மேற்கிந்திய தீவுகளின் இடைக்கால பயிற்சியாளராக கோலி

288

எதிர்வரும் ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்களுக்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் அண்ட்ரே கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியடைந்ததை அடுத்து தலைமைப் பயிற்சியாளர் பதவியை பில் சிம்மன்ஸ் இராஜினாமா செய்தார். இதனையடுத்தே அண்ட்ரே கோலி இடைக்கால பயிற்சியாளராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜமைக்கா அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரான கோலி, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அகடமி திட்டத்தின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். அவர் முன்பு மேற்கிந்தியத் தீவுகளின் 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், மேற்கிந்திய தீவுகள் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன், 2016இல் மேற்கிந்தியத் தீவுகள் அணி T20 உலகக் கிண்ணத்தை வென்றபோது பில் சிம்மன்ஸின் கீழ் உதவிப் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கரீபியன் பிரீமியர் லீக் சம்பியன் பட்டத்தை வென்ற ஜமைக்கா தல்லாவாஸின் உதவி பயிற்சியாளராக இருந்தார்.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அண்ட்ரே கோலி கருத்து தெரிவிக்கைபயில்,

‘எதிர்வரும் ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணங்களில் மேற்கிந்திய தீவுகள் அணியை மேற்பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டமை எனக்கு கிடைத்த ஒரு சிறப்பு மரியாதையாகும்;. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு என மனதில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. எனவே, ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக அவர்களின் சொந்த மணணில் நாங்கள் விளையாடவுள்ளதால் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பணி சவாலானதாக இருக்கும்.

எங்கள் திட்டமிடல் மற்றும் தயாரிப்பு பொருத்தமானது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும், மேலும் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் நிலைத்தன்மையை நிரூபிக்க வேண்டும், நேர்மறையான முடிவுகளை அடைவதற்கான சிறந்த வாய்ப்பை நமக்கு வழங்க வேண்டும்.

வீரர்கள், இரண்டு தொடர்களும் வழங்க வேண்டிய வாய்ப்புகளைப் பற்றி ஆர்வமாக உள்ளனர், மேலும் எங்கள் அணியின் வெற்றிக்கு பங்களிக்க ஆர்வமாக உள்ளனர். அடுத்து வரும் சுற்றுப்பயணங்கள் மற்றும் வளர்ச்சிக்கு உறுதியான மற்றும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கு எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகளும் புலவாயோவில் நடைபெறும்.

இதன்படி, முதலாவது டெஸ்ட் பெப்ரவரி 4 முதல் 8ஆம் திகதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 12 முதல் 16ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நேரடியாக தென்னாப்பிர்ககாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் அணியின் உதவிப் பயிற்சியாளர்களான ரோடி எஸ்ட்விக் மற்றும் மான்டி தேசாய் ஆகியோரின் ஒப்பந்தம் காலம் முடிவடைந்ததை அந்நாட்டு கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<