கயானாவின் ப்ரோவிடன்ஸ் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அணித் தலைவர் ஜேசன் ஹோல்டரின் அற்புதமான இறுதி ஓவரின் உதவியுடன் வெற்றிபெற்று, மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி விருந்தினருக்கு, மேற்கிந்திய தீவுகள் அணி அதிர்ச்சி கொடுத்திருந்தது. இந்த நிலையில் அடுத்து ஆரம்பமாகிய ஒருநாள் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய பங்களாதேஷ் வீரர்கள் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து, ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்று, மேற்கிந்திய தீவுகளுக்கு சவாலை முன்வைத்தனர்.
தமிமின் சதத்துடன் பங்களாதேஷுக்கு தொடரின் முதல் வெற்றி
மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என்பதால், கட்டாய வெற்றியை தக்கவைக்கவேண்டிய நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, அன்ரே ரசலுக்கு பதிலாக கீமோ போலை (Keemo Paul) களமிறக்கியது. எனினும் பங்களாதேஷ் அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.
பங்களாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகளுக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளின் முதல் விக்கெட் 29 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. எவின் லுவிஸ் 12 ஓட்டங்களுடன் வெளியேற, அவரது ஜோடியான கிரிஸ் கெயில் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வருகைதந்த ஷாய் ஹோப் 25 ஓட்டங்கள் மற்றும் ஜேசன் மொஹமட் 12 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்ப, விக்கெட்டை விட்டுக்கொடுக்கமால் ஆடிய சிம்ரொன் ஹெட்மைர் அரைச்சதத்தை கடந்தார்.
இவருடன் சிறப்பான இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்த ரோவ்மன் பவல் 44 ஓட்டங்களை பெற, ஐந்தாவது விக்கெட்டுக்காக இருவரும் 103 ஓட்டங்களை பகிர்ந்தனர். தொடர்ந்து 44 ஓட்டங்களுடன் ரோவ்மன் பவல் ஆட்டமிழக்க, சிம்ரொன் ஹெட்மைர் ஒருநாள் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை கடந்தார். இவ்வாறு ஓட்டக் குவிப்பில் ஈடுபட்ட சிம்ரொன் ஹெட்மைர் 93 பந்துகளுக்கு 125 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் ரூபல் ஹுசைன் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, சகிப் அல் ஹசன் மற்றும் முஷ்தபிசூர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.
ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரையில் 300 ஓட்டங்களுக்கு குறைவான வெற்றி இலக்கை அணிகள் இலகுவாக கடந்து விடுகின்றன. இதனடிப்படையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியும் வெற்றி இலக்கை நோக்கி சிறப்பான முன்னேற்றத்தை பெறத் தொடங்கியது.
ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய பங்களாதேஷ் அணியின் அனாமுல் ஹக் 9 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கலாக 23 ஓட்டங்களை விளாசிய நிலையில், ஜோசப்பின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். எனினும் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரமாக ஜொலித்து வரும் தமிம் இக்பால் மற்றும் சகிப் அல் ஹசன் ஜோடி மீண்டுமொரு சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தது. இருவரும் 97 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், தமிம் இக்பால் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து சிறிய இடைவேளைக்குள் சகிப் அல் ஹசனும் 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பில் மனம் திறக்கும் கிளேன் மெக்ஸ்வெல்
எனினும் அடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரர்களான முஷ்தபிகூர் ரஹீம் மற்றும் மஹமதுல்லாஹ் ஜோடி அணியின் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. இருவரும் நிலையான 87 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, மஹமதுல்லாஹ் 39 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். அணிக்கு நம்பிக்கை தரக்கூடிய துடுப்பாட்ட வீரர்கள் இருந்ததால் பங்களாதேஷ் அணி இலகுவாக முன்னேறியது. முஷ்தபிகூர் ரஹீம் அரைத்சதத்தை கடக்க, அவருடன் துடுப்பாட்டத்தில் இணைந்த சபீர் ரஹ்மான் 10 ஓட்டங்களையும் பெற்றிருந்த நிலையில், பங்களாதேஷ் அணிக்கு இரண்டு ஓவர்களில் 14 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டது.
இதுவைரயில் வெற்றி வாய்ப்பு பங்களாதேஷ் அணியின் கைவசம் இருக்க, மேற்கிந்திய தீவுகளின் கீமோ போல் 49ஆவது ஓவரில் போட்டியின் திசையை மாற்றத் தொடங்கினார். 49 ஆவது ஓவரில் 6 ஓட்டங்களை மாத்திரமே வழங்கிய இவர் சபீர் ரஹ்மானின் (12) விக்கெட்டை வீழ்த்தினார். இதனை பலமாக வைத்து இறுதி பந்து ஓவரை வீசிய அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர், முதல் பந்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த முஷ்தபிகூர் ரஹீமை (68) ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து களமிறங்கிய புதிய துடுப்பாட்ட வீரர் மொஷ்டாக் ஹீசைனை வைத்து 4 பந்துகள் வீசிய ஹோல்டர் 3 ஓட்டங்களை மாத்திரம் வழங்க, இறுதிப் பந்தில் பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மொர்டஷாவுக்கு ஒரு ஓட்டத்தை மாத்திரமே வழங்கி, அணியை மூன்று ஓட்டங்களால் த்ரில் வெற்றிபெற்றச் செய்தார்.
இன்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 1-1 என சமப்படுத்தியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி, 28ஆம் திகதி பெஸடெரில் (Basseterre) நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
மேற்கிந்திய தீவுகள் – 271 (49.3) – சிம்ரொன் ஹெட்மைர் 125(93), ரூபல் ஹைசைன் 3/61
பங்களாதேஷ் – 268/6 (50) – முஷ்தபிகூர் ரஹீம் 68(67), டேவேந்திர பிஷு 1/39
முடிவு – மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றி
போட்டியின் ஆட்ட நாயகன் – சிம்ரொன் ஹெட்மைர்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…