ஆசிய விளையாட்டில் தோல்விகள், ஏமாற்றங்களுடன் நாடு திரும்பிய இலங்கை

308

ஆசிய கண்டத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான உலகின் மினி ஒலிம்பிக் என அழைக்கப்படுகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள கலேரா பங் கர்னோ மைதானத்தில் பிரமாண்டமான தொடக்க விழாவுடன் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகியது.

ஆசிய நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் தோழமையை ஏற்படுத்தும் வகையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டிகள் ஆசியாவின் பலம் என்ற தொனிப்பொருளில் இரண்டாவது தடவையாகவும் இந்தோனேஷியாவில் நடைபெற்றது.

அழகாய்… ஆனந்தமாய்… நிறைவு பெற்ற ஆசிய விளையாட்டு திருவிழா

45 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றிய இம்முறை ஆசிய விளையாட்டு விழா தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்றதுடன், மொத்தம் 40 விளையாட்டுகளில் 465 போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் ஐந்து உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அத்துடன், 12 ஆசிய சாதனைகளும், 87 போட்டி சாதனைகளும் நிகழ்த்தப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நேற்று முன்தினம் இரவு (02) நிறைவுக்கு வந்தது.

இது இவ்வாறிருக்க, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 30 விளையாட்டு போட்டிகளுக்காக 176 வீர, வீராங்கனைகளும் 78 அதிகாரிகளும் உள்ளடங்கலாக 255 பேர் கலந்துகொண்டிருந்தனர். ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கையிலிருந்து இவ்வளவு அதிகளவான வீரர்களைக் கொண்ட அணியொன்று பங்குபற்றியிருந்தது இதுவே முதல் தடவையாகும்.

அதுமாத்திரமின்றி, 30 விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக நடைபெற்ற இம்முறை போட்டிகளில் 134 வீரர்களும், 43 வீராங்கனைகளும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதுஎவ்வாறாயினும், கடந்த 15 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் இலங்கை சார்பாக 176 வீர, வீராங்கனைகள் குழுநிலை மற்றும் தனிநபர் போட்டிகளில் பங்குபற்றியிருந்த போதிலும் அவர்களால் ஒரு பதக்கத்தையேனும் வெல்ல முடியாது போனது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட இலங்கைக்கு இறுதி வரை ஏமாற்றமே மிஞ்சியது.

அந்தவகையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை பதக்கத்தைப் பெறாத நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். முன்னதாக, 1982இல் புதுடில்லி, 1986இல் சியோல் மற்றும் 2010இல் குவன்ஷே ஆகிய ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை எந்தவொரு பதக்கத்தையும் வெற்றி கொள்ளவில்லை.

தர்ஜினியின் சிறப்பட்டத்தால் சிங்கப்பூரையும் அச்சுறுத்திய இலங்கை வலைப்பந்து அணி

எனினும், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் குழு நிலை போட்டிகளான ஹொக்கி, கடற்கரை கரப்பந்தாட்டம், கபடி, உள்ளக கரப்பந்தாட்டம், 3×3 கூடைப்பந்தாட்டம் ஆகியவற்றின் முதல் சுற்று லீக் ஆட்டங்களில் இலங்கை அணி ஆறுதல் வெற்றிகளைப் பெற்ற போதிலும், பதக்கங்களை வெல்லும் அளவிற்கு இலங்கை அணி வீரர்களால் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.

அதேபோன்று இலங்கைக்கு ஓரிரு பதக்கங்களை வென்று கொடுக்கின்ற மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு இலங்கை வீரர்கள் தகுதிபெற்றிருந்தாலும் முதல் மூன்று இடங்களுக்குள் வரமுடியாமல் போனது.

அதிகபட்சமாக, ஆண்களுக்கான ரக்பியிலும், ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் நான்காவது இடத்தையே இலங்கை பெற்றிருந்தது.

இதேநேரம், கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இலங்கை பளுதூக்கல், குத்துச்சண்டை வீரர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

காலிறுதி வரை முன்னேறிய வீரர்கள்

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் டய்க்வொண்டோ விளையாட்டுக்காக இலங்கையிலிருந்து ஆறு வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் 63 கிலோ கிராம் எடைப் பிரிவில் சமிந்த சம்பத்தும், 49 கிலோ கிராம் எடைப் பிரிவில் குமுது கல்பனி ஆகியோர் மாத்திரம் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்தனர்.

தற்காப்பு கலைகளில் ஒன்றான வூஷூ விளையாட்டில் ஆண்களுக்கான சான்டா பிரிவுகளில் இலங்கை சார்பாக பெதும் நுவன் பலவர்தன மாத்திரம் பங்குபற்றியிருந்தார். 60 கிலோ எடைப் பிரிவில் ஆண்களுக்கான சந்தா வூஷூ காலிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள வியட்னாம் வீரர் வேன் நெகியமிடம் தோல்வியைத் தழுவினார்.

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பெட்மிண்டன் விளையாட்டுக்காக இலங்கையிலிருந்து 6 வீரர்கள் பங்கேற்றிருந்ததுடன், இதில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் இறுதி 16 பேர் சுற்றில் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தனர்.

