்பார் மஹேல. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மஹேல 12,000 ஓட்டங்களை கடந்திருந்தாலும் அவர் மீது சில விமர்சனங்களுண்டு. 

நாம் இங்கு, சாதனைகள் இல்லாமல் சரித்திரத்தில் மஹேல தனது துடுப்பு மட்டையினால்ன செதுக்கிய சில பதிவுகளைப் பார்ப்போம். 

டெஸ்ட், ஒருநாள் சர்வதேச போட்டி, T20 போட்டி என மூன்று வகையான கிரிகெட்டிலும் சதம் கடந்த 14 வீரர்களுள் மஹேல ஜெயவர்தனவும் ஒருவர். இலங்கைக்காக ஆடி மூன்று வகையான கிரிகெட்டிலும் சதங்களை கடந்த முதல் வீரர் எனும் கௌரவமும் மஹேலவிற்கு உண்டு. எனினும், இவ்வாறான சிறப்புகளை கொண்ட மஹேல தனது பெயரில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வெறுமனே 19 சதங்களையே கொண்டுள்ளார். 

அதிகூடிய போட்டிகளில் இலங்கைக்கு ஆடிய வீரர் என்ற வகையில் இது மிகவும் குறைவான ஒரு தொகையே ஆகும். உலக அரங்கில் அதிகூடிய ஒருநாள் சர்வதேச  போட்டிகளை ஆடிய வீரர்களுள் சச்சினிற்கு பிறகு மஹேல இரண்டாமிடத்தில் இருக்கிறார். 418 இன்னிங்ஸ்களில் துடுப்பாடிய மஹேலவால் (மஹேல 448 போட்டிகளில் ஆடியிருந்தாலும் துடுபெடுத்தாடிய இன்னிங்ஸ்கள் 418) 19 சதங்களையே கடக்க முடிந்தது. மறுபுறம் 400 இற்கும் அதிகமான போட்டிகளில் ஆடிய மூன்று வீரர்களும் மஹேலவை விட அதிகமான சதங்களை கொண்டுள்ளனர் . 

இதுவரை ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்களை கடந்த வீரர்களின் பட்டியலில் மஹேல 16வது இடத்தில் இருக்கிறார். 19 அல்லது அதற்கு அதிகமான சதங்களை கடந்த வீரர்களுள் அதிகூடிய முறை 50+ ஓட்டங்களை  கடந்த (சதங்கள், அரைசதங்கள் என அனைத்தையும் கணக்கில் கொண்டால்) வீரர்களுள் மஹேல ஆறாவது இடத்தில் இருக்கிறார். 77 அரைசதங்கள், 19 சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 96 முறை ஐம்பதிற்கும் அதிகமான (50+) ஓட்டங்களை பெற்றார். மஹேலவின் அரை சதத்திலிருந்து சதத்திற்கான மாற்றவீதம் (Conversion rate) 19.79 ஆகும்.   

400 இற்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளை ஆடிய சச்சின் தனது மொத்த இன்னிங்ஸ்களில்  53.5 வீதமான இன்னிங்ஸில் 30இற்கு அதிகமான ஓட்டங்களை கடந்தார் . இதேபோல் சங்கா 52.5 மற்றும் மஹேல 45.1 எனும் வீதத்தில் 30 இற்கு அதிகமான ஓட்டங்களை கடந்தனர். மஹேல ஏராளமான போட்டிகளில் பங்களிப்பு செய்யவில்லை என்பதை பொய் என இது நிரூபிக்கிறது.  

