சுற்றுலா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 46 ஓட்டங்களை பெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 253 ஓட்டங்களை குவித்ததுடன், 49 ஓட்டங்களால் முன்னிலையை பெற்றுக்கொண்டது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கை!
போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 204 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த நிலையில், மே.தீவுகள் அணி நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 69 ஓட்டங்களை பெற்றிருந்தது.
அதன்படி, இன்றைய ஆட்டத்தை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு எந்தவொரு வாய்ப்பையும் கொடுக்காமல், ஓட்டங்களை குவித்தது. குரூமா போனர் மற்றும் கிரைக் பிராத்வைட் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.
எனினும், கடினமான போராட்டத்துக்கு பின்னர் 35 ஓட்டங்களை பெற்றிருந்த குரூமா போனர், ரமேஷ் மெண்டிஸின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, கிரைக் பிராத்வைட் அரைச்சதம் கடந்தார். எனவே, மதியபோசன இடைவேளையில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து மே.தீவுகள் அணி 145 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
பின்னர், மதியபோசன இடைவேளையை தொடர்ந்து, இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரமேஷ் மெண்டிஸ் விக்கெட்டுகளை சாய்க்க, மறுமுனையில் எம்புல்தெனிய மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கினர். இதன்படி, தேநீர் இடைவேளையின் போது 235 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை மே.தீவுகள் அணி இழந்தது.
மீண்டும் தேநீர் இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய மே.தீவுகள் அணி 253 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணிசார்பாக கிரைக் பிராத்வைட் 72 ஓட்டங்களையும் ஜேர்மைன் பிளக்வூட் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, கெயல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய அதிசிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்து 6 விக்கெட்டுகளை வீழ்த்த, பிரவீன் ஜயவிக்ரம மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர், 49 ஓட்டங்கள் பின்னடைவில் தங்களுடைய இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, மோசமான முறையில் தங்களுடைய முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. திமுத் கருணாரத்ன 6 ஓட்டங்களுடனும், ஓசத பெர்னாண்டோ 14 ஓட்டங்களுடனும் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தனர்.
எனினும், பெதும் நிஸ்ஸங்க 21 ஓட்டங்களுடனும் சரித் அசலங்க 4 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை நகர்த்த இலங்கை அணி இன்றைய ஆட்டநேர நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 46 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதேநேரம், இலங்கை அணி, மே.தீவுகளின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 3 ஓட்டங்கள் பின்னடைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<