முக்கிய வீரர்களின் பிரகாசிப்புடன் முடிவடைந்த டெஸ்ட் தொடர்

604
Image courtesy - ICC Twitter

நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் (30) நிறைவுக்கு வந்தது. டெஸ்ட் தொடரை பொருத்தவரையில் முதல் போட்டியானது அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் அனுபவ இணைப்பாட்டத்தால் சமனிலை முடிவை எட்டியதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நியூசிலாந்து அணியின் சகலதுறை பிரகாசிப்பால் அவர்கள் வசமானது.

சாதனை வெற்றியுடன் டெஸ்ட் தரவரிசையில் மூன்றாமிடத்தில் நியூஸிலாந்து

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் …..

முக்கியமாக இந்த டெஸ்ட் தொடரை பொருத்தவரை, சில வீரர்களின் உயர்வையும், சில வீரர்களின் வீழ்ச்சியையும் எம்மால் பார்க்கக் கூடியதாக இருந்தது. இலங்கை அணி வீரர்களை பார்க்கும் போது, துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை தவிர, நிரோஷன் டிக்வெல்ல, திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் ஒரு இன்னிங்ஸில் மட்டும் சற்று ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

எனினும், இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்டம் வீழ்ச்சியை கண்டிருந்தது. அணியின் முன்னணி டெஸ்ட் துடுப்பாட்ட வீரரும், நம்பிக்கைக்குரிய வீரருமாக இருந்த திமுத் கருணாரத்ன எதிர்பார்த்தளவு துடுப்பெடுத்தாடவில்லை. இவரையடுத்து, உபாதைக்கு பின்னர் அணியில் இணைந்த தனுஷ்க குணதிலக்க அணிக்கு முழுமையான ஏமாற்றத்தை வழங்கியிருந்தார். இவர்கள் இருவரின் பொறுப்பற்ற ஆரம்பம், இலங்கை அணியை முழுத் தொடரிலும் தடுமாறச் செய்திருந்தது.

இவர்கள் இருவரையடுத்து, துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டிருந்த தனன்ஜய டி சில்வாவுக்கும் இந்த தொடர் மோசமானதாகவே அமைந்தது. முதல் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய இவர், இரண்டாவது போட்டியில் வெளியேற்றப்பட்டார். அடுத்தப் போட்டியில் தனன்ஜயவின் இடத்தை ரொஷேன் சில்வா நிரப்பியிருந்த போதும், அவர் வேகப்பந்தை எதிர்கொள்வதில் காட்டிய தடுமாற்றம் அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இலங்கையை வீழ்த்தி சாதனை வெற்றியை பதிவுசெய்த நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை….

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஒருபக்கம் பிரகாசிக்க தவறியிருந்த நிலையில், தொடரின் மொத்த மத்தியவரிசை துடுப்பாட்டத்தையும் குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் மாத்திரமே தாங்கியிருந்தனர். நிரோஷன் டிக்வெல்ல முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மாத்திரம் அரைச்சதம் கடந்திருக்க, தினேஷ் சந்திமால் டெஸ்ட் தொடரின் இறுதி இன்னிங்ஸில் மாத்திரம் அரைச்சதம் பெற்றிருந்தார்.

டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்களை விளாசிய இலங்கை வீரர்கள்

  • அஞ்செலோ மெதிவ்ஸ் – 258 (4 இன்னிங்ஸ்)
  • குசல் மெண்டிஸ் – 225 (4 இன்னிங்ஸ்)
  • நிரோஷன் டிக்வெல்ல – 103 (3 இன்னிங்ஸ்)

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மெதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாத்ன ஆகியோரது நான்காவது விக்கெட் இணைப்பாட்டமும், இரண்டாவது இன்னிங்ஸில் மெதிவ்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரது இணைப்பாட்டமும் இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்திருந்தது. குறிப்பாக நான்காவது நாள் ஆரம்பத்திலிருந்து, 5வது நாள் போட்டி நிறைவுபெறும் வரை இவர்கள் இருவரும் விக்கெட்டினை விடாமல் துடுப்பெடுத்தாடியமை, இந்த தொடரின் முக்கிய அம்சமாகவும் மாறியது.

இதேவேளை, நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசையை பொருத்தவரை, அவர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸை தவிர ஏனைய இன்னிங்ஸ்களில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக, டொம் லேத்தம் மற்றும் ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோர் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை மேலும் பலப்படுத்தியிருந்தனர்.

சாதனை வெற்றியுடன் டெஸ்ட் தரவரிசையில் மூன்றாமிடத்தில் நியூஸிலாந்து

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் …..

இவர்கள் இருவரும் அணியின் ஓட்டக் குவிப்பில் அதிகமான பங்கினை வகித்ததுடன் கேன் வில்லியம்சன், ஜீட் ராவல், கொலின் டி கிரெண்டோம் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோரும் அதிகமான பங்கினை வகித்திருந்தனர். இதில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பின்வரிசை வீரர், டீம் சௌதியும் அரைச்சதம் விளாசி அணியின் துடுப்பாட்டத்துக்கு பங்கு வகித்திருந்தார்.

டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்களை விளாசிய நியூசிலாந்து வீரர்கள்

  • டொம் லேத்தம் – 450 (3 இன்னிங்ஸ்)
  • ஹென்ரி நிக்கோலஸ் – 213 (3 இன்னிங்ஸ்)
  • கேன் வில்லியம்சன் – 141 (3)
  • ஜீட் ராவல் – 123 (3 இன்னிங்ஸ்)

இதேவேளை, இந்த டெஸ்ட் தொடரின் பந்து வீச்சு பகுதியை பார்க்கும் போது, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணிக்கு பெரும் சவாலைக் கொடுத்திருந்தனர். முக்கியமாக ட்ரென்ட் போல்ட்டின் நேர்த்தியான பந்து வீச்சு, டீம் சௌதியின் வேகம் என்பன இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியை கொடுத்திருந்தது.

டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து வீரர்கள்

  • டீம் சௌதி – 13 (4 இன்னிங்ஸ்)
  • ட்ரென்ட் போல்ட் – 11 (4 இன்னிங்ஸ்)
  • நெயில் வெங்கர் – 6 (4 இன்னிங்ஸ்)

நியூசிலாந்து, ஆஸி தொடர்களிலிருந்து வெளியேறும் மெதிவ்ஸ்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான …..

இவர்கள் இருவருடன், நெயில் வெங்கர் மற்றும் மித வேகப்பந்து வீச்சாளர் கொலின் டி கிரெண்டோம் ஆகியோரும் இடைக்கிடையில் இலங்கை அணிக்கு அழுத்தத்தை கொடுத்திருந்தனர். குறிப்பாக நெயில் வெங்கரின் பௌன்சர் பந்துகள் எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் ஆடுகளம் இவரது பௌன்சர் பந்துகளுக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்தாவிடினும், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு இவரது பந்துவீச்சு உதவியிருந்தது.

இதேவேளை, இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் இந்த தொடரை பொருத்தவரை எதிர்பார்க்கப்பட்ட அளவு பிரகாசிக்கத் தவறியிருந்தனர். ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளில் சிறந்த வேகப்பந்து வீச்சை வெளிப்படுத்திய லஹிரு குமார, நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓரளவு அழுத்தத்தை கொடுத்திருந்தார். எனினும், நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு, ஓட்டங்களை குவித்திருந்தனர்.

முதல் போட்டியில், லஹிரு குமாரவின் பந்துவீச்சு அணிக்கு ஊக்கமளித்திருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அனுபவ வீரர் லஹிரு குமார நியூசிலாந்து அணியை மிரட்டியிருந்தார். இவரின் 5 விக்கெட் குவிப்பின் உதவியுடன், இலங்கை அணியானது, நியூசிலாந்து அணியை 178 ஓட்டங்களுக்கு சுருட்டியிருந்த போதும், இரண்டாவது இன்னிங்ஸில் சுரங்க லக்மால் விக்கெட்டினை வீழ்த்த தவறியிருந்தார்.

டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர்கள்

  • லஹிரு குமார – 9 (3 இன்னிங்ஸ்)
  • சுரங்க லக்மால் – 6 (3 இன்னிங்ஸ்)
  • டில்ருவான் பெரேரா – 4 (3 இ்ன்னிங்ஸ்)

2018 இல் விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்

விளையாட்டு உலகில் 2018 ஆம் ஆண்டானது….

இலங்கை பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த தவறிய அதேவேளை, அவர்களால் ஓட்டங்களும் விட்டுக் கொடுக்கப்பட்டிருந்தன. முக்கியமாக முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் 578 ஓட்டங்களை நியூசிலாந்து அணி பெற்றிருந்ததுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 585 ஓட்டங்களை குவித்திருந்தது. நியூசிலாந்து அணியின் இந்த ஓட்ட குவிப்புகள், அந்த மண்ணில் இலங்கை அணியின் பந்துவீச்சின் பலமின்மையை தெளிவாக காட்டியிருந்தது.

இவ்வாறு, டெஸ்ட் தொடரை பொருத்தவரை இலங்கை அணியில் ஏற்றத் தாழ்வுகள் இருந்த போதும், முதல் டெஸ்ட் போட்டியை சமப்படுத்திய மெண்டிஸ் மற்றும் மெதிவ்ஸின் இணைப்பாட்டம், சுரங்க லக்மாலின் 5 விக்கெட் குவிப்பு, லஹிரு குமாரவின் வேகம் மற்றும் களத்தடுப்பில் அணியின் முன்னேற்றம் என்பன இலங்கை அணிக்கு சற்றே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முழுமையான பலத்துடன் காத்திருக்கும் நியூசிலாந்து அணியை ஒருநாள் தொடரில் எவ்வாறு இலங்கை அணி எதிர்கொள்ள போகின்றது என்பதே தற்போது புதிய கேள்வியாக எம் முன் எழுந்திருக்கிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<