பங்களாதேஷ் அணியுடன் தங்களது சொந்த மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T-20 தொடர்களில் விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 2012ஆம் ஆண்டுக்கு பின்னர், எதிர்வரும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் முழுமையான தொடரொன்றில் பங்கேற்பதற்காக பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பங்களாதேஷ் அணிக்கு சர்வேதேச தொடர்கள் எதுவும் அட்டவணைப்படுத்தப்படவில்லை. குறித்த காலப்பகுதிக்கு பிறகு, பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
>> இறுதி ஓவரில் பங்களாதேஷ் அணியின் வெற்றியை பறித்த ஜேசன் ஹோல்டர்
இந்நிலையில் சர்வதேச போட்டிகள் இல்லாத, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி, கடந்த 2012-13ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முழுமையான தொடருக்கு பின்னர், பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முழுமையான தொடரில் விளையாடியிருக்கவில்லை. இதற்கு பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி 2014ஆம் ஆண்டு நடைபெற்ற T-20 உலகக்கிண்ண போட்டிகளுக்காக பங்களாதேஷ் சென்று விளையாடியிருந்தது. இதுவே அவர்களது இறுதி பங்களாதேஷ் சுற்றுப் பயணமாகவும் அமைந்தது.
தற்போது, சுமார் ஆறு வருடங்களுக்கு பின்னர் பங்களாதேஷ் செல்லவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டு நாள் பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடி பின்னர், சிட்டகொங்கில் நவம்பர் 22ஆம் திகதி தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டி மின்பூரில் நவம்பர் 30 தொடக்கம் டிசம்பர் 4ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடரின் முதல் போட்டி மின்பூரில் டிசம்பர் 9ஆம் திகதியும், அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளும் சில்ஹெட் மைதானத்தில் டிசம்பர் 11ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இறுதியாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான T-20 தொடர் சில்ஹெட் மைதானத்தில் டிசம்பர் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதி இரண்டு போட்டிகள் டிசம்பர் 20 மற்றும் 22ஆம் திகதிகளில் மின்பூரில் நடைபெறவுள்ளது.
இதேவேளை தற்போது மேற்கிந்திய தீவுகள் சென்று விளையாடி வரும் பங்களாதேஷ் அணி, டெஸ்ட் தொடரை 0-2 என இழந்து தோல்வியடைந்துள்ளதுடன், ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடரில் 1-1 என சமனிலையில் உள்ளதுடன், தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் எதிர்வரும் 28ஆம் திகதி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<