இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் உலக கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணிக்குழாத்தினை மேற்கிந்திய தீவுகள் அணி நேற்று (24) அறிவித்துள்ளது. உலக கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள 9 அணிகளும் ஏற்கனவே தங்களது அணிகளை அறிவித்திருந்த நிலையில், இறுதியாக தங்களது குழாத்தை மேற்கிந்திய தீவுகள் வெளியிட்டுள்ளது.
உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு
அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய……
அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் முக்கிய வீரராக அதிரடி சகலதுறை வீரர் என்ரே ரசல் இடம்பெற்றுள்ளதுடன், துரதிஷ்டவசமாக கிரன் பொல்லார்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறவில்லை. ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரசல், அற்புதமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், பந்து வீச்சிலும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார்.
இறுதியாக கடந்த வருடம் ஜுலை மாதம் ஒருநாள் போட்டியொன்றில் விளையாடியிருந்த ரசல், நேரடியாக உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெற்றுள்ளார். ரசலின் முழுங்கால் பகுதியில் சிறிய காயம் ஏற்பட்டுள்ள போதும், உலகக் கிண்ணத்துக்கு முன்னர் அவரது உபாதை குணமாகும் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைவர் ரொபர்ட் ஹெய்னஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் சகலதுறை வீரர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர், என்ரே ரசல், கார்லோஸ் பிராத்வைட் மற்றும் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் பெபியன் எலன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும், கிரன் பொல்லார்ட் கடந்த காலங்களில் பந்து வீசுவதை குறைத்துக்கொண்ட நிலையில், அவருக்கான வாய்ப்பு அணியில் வழங்கப்படவில்லை என்பதுடன், சுனில் நரைனுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் விரல் உபாதை காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டத்தை கிரிஸ் கெயில் மற்றும் எவின் லிவிஸ் ஆகியோர் பலப்படுத்தவுள்ளனர். இவர்களுடன் மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாடும் ஷேய் ஹோப்பும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கிரிஸ் கெயிலை பொருத்தவரை மேற்கிந்திய தீவுகள் அணியின் அனுபவம் வாய்ந்த உலகக் கிண்ண வீரராக கருதப்படுகிறார்.
பாகிஸ்தான் உலகக் கிண்ண குழாமில் அமீருக்கு இடமில்லை
அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக் …….
இதுவரையில் கிரிஸ் கெயில் நான்கு உலகக் கிண்ண தொடர்களில் மேற்கிந்திய தீவுகள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இந்த உலகக் கிண்ண தொடருடன் ஓய்வுபெறவுள்ள இவர், தனது ஐந்தாவதும், இறுதியுமான உலகக் கிண்ண தொடரில் இம்முறை விளையாடவுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப துடுப்பாட்ட வரிசைக்கு அடுத்து, முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விடயம், மத்தியவரிசை துடுப்பாட்டம். மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களில் அனுபவம் வாய்ந்த இடதுகை துடுப்பாட்ட வீரர் டெரன் பிராவோ இணைக்கப்பட்டுள்ளார். இவருடன் ஷேய் ஹோப், நிக்கோலஸ் பூரன் மற்றும் சிம்ரொன் ஹெட்மையர் ஆகியோர் மத்திய வரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்தவுள்ளனர். இதில், நிக்கோலஸ் பூரன் மேலதிக விக்கெட் காப்பாளராக அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
அணியின் சுழற்பந்து துறையை பொருத்தவரை, முன்னணி சுழற்பந்து வீச்சாளராக எஸ்லி நேர்ஷ் இணைக்கப்பட்டுள்ளார். சுழற் பந்துவீச்சினை நேர்ஷ் வழிநடத்தவுள்ளதுடன், அவருடன் இணைந்து சகலதுறை வீரரான எலன் சுழற்பந்து வீச்சினை பலப்படுத்தவுள்ளார். இவர்களுடன் அவ்வப்போது கிரிஸ் கெயிலும் சுழற் பந்துவீச்சாளராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இம்முறை உலகக் கிண்ண தொடரை பொருத்தவரை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணிகள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன. அதேபோன்று மேற்கிந்திய தீவுகள் அணியும் தங்களுடைய அணியில் அனுபவம் மற்றும் இளம் வீரர்களை கலந்த வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் இணைத்துள்ளது.
உலகக் கிண்ணத்திற்கான பலமான தென்னாபிரிக்க குழாம்
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை (CA), கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் அடங்கிய ……..
அனுவபம் வாய்ந்த கெமார் ரோச், ஷெனொன் கேப்ரியல் மற்றும் ஷெல்டொன் கொட்ரெல் ஆகியோருடன், 22 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒசானே தோமஸ் உலகக் கிண்ண குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். குறித்த நால்வரும் கடந்த காலங்களில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக உருவெடுத்துள்ளனர்.
இவ்வாறு, இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த 15 பேர் கொண்ட குழாத்தினை மேற்கிந்திய தீவுகள் அறிவித்துள்ளது. இறுதியாக நடைபெற்ற ஒருநாள் தொடரில், உலகின் முதல் நிலை ஒருநாள் அணியான இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியை வழங்கியிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, நம்பிக்கையுடன் உலகக் கிண்ணத்துக்கு தயாராகியுள்ளது.
உலகக் கிண்ணத்தில் தங்களுடைய முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தான் அணியை (மே 31) எதிர்கொள்ளவுள்ளது.
உலகக் கிண்ணத்துக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம்
ஜேசன் ஹோல்டர் (தலைவர்), கிரிஸ் கெயில், என்ரே ரசல், ஷெல்டொன் கொட்ரெல், ஷெனொன் கேப்ரியல், கெமார் ரோச், நிக்கோலஸ் பூரன், எஸ்லி நேர்ஷ், பெபியன் எலன், ஷிம்ரொன் ஹெட்மையர், ஷேய் ஹோப், ஒசானே தோமஸ், கார்லோஸ் பிராத்வைட், டெரன் பிராவோ, எவின் லிவிஸ்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<