ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
>>T20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
தங்களுடைய தீர்மானத்தின் படி சிறப்பாக பந்துவீசிய இலங்கை மகளிர் அணி மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீராங்கனைகளை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தியது.
சுகந்திகா குமாரி மற்றும் கவீஷா டில்ஹாரி ஆகியோர் அற்புதமாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த மேற்கிந்திய தீவுகள் அணி 47.1 ஓவர்கள் நிறைவில் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மே.தீவுகள் அணி சார்பாக ஹேய்லி மெதிவ்ஸ் 38 ஓட்டங்களையும், ஸ்டெபைன் டெய்லர் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
மே.தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கினை இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான சமரி அதபத்து மற்றும் விஷ்மி குணரத்ன ஆகியோர் இலகுவாக்கினர். விஷ்மி குணரத்ன 40 ஓட்டங்களையும், சமரி அதபத்து 38 ஓட்டங்களையும் பெற்றதுடன், முதல் விக்கெட்டுக்காக 88 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் ஹர்ஷிதா சமரவிக்ரம சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை பெற்றுத்தந்ததுடன், ஹாஷினி பெரேரா 43 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இவ்வாறு இலங்கை அணி வீராங்கனைகளின் பிரகாசிப்புகளுடன் அணி வெறும் 34.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது. அதுமாத்திரமின்றி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை மகளிர் அணி முன்னிலையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<