இலங்கை அணியின் களத்தடுப்புக்கு என்ன நடந்தது?

1660

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், இலங்கை அதி சிறப்பான களத்தடுப்பைக் (Fielding) கொண்ட அணியாக ஆசியாவில் திகழ்ந்தது. உலக அளவில் இலங்கை அணியின்  களத்தடுப்பு ஆற்றல் தென் ஆபிரிக்க,  அவுஸ்திரேலிய அணிகளுக்கு சமமாகவே கருதப்பட்டது. அப்போதைய  இலங்கை அணி வீரர்களான ரொஷான் மஹானாம, சனத் ஜயசூரிய, உபுல் சந்தன மற்றும் முத்தையா முரளிதரன்  போன்றவர்கள் ஹெர்சல் கிப்ஸ், ரிக்கி பொன்டிங் போன்ற சிறப்பான வீரர்களுக்கு களத்தடுப்பில் நிகராக இருந்தனர். மறுமுனையில் தென்னாபிரிக்க அணியின் ஜோன்டி ரோட்ஸ்ஸின் களத்தடுப்பு ஆற்றல் அவரை ஒரு வேற்றுக் கிரகவாசி எனக் கருதும் அளவுக்கு சிறப்பானதாக இருந்தது. எனினும், நாம் இங்கே ஜோன்டி ரோட்ஸ் பற்றி பார்க்கப் போவதில்லை.

1997 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் சம்பியன்களான இலங்கை அணி பற்றி பிரபல்யமான தொலைக்காட்சி வர்ணனையாளரான டோனி கிரேக், “இந்த இலங்கையர்கள் மிக, மிக நன்றாக விளையாடுகின்றனர். இவர்கள் எல்லா பிடியெடுப்புகளையும் பிடியெடுக்கின்றனர்“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

1997 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் விளையாடிய இலங்கை அணி 5 அற்புதமான பிடியெடுப்புக்களை எடுத்திருந்தது. குறித்த போட்டியில் இந்திய அணித் தலைவர் மொஹமட் அசாருதினின் பிடியெடுப்புக்காக முரளிதரன் லோங் ஓன் திசையில் டைவ் அடித்து எடுத்த முயற்சி அனைவராலும் பாரட்டப்பட்டது.

கிரிக்கெட் போட்டி ஒன்றில் அணியொன்று வெற்றிபெறுவதற்கான அரைவாசி (50%) வாய்ப்புக்களை ஏற்படுத்தி தருவதில் களத்தடுப்புத்துறையும் பங்களிப்புக்களை வழங்குகின்றது. குறிப்பிட்டுச் சொல்லப் போனால் முக்கிய தருணங்களில் சிறந்த களத்தடுப்பு மூலம் இடம்பெறும் ரன் அவுட் ஆட்டமிழப்புக்கள் போட்டியின் போக்கையே மாற்றிவிடுகின்றது. இது ஒரு புறமிருக்க கடந்த காலங்களில் ஓரளவு சுமாரான பந்துவீச்சையே காட்டிய இலங்கை அணி தமது உயர்தரமான களத்தடுப்பு மூலம் எதிரணிக்கு மேலதிக ஓட்டங்களை (20 தொடக்கம் 30 வரையில்) விட்டுக்கொடுக்காமல் கிரிக்கெட் உலகில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வந்தது.   

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் ஆரம்பம் எப்படி இருந்தது?

இப்படியாகக் காணப்பட்ட இலங்கை அணியின் உயர்தர களத்தடுப்புக்கு தற்போது என்ன நடந்து விட்டது? இறுதியாக இலங்கை அணியில் எந்த களத்தடுப்பு வீரர் (Fielder) விக்கெட்டுகளை இலக்கு வைத்து ரன் அவுட் ஆட்டமிழப்பு ஒன்றினை செய்திருக்கின்றார்? இரண்டு வருடங்களுக்கு முன்னர் மூத்த வீரரான திலகரத்ன டில்ஷான் மாத்திரமே சிறந்த களத்தடுப்பாளராக இருந்தது இலங்கை அணிக்கு வரப்போகின்ற மிகப் பெரிய பிரச்சினையை அப்போதே உணர்த்தியது. டில்ஷானின் காலத்தில் பொதுவாக இளம் வீரர்கள் களத்தடுப்பில் சோபித்த போதிலும், டில்ஷான் தனது களத்தடுப்பு இடமான கவர் திசையில் (Cover Point) இருந்து தொடர்ந்தும் களத்தடுப்பாளராக செயற்பட்டு வந்தார். குறிப்பிட்ட களத்தடுப்பு நிலை (கவர் திசை) 38 வயதான டில்ஷானுக்கு கொடுக்கப்பட வேண்டியது அல்ல. அது ஒரு இளம் வீரருக்கு தரப்பட வேண்டிய களத்தடுப்பு நிலையாகும். டில்ஷான் இருந்த போது, அவரை விட மிகவும் இளமையான பலர் இலங்கை அணியில் இருந்த போதிலும் டில்ஷானின் களத்தடுப்பு நிலைக்கு யாரும் பொருத்தமாக காணப்படவில்லை.  