இந்த நிலையில், ஆண்கள் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இலங்கையின் சச்சின் டயஸ், புவனேக குணதிலக்க ஜோடி உலக பெட்மிண்டன் தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள சீனாவின் லீ ஜுன் ஹுய், லு யுச்சென் ஜோடியிடம் தோல்வியைத் தழுவி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தனர்.

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற ஆறு கராத்தே வீரர்களில் ஐந்து பேர் முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு நான்காமிடம்

இதில் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப்பிரிவு கராத்தேயில் பங்குபற்றிய இலங்கை வீரர் பிரசங்க சந்தருவன், காலிறுதிப் போட்டியில் மலேஷிய வீரர் பிரேம் குமாரிடம் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தார்.

இறுதிப் போட்டியில் பங்குபற்றிய வீரர்கள்

இலங்கை அணியின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்திவ் அபேசிங்க, ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இதன்படி, ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் நீச்சல் போட்டிகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இலங்கை வீரராக வரலாற்றில் இடம்பிடித்த மெத்திவ் அபேசிங்க, ஆசியாவில் ஆறாவது அதிசிறந்த நீச்சல் வீரர் என்ற புதிய மைல்கல்லையும் எட்டினார்.

இதேவேளை, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டம் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கையின் நட்சத்திர மத்திய தூர ஓட்ட வீரர் காலிங்க குமாரகே எட்டாவது இடத்தையும், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் ஜானக பிரசாத் விமலசிறி ஏழாவது இடத்தையும், பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய நிலானி ரத்னாயக்க, ஆறாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இது இவ்வாறிருக்க, ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கையின் மிகப் பெரிய பதக்க எதிர்பார்ப்புகளாக அமைந்த இந்துனில் ஹேரத் ஆண்களுக்கான 800 மீற்றரில் 8ஆவது இடத்தையும், கயந்திகா அபேரத்ன பெண்களுக்கான 800 மீற்றரில் 6ஆவது இடத்தையும் பெற்று ஏமாற்றம் அளித்தனர். அத்துடன், ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்ட அணியும் இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

2 புதிய போட்டி சாதனைகள்

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இரண்டு இலங்கை சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இதில் ஆண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் மெத்திவ் அபேசிங்க, புதிய தேசிய சாதனை படைத்தார்.

அதேபோன்று, பெண்களுக்கான பளுதூக்கலில் 53 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட சமரி வர்ணகுலசூரிய, கிளீன் அன்ட் ஜேர்க் முறையில் 96 கிலோ கிராம் எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனை படைத்தார்.

ரக்பி அணிக்கு நான்காவது இடம்

ஆசிய விளையாட்டு விழா ரக்பி போட்டிகளில் வெண்கல பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் தென் கொரிய அணியிடம் 36-14 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்ற இலங்கை அணி 4ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தது.

ஆசிய விளையாட்டு விழா ரக்பி போட்டிகளில் இலங்கை நான்காம் இடம்

முன்னதாக அரையிறுதியில் ஆசியாவின் முதல் நிலை அணியான பிரபல ஜப்பானுடனான போட்டியில் வெறும் 2 புள்ளிகளால் இலங்கை அணி தோல்வியுற்ற போதிலும், தீர்மானமிக்க இந்தப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை பெறும் வாய்ப்பை தொடர்ந்து 2ஆவது தடவையாகவும் இலங்கை அணி தவறவிட்டது.

முன்னதாக 2014ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இதே கொரிய அணியிடம் இலங்கை அணி தோல்வியுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கரப்பந்தாட்டத்தில் 13ஆவது இடம்

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் போட்டியிட்டு வரும் இலங்கை கரப்பந்தாட்ட அணி, முதல் போட்டியில் தாய்லாந்திடம் 1-3 என போராடி தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து நடைபெற்ற குழுநிலைப் போட்டியில் வியட்னாம் அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது.

இந்த நிலையில், இறுதி லீக் ஆட்டத்தில் சீனாவிடம் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, 13 முதல் 20ஆவது இடங்களுக்கான தரப்படுத்தல் சுற்று ஆட்டத்தில் மாலைதீவுகளையும், 13 முதல் 16 வரையிலான இடங்களுக்கான போட்டியில் முறையே நேபாளம், வியட்னாம் ஆகிய அணிகளை வீழ்த்தி ஆசியாவில் 13ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஹொக்கியில் 8ஆவது இடம்

இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான ஹொக்கியில் ‘A’ பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை அணி, முதலிரண்டு போட்டிகளிலும் ஜப்பான், ஒன்றிணைந்த கொரியா ஆகிய அணிகளிடம் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் ஹொங்கொங் அணியை வீழ்த்திய இலங்கை அணி ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இதேவேளை, 4ஆவது லீக் போட்டியில் இந்தோனேஷியாவை வெற்றிகொண்ட இலங்கை அணி, இறுதி லீக் ஆட்டத்தில் பிரபல இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

இதனையடுத்து அணிகளின் தரப்படுத்தலில் 7ஆவது மற்றும் 8ஆவது இடங்களுக்காக நடைபெற்ற போட்டியில் ஓமான் அணிக்கெதிராக 5-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியைத் தழுவி எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

கபடி அணிக்கு பின்னடைவு

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக அதிகளவு வீரர்கள் (24 பேர்) பங்குபற்றிய போட்டியாக கபடி அமைந்தது.

