இங்கிலாந்து மண்ணில் முதல் முறை நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகள் அணியை இலகுவாக வீழ்த்தியது.
பெர்மிங்ஹாமில் நடைபெற்ற இந்த போட்டியின் மூன்றாவது நாளான சனிக்கிழமை (19) மேற்கிந்திய தீவுகள் அணி ஒரே தினத்தில் 19 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்த தோல்வியை சந்தித்தது. அந்த அணி ஒரே தினத்தில் அதிக விக்கெட்டுகளை இழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். முன்னதாக 1933ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே நாளில் 18 விக்கெட்டுகளை இழந்ததே அதிகமாகும்.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலஸ்டயர் குக்கின் இரட்டை சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 514 ஓட்டங்களை பெற்ற நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முதல் இன்னிங்ஸை ஆரம்பிக்க பணித்தது.
முன்னாள் தலைவர் குக் 407 பந்துகளுக்கு முகம்கொடுத்து 33 பவுண்டரிகளுடன் 243 ஓட்டங்களை குவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் குக் பெறும் நான்காவது இரட்டைச் சதம் இதுவாகும். எனினும் 1990ஆம் ஆண்டு கிரஹாம் கூச் முதல் இன்னிங்ஸில் 333 ஓட்டங்களை பெற்ற பின் இங்கிலாந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒருவர் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இதன்போது குக் மற்றும் அணித்தலைவர் ஜோ ரூட் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 248 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். தனது 13ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்த ரூட் 136 ஓட்டங்களை பெற்றார்.
மோர்க்கல், அம்லா சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறுகின்றார்களா?
மொயின் அலியின் சிறந்த சகலதுறை ஆட்டத்தின் மூலம் தென்னாபிரிக்காவுடனான..
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் சுழல்பந்து வீச்சாளர் ரொஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி 44 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் சனிக்கிழமை மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. எனினும் அந்த அணியின் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 47 ஓவர்களில் 168 ஓட்டங்களுக்கு சுருண்டது. தனித்து போராடிய ஜெர்மைன் பிளக்வுட் 76 பந்துகளில் 79 ஓட்டங்களை பெற்றார். இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் அண்டர்ஸன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஸ்டுவட் பிரோட் மற்றும் ரோலான்ட் ஜோன்ஸ் தலா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.
முதல் இன்னிங்ஸில் 348 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்சுக்காக பலோ ஓன் (Follow on) செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதாவது கடந்த நான்கு ஆண்டுகளில் அதிக தடவை பலோ ஓன் செய்த இலங்கையின் (6) மோசமான சாதனையை முந்திய மேற்கிந்திய அணி 7ஆவது தடவையாக இந்த டெஸ்டில் பலோ ஓன் செய்ய பணிக்கப்பட்டது.
இதன்படி தனது இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாட மீண்டும் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மீண்டும் ஒருமுறை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
மூன்றாவது நாள் ஆட்டத்தின் மதிய போசன இடைவேளைக்கு பின் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி அந்த நாள் முடிவதற்குள் 45.4 ஓவர்களில் 137 ஓட்டங்களுக்கே சுருண்டது. ஒரு துடுப்பாட்ட வீரரேனும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் ஆரம்ப வீரர் பரத்வைட் பெற்ற 40 ஓட்டங்களே அதிக ஓட்டமாகும்.
இதில் இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் ஸ்டுவட் பிரோட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் தனது பந்துவீச்சு சகாவான ஜேம்ஸ் அண்டர்ஸனுக்கு (492) அடுத்து இரண்டாவது இடத்தை பெற்றார். இதுவரை 384 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் அவர் முன்னாள் வீரர் இயன் பொதமை (383) பின்தள்ளினார்.
இதன்படி இங்கிலாந்து சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இருவரும் சம காலத்தில் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பம் இதற்கு முன்னர் 1963 இல் பிரெட் ட்ரூமன் மற்றும் பிரையன் ஸ்டதம் ஒன்றாக விளையாடிய காலத்திலேயே நிகழ்ந்தது.
போட்டியில் இரட்டைச் சதம் பெற்ற அலஸ்டயர் குக்கிற்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிவரும் வெள்ளிக்கிழமை (25) ஹெடிங்லியில் ஆரம்பமாகவுள்ளது.