சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை மறுதினம் (22) கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை வந்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியானது தங்களுடைய அனுபவ வீரரான கீரன் பொல்லார்ட்டின் தலைமையில் களமிறங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியிருந்த திமுத் கருணாரத்ன மீண்டும் தலைமைத்துவத்தை பெற்றுள்ளார்.

உபுல் தரங்கவின் சதத்துடன் மே. தீவுகளை வீழ்த்திய இலங்கை பதினொருவர்!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு…………..

ஐசிசி ஒருநாள் தரவரிசையின்படி, இலங்கை அணி 81 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தையும், மேற்கிந்திய தீவுகள் அணி 80 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தையும் பிடித்திருக்கும் நிலையில், இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றால் 8 ஆவது இடத்துக்கு முன்னேறும்.

இலங்கை அணியானது ஒருநாள் போட்டிகளில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துவந்த போதும், திமுத் கருணாரத்னவின் தலைமையில் சற்று மதிக்கத்தக்க நிலையை அடைந்து வருகின்றது. குறிப்பாக உலகக் கிண்ணத்தில் படுதோல்வியை சந்திக்கும் என்ற நிலை இருந்தபோதும், இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்து முன்னேற்றம் கண்டிருந்தது.

அத்துடன், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை இலங்கை அணி முழுமையாக கைப்பற்றி நம்பிக்கை பெற்றிருந்தது. எனினும், முன்னணி வீரர்கள் இன்றி பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி ஒருநாள் தொடரை முழுமையாக இழந்திருந்தது.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் செல்லாமல் இருந்த இலங்கையின் முன்னணி வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளதால், இந்த தொடரில் இலங்கை அணியால், மேற்கிந்திய தீவுகளுக்கு சவால் கொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், சொந்த மண்ணில் விளையாடுவதால் இலங்கை அணிக்கு மேலும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

அதேபோன்று மேற்கிந்திய தீவுகள் அணியும் கடந்த சில தொடர்களில் மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணிக்கு எதிரான தொடரில் போட்டித்தன்மையுடன் விளையாடி, 2-1 என தொடரை இழந்தது. ஆனாலும், அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரை 3-0 என வெற்றிகொண்டு, வெற்றியுடன் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை கடந்த கால மோதல்களில் மேற்கிந்திய தீவுகள் அணி சற்று சிறந்த பெறுபேறுகளை கொண்டிருக்கிறது. இறுதியாக உலகக் கிண்ணத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்த போதும், ஒட்டுமொத்தமாக மேற்கிந்திய தீவுகள் அணி ஆதிக்கம் செலுத்துகிறது.

இரண்டு அணிகளும் 57 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளதுடன், மேற்கிந்திய தீவுகள் அணி 28 போட்டிகளிலும், இலங்கை அணி 26 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

ஆனாலும், இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளின்படி, இரு அணிகளும் 14 போட்டிகளில் மோதியுள்ளதுடன், 9 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளதுடன், 3 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றுள்ளது. அதேநேரம், இலங்கையில் வைத்து மேற்கிந்திய தீவுகள் அணி எந்தவொரு ஒருநாள் தொடரையும் வெற்றிகொள்ளவில்லை.

இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணி இருதரப்பு தொடருக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்ததுடன், குறித்த தொடரை இலங்கை அணி 3-0 என கைப்பற்றியிருந்தது.

எதிர்பார்ப்பு வீரர்கள்

  • குசல் பெரேரா

இலங்கை அணியை பொருத்தவரை, அதிகமாக எதிர்பார்க்கப்படும் வீரராக குசல் பெரேரா உள்ளார். இலங்கை அணிக்காக தொடர்ச்சியாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பிரகாசித்து வரும் இவர், இறுதியாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் சதம் அடித்திருந்தார்.

அத்துடன், கடந்த 10 இன்னிங்சுகளில் சிறப்பாக ஓட்டங்களை குவித்துள்ள இவர், ஒரு சதம் மற்றும் 3 அரைச் சதம் அடங்கலாக 456 ஓட்டங்களை குவித்துள்ளார். இவரது ஓட்ட சராசரி 45.6 ஆக அமைந்துள்ளது.

இலங்கை ஒருநாள் அணிக்கு திரும்பியிருக்கும் திசர பெரேரா

மேற்கிந்திய தீவுகள் – இலங்கை…………….

அதேநேரம், பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற போட்டியில் குசல் பெரேரா, சதமடித்துள்ள நிலையில், இந்த தொடரில் இலங்கை அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரராக இவர் அமைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • நிக்கோலஸ் பூரன்

மேற்கிந்திய தீவுகள் அணியின் மிகச்சிறந்த இளம் துடுப்பாட்ட வீரராக நிக்கோலஸ் பூரன் இருக்கிறார். உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக கன்னி ஒருநாள் சதத்தை பதிவுசெய்த இவர், போட்டியின் இறுதிக்கட்டத்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 52.50 என்ற ஓட்ட சராசரியில் 840 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார். எனவே, இந்த தொடரில் இலங்கை அணிக்கு சவால் கொடுக்கக்கூடியவராக இவர் அமைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிக்குழாம்கள்

இலங்கை குழாம்

திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாந்து, நிரோஷன் டிக்வெல்ல, அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, ஷெஹான் ஜயசூரிய, வனிந்து ஹஸரங்க, தசுன் ஷானக்க, திசர பெரேரா, லக்ஷான் சந்தகன், நுவன் பிரதீப், இசுரு உதான, லஹிரு குமார

மேற்கிந்திய தீவுகள் குழாம்

கீரன் பொல்லார்ட் (தலைவர்), ஷாய் ஹோப், பெபியன் எலன், சுனில் அம்ப்ரிஸ், டெரன் பிராவோ, ரொஸ்டன் ஷேஸ், ஷெல்டன் கொட்ரல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், ப்ரெண்டன் கிங், கீமோ போல், நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பவெல், ரொமாரிய செபர்ட், ஹெய்டன் வோல்ஸ் ஜூனியர்

SLC தலைவர் பதினொருவர் அணியில் தரங்க, அசேல, திரிமான்ன

மேற்கிந்திய தீவுகள் அணியுடன்……………

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் சுமார் 5 வருடங்களுக்கு பின்னர், இருதரப்பு தொடர் ஒன்றில் மோதுகின்றன. அதேநேரம், இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் தங்களுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு தொடரில் விளையாடுகின்றது. 

நீண்ட காலத்துக்கு பின்னர், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடரினை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளதுடன், இந்த ஒருநாள் தொடரானது மிகவும் சுவாரஷ்யமாகவும், விறுவிறுப்பாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<