தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவந்த மே.தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், இலங்கை அணி 326 ஓட்டங்களை குவித்திருந்தது.
இரண்டாவது நாள் ஆட்டமான நேற்று மேற்கிந்திய தீவுகள் அணி 251 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், இன்றைய தினம் ஆட்டத்தை தொடர்ந்தது. எனினும் 277 ஓட்டங்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணிக்கு 79 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
ஜோர்டன் ஜோன்சன் மே.தீவுகள் அணிக்காக 133 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டதுடன், இலங்கை அணியின் பந்துவீச்சில் விஹாஷ் தெவ்மிக 3 விக்கெட்டுகளையும், மல்ஷ தருபதி மற்றும் கவீஷ பியூமல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை இளையோர் அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதில் அணித்தலைவர் சினெத் ஜயவர்தன 14 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை விளாசியதுடன், ருசாந்த கமகே 21 ஓட்டங்களையும், ரவிசான் டி சில்வா 17 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர்.
இலங்கை இளையோர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்ததுடன், இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை 1-0 என கைப்பற்றியது.