இங்கிலாந்துக்கு எதிரான மே.இ.தீவுகள் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

194
@Getty Images

எதிர்வரும் ஜுலை மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் குழாம், இன்று (03) அறிவிக்கப்பட்டுள்ளது.

>> இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலையில்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்ட பின், இடம்பெறவுள்ள முதல் சர்வதேச தொடராக, மேற்கிந்திய தீவுகள்இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் அமைகின்றது. 

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியினை சகலதுறை வீரரான ஜேசன் ஹோல்டர் வழிநடாத்துகின்றார்.

இதேநேரம், இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் குழாத்தில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் செம்மார் ஹோல்டர் உடன், ரெய்மன் ரெபர், ரூமா போன்னர் மற்றும் ஜெர்மைன் பிளாக்வூட் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சிரேஷ்ட வீரர்களான டர்ரன் ப்ராவோ, சிம்ரன் ஹெட்மேயர், கீமோ போல் ஆகியோர் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்படவில்லை

இந்த வீரர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள விரும்பாத விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் சபை, அவர்களின் முடிவுக்கு மதிப்பளிப்பதாகத் தெரிவித்திருப்பதோடு, அவர்களை எதிர்கால மேற்கிந்திய தீவுகள் இணைக்க ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.  

அவர்களின் தீர்மானங்களை முழு மனதாக ஏற்கின்றோம். முன்னர் குறிப்பிட்டதன் படி, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையானது அவர்களின் இப்போதைய தீர்மானத்தை கருத்திற்கொண்டு அவர்களை எதிர்கால அணியில் இணைக்காமல் விடும் நடவடிக்கைகளை செய்து  விடாது.”

இது இவ்வாறு இருக்க மேற்கிந்திய தீவுகள் அணியில் முதன் முறையாக உள்வாங்கப்பட்டிருக்கும் வேகப்பந்துவீச்சாளரான சாமர் ஹோல்டர், கடந்த 2016ஆம் ஆண்டு இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவம் செய்த பின்னர் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த வீரராக காணப்படுகின்றார். அதோடு, அவர் இந்தப் பருவகாலத்திற்கான முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் 18.91 என்கிற சராசரியுடன் 36 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

மறுமுனையில் 31 வயது நிரம்பிய துடுப்பாட்ட சகலதுறை வீரரான ரூமா போன்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக T20 போட்டிகள் மூலம் ஏற்கனவே சர்வதேச அறிமுகம் பெற்ற போதும் முதல்தரப் போட்டிகளில் தொடர்ந்தும் திறமை காட்டி வருகின்றார். மொத்தமாக 69 முதல்தர போட்டிகளில் ஆடியிருக்கும் ரூமா 3321 ஓட்டங்களுடன் 45 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் அணியில் ஏற்கனவே இடம்பெறாமல் போன சகலதுறை வீரர் ரெய்மன் ரேபர், துடுப்பாட்டவீரர் ஜெர்மைன் பிளாக்வூட் ஆகியோரும் மேற்கிந்திய தீவுகள் அணியில் தமது திறமையினை நிரூபித்ததன் மூலமே மீண்டும் வாய்ப்பினை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி, கொரோனா வைரஸ் ஆபத்து இருப்பதன் காரணமாக தொடர் நடைபெற ஒரு மாதத்திற்கு முன்னரே இங்கிலாந்து செல்லவுள்ளதோடு, இங்கிலாந்து சென்ற பின்னர் 14 நாட்கள் கொண்ட தனிமைப்படுத்தல் முகாமில் பங்கெடுத்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப் பயணத்திற்காக 11 பேர் அடங்கிய மேலதிக வீரர்கள் குழாம் ஒன்றை தயார் செய்து வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது. இந்த மேலதிக வீரர்கள் குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஷன்னோன் கேப்ரியல், சுனில் அம்ப்ரிஸ், ஒசானே தோமஸ் மற்றும் ஜோமல் வோர்ரிகன் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள்இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூலை 08ஆம் திகதி சௌத்தம்ப்டன் நகரில் நடைபெறவுள்ள நிலையில், தொடரின் இரண்டாம், மூன்றாம் போட்டிகள் ஜூலை மாதம் 16ஆம், 24ஆம் திகதிகளில் மன்செஸ்டர் நகரில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம் – ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), ஜெர்மைன் பிளாக்வூட், ரூமா போன்னர், கிரைக் ப்ராத்வைட், சாமர் ப்ரூக்ஸ், ஜோன் கெம்பல், ரொஸ்டன் சேஸ், ரஹீம் கொர்ன்வால், ஷேன் டோவ்ரிச், சேமர் ஹோல்டர், ஷேய் ஹோப், அல்சாரி ஜோசேப், ரெய்மன் ரெய்பர், கேமர் ரோச்

மேலதிக வீரர்கள் குழாம் – சுனீல் அம்ப்ரிஸ், ஜோசுவா டி சில்வா, ஷன்னோ் கேப்ரியல், கீயோன் ஹார்டிங், கைல் மேயர்ஸ், பிரஸ்டன் மெக்சிவீன், மார்க்கினோ மின்ட்லி, ஷேன் மோஸ்லி, அன்டர்சன் பிலிப், ஒசானே தோமஸ், ஜோமல் வொர்ரிகன்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<