மொத்தமாக 171 முறை 30+ ஓட்டங்களை கடந்த மஹேலவினால்  அவற்றுள் 96 இனையே 50+ ஓட்டங்காக மாற்ற முடிந்து. இந்த மாற்றவீதமானது 45.03 ஆகும். 400 இன்னிங்ஸ்களை ஆடிய வீரர்களுள் சங்கா மாத்திரமே மஹேலவை விட அதிகமான முறை 30+ ஓட்டங்களை 50+ ஓட்டங்களாக  மாற்றியிருக்கிறார். சச்சின் மற்றும் சனத் முறையே 43.6, 43.5 எனும் மாற்ற வீதத்தை கொண்டுள்ளனர். ஆக இதன்படி மஹேல ஒரு இன்னிங்ஸில் 30 இற்கு அதிகமான ஓட்டங்களை கடக்கும்வரை சச்சின், சங்கா போன்று சிறப்பாகவே ஆடியிருக்கிறார்.  

2011 உலகக் கிண்ண நாணய சுழற்சியில் ஏற்பட்ட குழப்பம்

மஹேலவிடம் இருந்த பிரச்சினை 50 ஓட்டங்களை சதங்களாக மாற்றாமையே. இதற்கு பல காரணங்கள் இருக்க கூடும். மஹேல எப்போதும் ஒரு Aggressive ஆன, எதிரணியை அடித்தாடி attack செய்யும் மனோநிலையையே கொண்டிருப்பார்.  

மைதானம், அதன் தன்மை, ஆடுகளத்தின் தன்மை, எதிரணி பந்துவீச்சாளர்களின் பலம் என எதை பற்றியும் மஹேல கவலை கொள்வதில்லை. எவ்வாறான ஓர் போட்டியாக, எதிரணியாக இருந்தாலும் மஹேல அடித்தாடவே முயற்சிப்பார். எதிரணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொள்ள முயற்சிப்பார்.” இவ்வாறு சங்கா மஹேலவின் Aggressive மனநிலையை விபரித்தார். இந்த பண்பு தான் அவரை சிறந்த அணித்தலைவர்களுள் ஒருவராகவும் மாற்றியது. இதே மனோநிலையை தான் மஹேல துடுப்பாட்டத்திலும் காட்டினார். இதுவும் இவ்வாறான ஒரு பின்னடைவுக்கு காரணமாக இருக்கலாம். 

மஹேல தான் ஆடிய பல ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணியின் வெற்றிக்காக பங்களிப்பை வழங்கியிருக்கிறார். அவர் பெற்ற 19 சதங்களுள் 16 சதங்கள் இலங்கை அணி போட்டியை வெற்றியீட்டிய போது பெறப்பட்டவை  அல்லது மஹேல சதங்களை பெற்ற 16 போட்டிகளில் இலங்கை அணி வெற்றியீட்டியிருக்கிறது என்றும் கூறலாம்.  இந்த 19 சதங்களுள் 15 சதங்கள் இலங்கைக்கு வெளியே பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.  

இற்கு அதிகமான ஒருநாள் சர்வதேச  சதங்களை பெற்ற வீரர்களுள் வெற்றியீட்டிய போட்டிகளில் பெற்ற சதங்களிற்கும் மொத்த சதங்களிற்கும் இடையிலான  விகிதத்தின்படி (Percentage of Centuries in winning cause) மஹேல 84 சதவீதத்துடன் நான்காமிடத்தில் உள்ளார். மஹேல மிக முக்கியமான தருணங்களில் ஆடியே இச்சதங்களை பெற்றார். அணியில் ஏனைய வீரர்கள் பெரிதளவில் பங்களிப்பு செய்யாமல்  அரங்கு திரும்பிய பல சந்தர்ப்பங்களில் மஹேல நின்று ஆடிய போட்டிகள் ஏராளம் உள்ளன. 50 இற்கும் அதிகமான ஓட்டங்களை கடந்த 96 சந்தர்ப்பங்களும் அவ்வாறானவையே. அணி இக்கட்டான நிலைமைகளில் ஆடிய பல இன்னிங்ஸ்களுள் சில இன்னிங்ஸ்கள் அவரிற்கு “போட்டியின் சிறந்த வீரர் ” ( Man of the match award) விருதினையும் பெற்றுதந்த்து. 

