இலங்கையை வீழ்த்தி T20I தொடரை வென்றது மே.தீவுகள் மகளிர் அணி

West Indies Women’s Tour of Sri Lanka 2024

184

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது T20i போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் T20i தொடரையும் கைப்பற்றியது. 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்று ஒருநாள் தொடரை இலங்கை மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான T20i தொடரானது நடைபெற்றது. இதில் முதல் T20i போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி வெற்றி பெற்றது 

இந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி T20i போட்டி இன்று (28) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் விஷ்மி குணரட்ன 2 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த சமரி அத்தபத்துஹர்ஷிதா மாதவி ஆகிய இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர் 

இதில் அதிரடியாக விளையாடிய சமரி அத்தபத்து 3 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 38 ஓட்டங்களுடனும், ஹர்ஷிதா மாதவி 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கவீஷா தில்ஹாரியும் 26 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார் 

அதன்பின் களமிறங்கிய ஹசினி பெரேரா (2), நிலாக்ஷி டி சில்வா (12), அமா காஞ்சனா 19 ஓட்டங்களை எடுக்க, இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. 

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஃபி ஃபிளெட்சர், ஆலியா அலீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர் 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு ஸ்டேஃபானி டெய்லர் மற்றும் அணித்தலைவி ஹெய்லி மெத்யூஸ் ஜோடி அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்து அணிக்குத் தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர் 

இதில் டெய்லர் 33 ஓட்டங்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைச் சதத்தை நெருங்கிய ஹெய்லி மெத்யூஸ் 49 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து அரைச் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ஷெமைன் கெம்பெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியானது 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் T20i தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த காம்பெல் 3 பௌண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 41 ஓட்டங்களைக் குவித்ததுடன், போட்டியின் ஆட்டநாயகி விருதையும் தட்டிச் சென்றார் 

முன்னதாக இலங்கை மகளிர் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.   

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<