ஆண்களுக்கான கபடியில் 11 அணிகள் பங்கேற்றிருந்தன. இதில் A குழுவில் இடம்பெற்றிருந்த இலங்கை ஆண்கள் கபடி அணி, தமது முதல் போட்டியில் நடப்பு சம்பியனான இந்திய அணிக்கு பலத்த போட்டியைக் கொடுத்து தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து நடைபெற்ற தாய்லாந்து அணியுடனான போட்டியில் (46-29) வெற்றியைப் பதிவுசெய்த இலங்கை அணி, பங்களாதேஷ் (29-25) மற்றும் தென் கொரியா (33-22) ஆகிய அணிகளிடம் தோல்வியைத் தழுவி போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது.

ஆசிய விளையாட்டு விழாவில் 8ஆவது இடத்தை தக்கவைத்த இலங்கை ஹொக்கி அணி

ஆசிய விளையாட்டில் முதற்தடவையாக பங்குபற்றிய இங்கை பெண்கள் கபடி அணி, முதல் போட்டியில் தாய்லாந்து அணியிடம் 41-15 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து நடைபெற்ற முதல் போட்டிகளில் இந்தோனேஷியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்திருந்த இலங்கை பெண்கள் அணி, இந்தியாவுடனான கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவி அரையிறுதிக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தது.

இலங்கையின் இன்றைய நிலை

கடந்த 2014ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை மாத்திரம் வென்ற இலங்கை அணிக்கு, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் ஒரு பதக்கத்தையேனும் வெல்ல முடியாது போனது. எனவே, 44 ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் விளையாட்டுத்துறையானது மிகவும் கீழ்மட்டத்தில் இருப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.

எமது அண்டைய நாடான இந்தியாவை எடுத்துக்கொண்டால் கடந்தகாலங்களைவிட இம்முறை போட்டிகளில் 40 போட்டிப் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையாவது பெற்றுக்கொண்டு, முதல் 10 நாடுகளுக்குள் இடம்பிடித்தது. அதேபோன்று, உள்நாட்டு யுத்தம் காரணமாக பாரிய அழிவுகளை சந்தித்துவருகின்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் முறையே 3 மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களையும், நேபாளம் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று தெற்காசிய நாடுகளில் முன்னிலை பெற்றுக்கொண்டது.

ஆனால், அந்த மூன்று நாடுகளைவிடவும் விளையாட்டு, கல்வி என அனைத்து துறைகளிலும் முன்னிலை பெற்ற இலங்கைக்கு எந்தவொரு பதக்கத்தையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனமை மிகப் பெரிய ஏமாற்றமாகும். அத்துடன், இலங்கையின் விளையாட்டுத்துறை ஆசியாவில் மாத்திரமல்லாது தெற்காசியாவில் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதையும் இம்முறை பெறுபேறுகள் சான்று பகர்கின்றது.

அதுமாத்திரமின்றி இம்முறை ஆசிய விளையாட்டு விழாவுக்காக தேசிய ஒலிம்பிக் சங்கமும், விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து சுமார் 5 கோடி ரூபா (50 மில்லியன்) பணத்தை ஒதுக்கியிருந்தது. இதில் வீரர்கள் மாத்திரமல்லாது விளையாட்டுத்துறை அதிகாரிகளும், சங்கங்களின் உறுப்பினர்களும் பயணச்சீட்டு (Ticket), தங்குமிட வசதி, மேலதிக செலவு போன்றவற்றுக்காக பணத்தைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த தோல்விகளுக்கு அனைத்து வீரர்களையும் குறை கூறுவது முட்டாள்தனமாகும். கிரிக்கெட்டைத் தவிர ஏனைய அனைத்து விளையாட்டுகளுக்கும் போதியளவு வசதிகள் இல்லாமை அடிப்படை காரணமாகும். அதேபோன்று நாளுக்கு நாள் மாற்றம் பெறும் அரசியல் சூழ்நிலைகளும் இதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றதை மறுக்கமுடியாது.

ஆசிய விளையாட்டில் இலங்கை பளுதூக்கல் வீரர்களுக்கு ஏமாற்றம்

ஆனால், வெறுமனே, பணத்தை வீணடித்து வெளிநாடுகளில் நடைபெறுகின்ற போட்டிகளுக்காகச் செல்கின்ற வழக்கத்தைக் கொண்டுள்ள எமது நாட்டின் பொறுப்பற்ற விளையாட்டுத்துறை அதிகாரிகள், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பெற்றுக்கொண்ட தோல்விகளுக்கும், இலங்கையின் விளையாட்டுத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கும் இனியாவது தீர்வினை பெற்றுக்கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<