சகலதுறையிலும் பிரகாசித்த இலங்கை மகளிருக்கு முதல் வெற்றி

West Indies Women’s Tour of Sri Lanka 2024

56
West Indies Women’s Tour of Sri Lanka 2024

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (24) நடைபெற்ற முதலாவது T20i போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை மகளிர் அணி 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு T20i போட்டியொன்றில் முதல் தடவையாக மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அணித்தலைவி சமரி அத்தபத்து, இனோஷி ப்ரியதர்ஷனி ஆகியோரது அபார பந்துவீச்சு மற்றும் விஷ்மி குணரட்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோரது துடுப்பாட்டம் என்பன இலங்கை மகளிர் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவி ஹேலி மெதிவ்ஸ் அதிகபட்சமாக 30 ஓட்டங்களையும், ஆலியா அலின் 26 ஓட்டங்களையும், கியானா ஜோசப் 20 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அத்தபத்து 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மகளிர் சர்வதேச T20i போட்டியில் தனது தனிப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார். அதேபோல, இனோஷி ப்ரியதர்ஷனி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் விஷ்மி குணரட்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகிய இருவரும் தலா 35 ஓட்டங்களையும், ஹசினி பெரேரா 20 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். நிலக்ஷிகா சில்வா 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியின் பந்துவீச்சில் அஃபி ப்ளெச்சர் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட T20i தொடரில் இலங்கை மகளிர் அணி 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது T20i போட்டி நாளை மறுதினம் (26) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<