இலங்கை அணி உலகில் மிக மோசமான களத்தடுப்பைக் காட்டுகின்றது எனக் கூறும் போது, எமது கிரிக்கெட்டை நிர்வாகம் செய்பவர்களுக்கு கோபம் வருகின்றது. ஏனெனில், எம்மைவிட பின்தங்கிய நிலையில் இருக்கும் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் போன்ற கிரிக்கெட் அணிகளின் வீரர்கள் சிறந்த களத்தடுப்பினைக் காட்டுகின்றனர். எமது அணியை எமது மண்ணில் வைத்தே ஜிம்பாப்வே கடந்த ஆண்டு ஒரு நாள் தொடரில் தோற்கடித்திருந்தது. நல்ல காலம் எங்களுக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் விரைவில் இரு தரப்புத் தொடர்கள் எதுவும் ஒழுங்கு செய்யப்படவில்லை. ஆப்கானிஸ்தான் இரு தரப்புத் தொடர் பற்றிய கதை தேவை இல்லை எனினும் இங்கு ஒரு உதாரணத்திற்கு குறிப்பிட்டுக் காட்டப்படுகின்றது.

அதிக விக்கெட்காப்பாளர்களை எமது அணி வைத்திருப்பதே சிறந்த களத்தடுப்பை வெளிக்காட்ட தடையாக இருக்கின்றது என அடிக்கடி  சிலர் கூறுகின்றனர். நாம் இதையெல்லாம் விட்டுவிட்டு, எமது அண்மைய மோசமான தோல்விகளுக்கு காரணம் எதுவோ? அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பின்னடைவாக இருக்கின்ற அந்தப் பகுதியை விருத்தி செய்ய முனைப்புக் கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டில் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை உதாரணமாக எடுங்கள். குறித்த தொடரின் காலிறுதி ஆட்டம் போன்று அமைந்திருந்த போட்டி ஒன்றில் மிட் ஒன் (Mid on) திசையில் களத்தடுப்பாளராக இருந்த திசர பெரேரா, பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் சர்பராஸ் அஹ்மட்டின் பிடியெடுப்பினை தவறவிட்ட காரணத்தினால், இலங்கை அணி அத்தொடரிலிருந்தே வெளியேறியிருந்தது. குறிப்பிட்ட தொடரின் பாகிஸ்தான் அணி சம்பியன் பட்டம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த சர்பராஸ் அஹ்மட் “அந்த பிடியெடுப்பை நானும் எனது வாழ்நாளில் மறக்க மாட்டேன். திசரவும் அவரது வாழ்வில் அதனை மறக்க மாட்டார்“  எனக் கூறியிருந்தார்.

சம்பியன்ஸ் கிண்ணம் நடைபெற மூன்று மாதங்களின் முன்னர், P. சரவணமுத்து மைதானத்தில் பங்களாதேஷ் அணியுடன் இலங்கை மோதியிருந்த டெஸ்ட் போட்டியின் போது உபுல் தரங்க பிடியெடுப்பு ஒன்றை தவறவிட்டிருந்தார். இந்த பிடியெடுப்பை கொடுக்கும் போது இரு இலக்க ஓட்டங்களைக் கூட எட்டாத சகீப் அல் ஹஸன் போட்டியில் சதம் கடந்து இலங்கை அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணியின் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்ய முக்கிய  காரணமாக மாறியிருந்தார்.

அபார சதத்தின் மூலம் காலி அணிக்கு வெற்றி தேடித்தந்த தரங்க

இவற்றை வைத்துப் பார்க்கும் போது, களத்தடுப்பாளர்கள் சிறப்பாக இல்லாத நிலையில் எமது பந்துவீச்சாளர்கள் அடுத்த வாய்ப்புக்களை உருவாக்கி தருவதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்பதையே உணர முடிகின்றது.

கடந்த ஆண்டில் இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் காலியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் அசேல குணரத்ன காயத்துக்கு உள்ளாகியிருந்தார். இதன் போது, இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக இருந்த சமிந்த வாசின் சிபாரிசில், புனித அலோசியஸ் கல்லூரி வீரரான அஷேன் பண்டார இலங்கை அணியின் 12 ஆவது வீரராக மைதானத்திற்குள் அனுப்பப்பட்டிருந்தார்.  18 வயதேயான பண்டார தனக்கு கிடைத்த வாய்ப்பு மூலம் மிகச் சிறந்த முறையில் களத்தடுப்பை வெளிப்படுத்தி உலகின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்திருந்தார்.

குறித்த போட்டியில் இலங்கை அணி, 304 ஓட்டங்களால் தோல்வியுற்ற போதிலும் பண்டாரவின் களத்தடுப்பு இலங்கை அணிக்கு சாதகமான விடயங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டிருந்தது.

