கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணி சார்பாக பல்வேறுபட்ட திறமைகள் மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற சில வீரர்கள ஒருசில போட்டிகளில் ஏற்பட்ட சரிவுகளின் காரணமாக மீண்டும் அணிக்கு தெரிவு செய்யப்படாமல் உள்ளனர்.
இவ்வாறான ஒரு நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இருந்து இலங்கை அணி வெளியேறி நாடு திரும்பியுள்ள இத்தருவாயில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குறித்து பல தரப்பினரும் பலவகையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மீண்டும் அணியுடன் இணைந்துகொள்ள எதிர்பார்த்துள்ள சில வீரர்கள் குறித்த ஒரு பார்வையை நாம் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
1. லஹிறு திரிமான்ன
குமார் சங்கக்காரவை போன்றே அழகிய கவர் டிரைவ் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் லஹிறு திரிமான்ன, எதிர்காலத்தில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை வகிக்கக்கூடிய எதிர்பார்ப்பில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், தொடர்ச்சியான சரிவுகளினால் மூன்று வகையான கிரிக்கெட் போட்டி அணிகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
நான் பழைய மாலிங்க அல்ல : வெளிப்படையாகக் கதைத்த லசித் மாலிங்க
இலங்கை அணியின் மத்தியகள துடுப்பாட்ட வரிசையை இக்கட்டான சூழ்நிலைகளில் வலுப்படுத்திய இவர், இரண்டு ஆண்டுகளுக்குள் நான்கு சதங்கள் மற்றும் பதினாறு அரைச் சதங்களைப் பதிவு செய்திருந்தார். எனினும், கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெறும் 17 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளிலும் பிரகாசிக்கத் தவறியதன் காரணமாக அணியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
கடந்த சில காலமாக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் திரிமான்ன இம்முறை உள்ளூர் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் அணியில் மீண்டும் இடம் பிடிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.
2. ஜீவன் மென்டிஸ்
தற்பொழுது 34 வயதானாலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்தும் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார் ஜீவன் மென்டிஸ். எனினும், அவரது சர்வதேச ஒருநாள் போட்டிகளின் பெறுபேறுகள் சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 54 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றியுள்ள அவர், ஒரே ஒரு அரைச் சதம் மாத்திரமே பெற்றுள்ளார்.
எனினும், பின்கள வரிசையை பலப்படுத்திய அவர் தனது அதிரடித் துடுப்பாட்டம் மூலம் இலங்கை அணியை பல போட்டிகளில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதேநேரம், 54 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தாலும் அந்த சமயத்தில் இலங்கை அணியின் மத்திய மற்றும் பின் வரிசை துடுப்பாட்டத்தை வலுப்படுத்தவே அவரது பங்களிப்பு எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவரது தொடர்ச்சியான சரிவுகளினால் அச்சமயத்தில் திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்த சீகுகே பிரசன்னவுக்கு இலங்கை அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இலங்கை அணியின் தோல்வி, அடுத்த கட்டம் குறித்த மெதிவ்சின் கருத்து
இவர் இறுதியாக 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அணி சார்பாக களமிறங்கியிருந்தார். அதன் பின்னர், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இங்கிலாந்து உள்ளூர் பருவகால போட்டிகளுக்காக டெர்பிஷையர் அணி சார்பாக 2017ஆம் ஆண்டு வரை வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
குறித்த போட்டிகளில் பங்குபற்றி வரும் ஜீவன் மென்டிஸ் ஸ்பெக்சேவர்ஸ் உள்ளூர் சம்பியன்ஷிப் பிரிவு இரண்டிற்கான (டிவிஷன் 2) பருவகால போட்டிகளில் இதுவரை நான்கு போட்டிகளில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகள் பெற்ற வீரர்களில் 9ஆவது இடத்தில் உள்ளார்.
3. அகில தனஞ்சய
தன்னுடைய எதிர்வு கூற முடியாத பந்து வீச்சின் காரணமாக 2012ஆம் ஆண்டு T-20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட இவர், குறித்த தெரிவின் காரணமாக விமர்சனங்களுக்கும் உள்ளான ஒரு வீரர். எவ்விதமான முதல் தரப் போட்டிகளிலும் பங்குபற்றாத நிலையில் நேரடியாக சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்றுக்கு தெரிவு செய்யப்பட்டமையே அவர் மீதான விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்தது.
