15 வயதுக்குட்பட்ட ப்ரிமா கிண்ண இறுதிப் போட்டியின் இரண்டாம் நாளில், மேல் மாகாண தெற்கு அணிக்கும், மேல் மாகாண மத்திய அணிகுமிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. எனினும் முதல் இன்னிங்ஸ் வெற்றியினால் சம்பியன் பட்டத்தை மேல் மாகாண தெற்கு அணி சுவீகரித்தது.
முதல் இன்னிங்ஸ்
மேல் மாகாண தெற்கு அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதன்படி களம் இறங்கிய அவ்வணி 9 விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக கவிந்து உமயங்க 16 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்களாக 122 ஓட்டங்களை விளாசினார். அதே நேரம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கமில் மின்ஹாற பெற்ற 72 ஓட்டங்களும் அணியை மிகவும் பலப்படுத்தியது.
பந்து வீச்சில் யாசிறு கஸ்தூரியாராச்சி 77 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மனிஷ ரூபசிங்க 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், மிரங்கா விக்கரமதிலக 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக களம் இறங்கிய மேல் மாகாண மத்திய அணி, 47.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சமத் யட்டவர கூடிய ஓட்டங்களாக 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போதிலும் ஏனையோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். பவன் ரத்நாயக்க மற்றும் அமித்த டபரெ ஆகியோர் ஆட்டமிழக்ககாமல் முறையே 28 மற்றும் 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
அதிரடியாக பந்து வீசிய லஹிரு மதுஷங்க 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபொன்று, விஹங்கா லக்சன் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ரோஹன் சஞ்சய மற்றும் தாடுள்ள கவீக்ஷ தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இரண்டாம் இன்னிங்ஸ்
இரண்டாம் இன்னிங்சுக்காக களம் இறங்கிய மேல் மாகாண தெற்கு அணி, சிறப்பாக துடுப்பாடி ஆட்ட நேர முடிவின் போது 32 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. முதல் இன்னிங்சில் 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கமில் மின்ஹாற இந்த இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும், டுமீத் நிம்மான 33 ஓட்டங்களையும் பெற்றிருந்த போது போட்டி நிறைவுக்கு வந்தது.
பந்து வீச்சில் எவரும் விக்கெட் எதனையும் பெறவில்லை, ஷேறன் லக்க்ஷித ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
போட்டியின் சுருக்கம்
மேல் மாகாண தெற்கு அணி (முதல் இன்னிங்ஸ்) 302/9 (92.2) – கவிந்து உமயங்க 122, கமில் மின்ஹாற 72, ஷான் டில்ஹார 29, ஷேறன் லக்க்ஷித 28, யாசிறு கஸ்தூரியாராச்சி 77/4, மனீஷ ரூபசிங்க 63/2, மிரங்கா விக்கரமதிலக 25/2
மேல் மாகாண மத்திய அணி (முதல் இன்னிங்ஸ்) 148/10 (47.1) – சமத் யட்டவர 41, பவன் ரத்நாயக்க 28, அமித்த டபரெ 29, லஹிரு மதுஷாங்க 41/5, விஹங்கா லக்சன் 11/2, ரோஹன் சஞ்சய 30/1, தாடுள்ள கவீக்ஷ 9/1
மேல் மாகாண தெற்கு அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) 105/1 (32) – மில் மின்ஹாற 53*, டுமீத் நிம்மான 33*, ஷேறன் லக்க்ஷித 15
போட்டியின் ஆட்ட நாயகன் : கவிந்து உமயங்க (மேல் மாகாண தெற்கு அணி)
போட்டி முடிவு : மேல் மாகாணம் தெற்கு அணி முதல் இன்னிங்சில் வெற்றி பெற்று சம்பியன் ஆனது