அப்போது இலங்கை அணியின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக கடமைபுரிந்திருந்த நிக் போத்தஸ், “நீங்கள் அஷேன் பண்டாரவின் பாடசாலை நண்பர்களிடம் பேசிப்பார்த்தீர்கள் என்றால் அவர்கள் அஷேன் பாடசாலையில் இடைவேளை நேரத்தில், டென்னிஸ் பந்து ஒன்றை எறிந்து அதனை துரத்திச் சென்று பிடிக்கும் வேலையை அடிக்கடி செய்கின்றவர் எனக் கூறுவார்கள். ஒரு களத்தடுப்பாளராக மாற அஷேன் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது. அதனாலேயே அவர் ஒரு சிறந்த களத்தடுப்பாளராக இருக்கின்றார்“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் துரதிஷ்டவசமாக மேலே குறிப்பிட்ட மாதிரி கொஞ்ச விடயங்களையே அஷேன் பண்டார பற்றி எமக்கு அறியக்கூடியதாக இருந்தது. எமது களத்தடுப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய அஷேனுக்கு, இப்போது நடந்து கொண்டிருக்கும் மாகாண ஒரு நாள் தொடரில் வாய்ப்பு தந்து அவருக்கு இன்னும் அனுபவத்தை அதிகரித்துக் கொடுத்திருக்கலாம்.

உபுல் சந்தனவை எடுத்துப் பாருங்கள் அவர் இலங்கை அணி உருவாக்கிய மிகச் சிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவராக இருக்கின்றார். இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியின் களத்தடுப்பை முன்னேற்ற சந்தன மிகவும் நல்ல முறையில் உழைத்திருந்தார். சந்தனவின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள இலங்கையின் சிரேஷ்ட கிரிக்கெட் அணிக்கு ஏன் முடியாமல் போனதோ தெரியவில்லை. எமது சிந்தனைக்கும் இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை அறிய முடியாது இருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை அணியின் வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபடும் போது அவதானித்தீர்கள் என்றால், அவர்கள் கால்பந்து விளையாடுவதுக்கு கொடுக்கும் நேரத்தை விட களத்தடுப்பு பயிற்சிகளுக்காக குறைவான நேரத்தையே செலவிடுவர். இன்னும், இலங்கை அணியில் உள்ள சில சிரேஷ்ட வீரர்களுக்கு களத்தடுப்பு பயிற்சிகளில் ஈடுபடுவது ஏதோ ஒரு தொற்று நோய்க்கு ஆளாகும் விடயம் போன்று இருப்பதால் அவர்கள் களத்தடுப்பு பயிற்சிகளை தவிர்த்துவிடுகின்றனர்.

அடுத்த ஆண்டிற்கான உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி மிளிர இலங்கை அணியின் முகாமைத்துவக் குழு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கட் வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதை காணக்கூடியதாக உள்ளது. நிச்சயமாக இது அணியை தரம் உயர்த்தக் கூடிய ஒரு முயற்சியே. எவ்வாறாயினும் களத்தடுப்பு துறையை தரமுயர்த்தவும் சில சிறிய வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கின்றது. குறைந்தபட்சமாக உபுல் சந்தனவை இலங்கை அணியின் களத்தடுப்புத்துறைக்கு பொறுப்பாக நியமிக்கலாம்.

இன்றும் கூட ஓவல் மைதானத்தில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அலெக் ஸ்டுவார்ட்டை, உபுல் சந்தன ரன் அவுட் செய்தது ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத நினைவாகவே இருக்கிறது. இலங்கை அணிக்கு இரண்டு தசாப்தங்களின் முன்னர் வரலாற்றில் குறிப்பிடும் படியாக அமைந்த அந்த டெஸ்ட் போட்டியில் உபுல் சந்தன ஸ்டுவார்ட்டை ஆட்டமிழக்க செய்யாவிட்டால் முரளிக்கு ஒரு இன்னிங்சில் கிடைத்திருக்க வேண்டிய 10 விக்கெட்டுக்களையோ அல்லது ஸ்டுவார்ட் தனியொருவராக இங்கிலாந்து அணியை  காப்பாற்றுவதையோ எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இவற்றை விட சிறப்பான முடிவே கிடைத்திருந்தது. உபுல் சந்தன அந்த போட்டியில் 12 ஆவது வீரராகவே களமிறங்கியிருந்தார். தற்போதைய இலங்கை அணி அர்ஜுன ரணதுங்கவின் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை இரவல் வாங்கியிருந்தால் உபுல் சந்தன போன்று அஷேன் பண்டாரவை 12 ஆவது நபராக தேவைப்படும் போதெல்லாம் எடுக்க முடியும். சந்தன போன்று அஷேன் பண்டாரவும் ஒரு மணிக்கட்டு சுழல் வீரர் என்பது மற்றுமொரு சிறப்பான விடயம்.