எந்த வகையான ஒப் பிரேக், லேக் பிரேக் பந்து வீச்சாளர் என்று கூறுவதற்குக்கூட முடியாத வகையில், கூக்லீஸ், ”கரம்“ பந்துகள் மட்டுமல்லாது தூஸ்ரா போன்ற பலவிதமான பந்து வீச்சுகளை தன்வசம் கொண்டிருந்தார். பயிற்சி நேரத்தின் போது அப்போதைய அணித் தலைவர் மஹேல ஜெயவர்தனவினால் ஈர்க்கப்பட்ட நிலையில் நேரடியாக இலங்கை தேசிய அணிக்கு தனஞ்சய பரிந்துரைக்கப்பட்டார்.
அந்த வகையில் அவர் 2012ஆம் ஆண்டுக்கான T-20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில், போட்டிகள் ஆரம்பிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக உள்ளூர் முதல் தரப் போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்தினார்.
குறித்த T-20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி 36 ஓட்டங்களால் தோல்வியுற்ற இறுதிப் போட்டி உள்ளடங்கலாக அனைத்து ஆட்டங்களிலும் அதிரடியாக பந்து வீசிய அகில தனஞ்சய அணிக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கினார். எனினும். குறித்த ஐந்து T-20 போட்டிகள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் போட்டிக்குப் பின்னர் அவருக்கு எவ்விதமான வாய்ப்புகளும் அணியில் வழங்கப்படவில்லை. எனினும், அண்மைய காலங்களில் உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருவதால் இம்முறை வாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.
இலங்கை – பாகிஸ்தான் இடையிலான போட்டியின் புகைப்படங்கள்
4. கித்ருவான் விதானகே
இயற்கையிலேயே அதிரடியாக துடுப்பாடும் கித்ருவான் விதானகே, மத்தியகள துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தியவர். இவர் 2013ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் துடுப்பாடுவதற்காக காத்திருந்த அவருக்கு போட்டியின் ஐந்தாம் நாளிலேயே வாய்ப்பு கிடைத்தது. நான்காவது துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்பட்ட கித்ருவான் விதானகே ஏமாற்றம் தராமல் துடுப்பாட்டத்துக்கு கடினமான அந்த களத்தில் 59 பந்துகளில் 70 ஓட்டங்களை விளாசி போட்டியை சமப்படுத்த உதவினார்.
தொடர்ந்து நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான அடுத்த டெஸ்ட் போட்டியில், அவர் தனது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்தார். அது போன்றே, ஒருநாள் போட்டிகளிலும் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தாலும், குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் தொடர்ந்து அவர் வெளிப்படுத்திய மோசமான திறமைகள் காரணமாக தெரிவுக் குழுவினால் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவ்வாறான ஒரு நிலையில், அண்மையில் முடிவுற்ற உள்ளூர் முதல் தரப் போட்டிகளில் 15 போட்டிகளில் பங்குபற்றி 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார். அந்த வகையில், இலங்கை அணிக்குள் மீண்டும் தெரிவாவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற மற்றொரு வீரராக இவர் உள்ளார்.
5. அஜந்த மென்டிஸ்
உலகிலுள்ள அனைத்துத் துடுப்பாட்ட வீரர்களுக்கும் சவால் விடுத்த பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ். இலங்கை அணியின் அடுத்த முத்தையா முரளிதரன் என்று கிரிக்கெட் ரசிகர்களினால் நோக்கப்பட்டவர்.
ஓப் ப்ரேக், டொப் ஸ்பின், ”கரம்” பந்து வீச்சு மற்றும் கூக்லீஸ் போன்ற பந்து வீச்சுக்களால் எதிரணியை கலங்கடித்திருந்தார். அத்துடன் தான் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டித் தொடரிலேயே 26 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார். அத்துடன் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சம்பியன்ஸ் கிண்ணத்தில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பிரதானமானவராக இருந்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஜிம்பாப்வே அணியுடனான போட்டியின் போது காயம் மற்றும் மோசமான திறமைகளை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இவ்வாறான ஒரு நிலையில், தற்பொழுது இலங்கை அணியில் பிரகாசித்து வரும் ரங்கன ஹேரத்தின் ஓய்வுக்குப் பின்னர் சரியான ஒரு சுழல் பந்து வீச்சாளர் இல்லாமல் போகுமா என்ற ஒரு கேள்வி இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், மென்டிஸ் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி, இலங்கை அணியில் இணைவார் என்றால் அது ஹேரத்தின் இடத்தை நிரப்ப சிறந்த ஒரு வாய்ப்பாய் அமையும்.
இந்த வீரர்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவது குறித்த உங்களது கருத்தை கீழே பதிவிடுங்கள்
மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க