கொழும்பு SSC மைதானத்தில் இன்று (28) நடைபெற்று முடிந்திருக்கும் 15 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மேல்மாகாண தென்பிராந்திய அணியை முதல் இன்னிங்சில் வீழ்த்தியிருக்கும் மேல்மாகாண மத்திய பிராந்திய அணி அவ்வெற்றியுடன் சம்பியனாக மாறியுள்ளது.
நேற்று (27) ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல்மாகாண மத்திய அணியின் தலைவர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை எதிரணிக்கு வழங்கியிருந்தார். இதன்படி தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்திருந்த மேல்மாகாண தென் பிராந்திய அணி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 96 ஓட்டங்களினை மாத்திரமே குவித்து தமது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்திருந்தது. மேல்மாகாண தென் பிராந்திய வீரர்களை கட்டுப்படுத்திய இடதுகை சுழல் வீரர் சம்பத் நிஸ்சங்க 5 விக்கெட்டுகளையும், தாஷிக் நிர்மல் 4 விக்கெட்டுகளையும் மேல்மாகாண மத்திய அணிக்காக கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்சினை ஆரம்பம் செய்த மேல் மாகாண மத்திய அணி 170 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் மேல்மாகாண மத்திய அணி சார்பாக பவந்த ஹரித் 49 ஓட்டங்களைப் பெற்று சிறப்பாக செயற்பட்டிருந்தார். அத்தோடு ஏற்கனவே விக்கெட்டுகளை கைப்பற்றி ஜொலித்த தாஷிக் நிர்மல் மேல்மாகாண மத்திய அணிக்காக பெறுமதியான ஓட்டங்களினை (37) சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
த்ரில்லர் வெற்றியுடன் T-20 தொடரினையும் கைப்பற்றிய பாகிஸ்தான்
தொடர்ந்து 74 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த மேல்மாகாண தென்பிராந்திய அணி இம்முறை முன்னேற்றகரமான ஆட்டத்தினை வெளிக்காட்டி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை குவித்துக் கொண்ட நிலையில் தமது இந்த இன்னிங்சை நிறுத்திக் கொண்டது. இந்த இன்னிங்சில் மேல்மாகாண தென் அணியின் அணித்தலைவர் சுகித மனோஜ் 74 ஓட்டங்களினை குவித்து ஆட்டமிழக்காது காணப்பட்டிருந்தார். மீண்டும் பந்துவீச்சில் அசத்தியிருந்த தாஷிக் நிர்மல் இம்முறையும் 4 விக்கெட்டுகளை மேல்மாகாண மத்திய பிராந்திய அணிக்காக கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேல்மாகாண தென் பிராந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 114 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்திருந்த மேல்மாகாண மத்திய பிராந்திய அணி 75 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து காணப்பட்ட நிலையில் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக தடைப்பட்டிருந்தது. தொடர்ந்தும் இதே நிலை நீடித்ததால் போட்டி சமநிலை அடைந்ததாக நடுவர்கள் அறிவித்திருத்தனர்.
இதனால், முதல் இன்னிங்ஸ் வெற்றியோடு மேல்மாகாண மந்திய பிராந்திய அணி இந்த வருடத்திற்கான 15 வயதுக்கு உட்பட்ட மாகாண கிரிக்கெட் தொடரின் வெற்றியாளராக மாறிக்கொண்டது.
இந்த இன்னிங்சில் திறமையை வெளிக்காட்டியிருந்த மேல்மாகாண தென்பிராந்திய பந்துவீச்சாளர் அஷான் பெர்னாந்து 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
மேல்மாகாண தென் பிராந்திய அணி (முதல் இன்னிங்ஸ்) – 96 (30.5) – பசிந்து பெதும் 28, சமோத் கிஹான் 23, சம்பத் நிஸ்சங்க 5/26, தாஷிக் நிர்மல் 4/23
மேல்மாகாண மத்திய பிராந்திய அணி (முதல் இன்னிங்ஸ்) –170 (62.5) – பவந்த ஹரித் 49*, தாஷிக் நிர்மல் 37, சமோத் கிஹான் 2/15
மேல்மாகாண தென் பிராந்திய அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) –187/9d (64.4) – சுகித மனோஜ் 74*, வினுஜ ரன்புல் 30, தாஷிக் நிர்மல் 4/59, கவிந்து பத்திரன 2/31
மேல்மாகாண மத்திய பிராந்திய அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 75/6 (28) அஷான் பெர்னாந்து 3/16
போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலை அடைந்தது (மேல்மாகாண மத்திய பிராந்திய அணி முதல் இன்னிங்ஸ் வெற்றி)