மஹேல பெற்ற 19 சதங்களுள் நான்கு சதங்கள் உலகக் கிண்ணத்தில் பெறப்பட்டவை. அரையிறுதி ஆட்டம் இறுதி ஆட்டம் என இரண்டிலும் சதங்களை கடந்த ஒரே வீரர் என்ற பெருமையும் மஹேலவிற்கு உண்டு. அதிகளவான சதங்களை கடக்கவில்லை என்றபோதிலும் மஹேல பெற்ற குறிப்பிட்டளவான சதங்கள் பல சிறப்பம்சங்களை கொண்டவை. 

சதங்களின் எண்ணிக்கை ஒருபுரம் வைத்துவிட்டு மஹேல பெற்ற 50+ ஓட்டங்களை கருத்திற்கொற்வோம். மஹேல ஆடிய 418 இன்னிங்ஸ்களுள் 96 இன்னிங்ஸ்களில் 50+ ஓட்டங்களை கடந்தார். இந்த 50+ ஓட்டங்களை கடந்த 60 (63%) போட்டிகளில் இலங்கை அணி வெற்றியீற்றியது.  50+ ஓட்டங்களை 49 முறை இலங்கைக்கு வெளியே பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மஹேலவிற்கு மிகவும் விருப்பமான அணி இந்தியா தான். 21 ஒரு முறை 50+ ஓட்டங்களை இந்தியாவுடன் பெற்றார் மஹேல. இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 11 முறை 50+ ஓட்டங்களை கடந்திருக்கிறார்.   

இலங்கை அணி பரிசளித்த மறக்கமுடியாத டெஸ்ட் வெற்றிகள்

டெஸ்ட் போட்டிகளை போன்றே ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் இணைப்பாட்டங்களை தோற்றுவிப்பதில் கைதேர்ந்து விளங்கினார் மஹேல. சங்கா – மஹேல ஜோடி  5,992 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருக்கிறது. இது கிரிகெட் வரலாற்றில் அதிகூடிய இணைப்பாட்டங்களை பெற்ற இரண்டாவது  ஜோடியாகும். சங்கா, அத்தபத்து, டில்ஷான் மற்றும் தரங்க ஆகியோருடன் இணைந்து 14,277 ஓட்டங்களை இணைப்பாட்டமாக இலங்கை அணிக்கு பெற்று கொடுத்துள்ளார் மஹேல. இவ்விணைப்பாட்டங்கள் வெறுமனே ஓட்டங்களல்ல பல முறை இலங்கை அணியை கரைசேர்க்க உதவிய துடுப்புகள். 

20 உலக கிண்ண போட்டிகளில்  அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர் மஹேல ஜெயவர்தன தான். 1,016 ஓட்டங்களை 39.07 எனும் சராசரியில் அடைந்துள்ளார். டி20 உலகக் கிண்ணத்தில் அதிகூடிய இணைப்பாட்ட ஓட்ட சாதனையும் மஹேலவின் கை வசம்தான். இரண்டாம் விக்கெட்டிற்காக 166 ஓட்ட இணைப்பாட்டத்தை (Highest for any wicket) சங்காவுடன் சேர்த்து பெற்றிருக்கிறார் . 

மஹேல டெஸ்ட்டில் ஒரு சிறந்த துடுப்பா வீரர். அதேபோன்று தான் ர்வதேச ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிகெட்டினையும் வைத்து பார்த்தால் மஹேல உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேபோல் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்கு மிகச்சிறந்த சேவையாற்றியும் இருக்கிறார் என்றே கூற வேண்டும்.  

மிஹேல ஆடிய 448 ஒருநாள் சர்வதேச போட்டிகளுள் 241 போட்டிகளை இலங்கை அணி வெற்றிகொண்டது. உலக கிரிகெட் அரங்கில் அதிக வெற்றிகளுக்கு பங்களிப்பு செய்த வீரர்களுள் ரிக்கி பொண்டிங்கிற்கு பிறகு இரண்டாமிடத்தில் உள்ளார் மஹேல. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<