இம்முறை உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான லீக் போட்டியில் பெற்றுக்கொண்ட தோல்வி தான் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை தட்டிப் பறித்ததாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் மோதிய 43 ஆவது லீக் ஆட்டம் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (05) நடைபெற்றது. இந்தப் போட்டியில் 400 ஓட்டங்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு தகுதிபெறும் சூழ்நிலை ஏற்பட்டது.
பங்களாதேஷை வென்றும் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 43ஆவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியினை 94 ஓட்டங்களால்…
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் பங்களாதேஷ் அணியை 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்ற அசாத்திய இலக்கு முன்வைக்கப்பட்டது. ஆனால், இறுதியில் அது ஏமாற்றத்தில் முடிவுக்கு வர அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துவிட்டது.
இந்த நிலையில், போட்டியின் பிறகு சர்பராஸ் அஹமட் அளித்த பேட்டியில்,
”இறுதியாக நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் நாங்கள் சிறப்பாக விளையாடியிருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக அரையிறுதிக்கு எம்மால் தகுதிபெற முடியாமல் போய்விட்டது. மேற்கிந்திய தீவுகளிடம் அடைந்த தோல்வி தான் இந்தத் தொடரிலிருந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
ஆனால் இந்தியாவுடனான போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு எமது வீரர்கள் விளையாடிய விதம் பாராட்டத்தக்கது.
உண்மையில் இந்தப் போட்டியில் பாபர் அசாம், இமாம் உல் ஹக், ஹரிஸ் சொஹைல் மற்றும் எமது பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்திய திறமைகள் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் போட்டித் தொடரின் ஆரம்ப கட்டத்தில் எம்மால் சிறப்பாக விளையாட முடியாமல் போனது. எம்மால் சரியான இணைப்பாட்டமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அணித் தேர்வில் பல மாற்றங்களை கொண்டுவர நேரிட்டது.
*This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of upload.
இதன் ஒரு முயற்சியாக சஹீன் ஷாஹ் அப்ரிடியையும், ஹரிஸ் சொஹைலும் அணிக்குள் திரும்பிய பிறகுதான் எமது அணி பரிபூரணமாக மாறியது. உண்மையில் இறுதியாக நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் சஹீன் ஷாஹ் அப்ரிடி பந்துவீசிய விதம் பாராட்டத்தக்கது. அதிலும் இன்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக விளையாடியிருந்தார்” என தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்ற 19 வயதான இளம் வேகப் பந்துவீச்சாளரான சஹீன் ஷாஹ் அப்ரிடி கருத்து வெளியிடுகையில்,
”இது எனக்கும், எனது குடும்பத்தாருக்கும், பாகிஸ்தானுக்கு முக்கியமான தருணமாகும். அத்துடன், இந்த ஆட்ட நாயகன் விருதை எனது அப்பாவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<