மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்குமிடையிலான முதலாவது T-20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 71 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
ஏற்கனவே இடம்பெற்ற ஒரு நாள் தொடரை இலங்கை மகளிர் அணி 3 – 0 எனும் கணக்கில் இழந்திருந்த நிலையில் T-20 போட்டிகளில் மீள எழ வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகி இருந்தது.
அன்டிகுவாவில் உள்ள ஸ்டான்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் தரப்பு முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பாக ஹெய்லி மெதிவ்ஸ் 37 ஓட்டங்களையும் ஸ்டபனி டெய்லர் 31 ஓட்டங்களையும் மெரிசா அகுயல்லேரியா மற்றும் பிரிட்னி கூப்பர் ஆகியோர் ஆட்டமிழக்காது முறையே 22 மற்றும் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
தசுன் சானக்கவின் அதிரடி சதத்தால் இலங்கை A அணி வலுவான நிலையில்
தசுன் ஷானக்க பெற்ற அதிரடி சதத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான இரண்டாவது …
பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணியின் தலைவி இனோகா ரணவீர 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், சசிகலா சிறிவர்தன 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் சமரி அதபத்து 23 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பின்னர் 141 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுபெடுத்தாடிய இலங்கை வீராங்கனைகள் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சிறப்பான பந்து வீச்சுக் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 69 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
இலங்கை அணி சார்பில் அமா காஞ்சனா 17 ஓட்டங்களையும், ரெபேக்கா வேண்டோர்ட் 10 ஓட்டங்களையும் பெற ஏனைய வீராங்கனைகள் யாவரும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இந்தப் போட்டியில் இலங்கை வீராங்களைகள் மூலம் தமது இன்னிங்சிற்காக ஒரே ஒரு பௌண்டரி மாத்திரமே பெறப்பட்டது.
பந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகிரா செல்மன் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், அனிசா முஹம்மத் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் ஹெய்லி மெதிவ்ஸ், டீன்றா டொட்டின் மற்றும் அகிரா பீட்டர்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீதமும் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி – 140/4 (20) ஹெய்லி மெத்திவ்ஸ் 37, ஸ்டபனி டெய்லர் 31, மெரிசா அகுயல்லேரியா 22*, பிரிட்னி கூப்பர் 20*, இனோகா ரணவீர 2/35
இலங்கை மகளிர் அணி – 69/7 (20) அமா காஞ்சனா 17, ரெபேக்கா வேண்டோர்ட் 10, சகிரா செல்மன் 2/06, அனிசா முஹம்மத் 2/14