மேற்கிந்திய ஏ அணியின் தலைவராக மீண்டும் ஷமார் புரூக் நியமனம்

340

இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட 4 நாள் டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக ஷமார் புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நிறைவுக்கு வந்த கரீபியன் பிரீமியர் லீக் T-20 போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வீரர்களுக்கு இலங்கை அணியுடனான போட்டித் தொடரில் வாய்ப்பு வழங்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை ‘A’ குழாம் அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள இலங்கை ‘A’ அணியின் மேற்கிந்திய தீவுகள்…

இதன்படி, கடந்த காலங்களில் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் போட்டிகளில் அதிகளவு திறமைகளை வெளிப்படுத்திய ஷமார், மீண்டும் மேற்கிந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் 46 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 13 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 2,129 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயற்படக்கூடிய திறமையைக் கொண்ட 28 வயதான ஷமார், கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற இலங்கை அணியுடனான போட்டித் தொடரிலும் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராகச் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 2013ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்று இதுவரை தலா 2 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள 28 வயதான இடதுகை வேகப்பந்து வீச்சாளரான செல்டன் கொட்ரல் முதற்தடவையாக மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இவ்வருடம் நடைபெற்ற கரீபியர் பிரீமியர் லீக் T-20 போட்டித் தொடரில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட சென். கைட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியெட்ஸ் அணிக்காக விளையாடிய செல்டன் 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட 28 வயதான இடதுகை சுழற்பந்து வீச்சாளரான விஷால் சிங், மேற்கிந்திய தீவுகள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த வருடம் இலங்கை அணியுடனான போட்டித் தொடரிலும் விஷால் சிங் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சபீக், சர்பராஸ் ஆகியோரின் போராட்டத்தால் பாகிஸ்தான் உயிர்ப்பான நிலையில்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றுவரும்….

அத்துடன், கிரிக்கெட் உலகில் அதிகளவு உடல் பருமனைக் கொண்ட வீரராக அண்மைக்காலமாக சகலதுறையிலும் பிரகாசித்து வருகின்ற 24 வயதான ராகிம் கோர்ன்வேலும் இவ்வணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற்ற 23 வயதான ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சுனில் அம்ப்ரிஸும் 13 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை அணியுடனான போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடுகின்ற வீரர்களுக்கு எதிர்வரும் காலங்களில் மேற்கிந்திய தீவுகளுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு தெரிவுக்குழுவின் தலைவர் கோர்ட்னி பிரவ்னி தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட 4 நாள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஒக்டோபர் 11ஆம் திகதி ஜமைக்காவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணி விபரம்

ஷமார் புரூக் (தலைவர்), விஷால் சிங் (உப தலைவர்), சுனில் அம்ப்ரிஸ், ஜோன் கேம்பெல், யனிக் கெரியாஹ், ராகிம் கோர்ன்வேல், செல்டன் கொட்ரல், ஜஹ்மர் ஹெமில்டன், மொட்கின் ஹோட்ஜ், டேமியன் ஜெகோப்ஸ், கியொன் ஜோசப், ரெய்னார்ட் ரெவரிட்ஜ், ஒஷானி தோமஸ்