யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி அணிகளுக்கிடையில் வருடா வருடம் இடம்பெறவுள்ள இரண்டு நாள் போட்டியின், ஆரம்ப போட்டி நேற்று முன்தினம் (16) யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
நாட்டின் பாடசாலை கிரிக்கெட்டின் உயர் மடட தொடர்களில் விளையாடி வரும் பலம் வாய்ந்த வெஸ்லி கல்லூரி அணியினை, மத்தியின் மைந்தர்கள் இன்னிங்ஸ் வெற்றி பெற்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றனர்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கையின் திட்டம் பற்றி திமுத் விளக்கம்
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக….
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் தேசிய அணி வீரரும், மத்திய கல்லூரி அணியின் பருவ காலத்திற்கான தலைவருமான வியாஸ்காந்த் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார். அதன்படி, துடுப்பெடுத்தாட களம் நுழைந்த மத்திய கல்லூரி அணியினர் ஓட்டம் ஏதும் பெறாத நிலையிலேயே முதலாவது விக்கெட்டினை பறிகொடுத்தனர். இரண்டாவது விக்கெட்டிற்காக சன்சஜன், இயலரசன் ஜோடி அரைச்சத இணைபாட்டமொன்றினை பகிர்ந்திருக்கையில், இயலரசன் 32 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். வெஸ்லி கல்லூரியின் செமில தொடர்ந்தும் விக்கெட்டுக்களை சாய்த்தவண்ணம் இருக்க, சன்சஜன் மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார். மத்திய கல்லூரி 146 ஓட்டங்களை பெற்றிருக்கையில் ஆறாவது விக்கெட்டாக சன்சஜன் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மத்திய கல்லூரியின் முதற்பதினொருவர் அணிக்கான தனது அறிமுக போட்டியில் ஏழாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவதற்காக களத்திற்கு வந்த கஜன் தனது வழமையான பாணியில் மைதானத்தின் நாற்திசைகளாலும் பௌண்டரிகளை பெற்றுக்கொண்டார். எதுவித பதற்றமுமின்றி துடுப்பாடிய கஜன் 17 பௌண்டரிகள் 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 118 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்திருந்தார்.
Photos: Wesley College vs Jaffna Central College | Under 19 Division 1 | Traditional
கஜனின் சத்தத்தின் உதவியுடன் மத்திய கல்லூரி அணி தமது முதலாவது இன்னிங்சிற்காக 84 ஓவர்களில் 286 ஓட்டங்களைப் பெற்று கொண்டது.
வெஸ்லி கல்லூரி சார்பில் பந்து வீச்சில் செமில 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்திருந்த வெஸ்லி கல்லூரியின் முதல் 5 விக்கெட்டுக்களையும் குறைந்த ஓட்டங்களுக்கு மத்தியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சாய்த்தனர். இயலரசன் அவற்றுள் 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வேகப்பந்துவீச்சாளர்களிடமிருந்து பந்தினை தமது கைகளில் எடுத்த சுழல் பந்துவீச்சாளர்கள் தமது கடமையினை செவ்வனே செய்து முடித்தனர்.
வெஸ்லி கல்லூரி அணியினர் 40.1 ஓவர்களில் வெறுமனே 96 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். அதிகபட்சமாக பின்வரிசை வீரர் ஆகிப் 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
முதலாவது இன்னிங்சில் 190 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற மத்திய கல்லூரியினர், கொழும்பு தரப்பினரை இரண்டாவது இன்னிங்சுக்காகவும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடுமாறு பணித்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸில், வியாஸ்கந்த் தலைமையிலான மத்தியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வெஸ்லி கல்லூரியின் விக்கெட்டுக்களை விரைவாக சரித்தனர். மிகவும் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய வெஸ்லி கல்லூரியினர் 71 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். அதிகபட்சமாக அனுடித் 24 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்திருந்தார்.
தெற்காசிய போட்டிகளுக்குத் தகுதி பெற்ற சண்முகேஸ்வரன்: சபான், அரவிந்த் வெற்றி
தெற்காசிய விளையாட்டு விழாவில்…
பந்துவீச்சில் வியாஸ்கந்த் 4 விக்கெட்டுக்களையும், இளைய வீரர் கவிதர்சன் 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.
இந்த பருவகாலத்தில் பிரிவு மூன்றின் இறுதிப்போட்டியினை இலக்கு வைத்திருக்கும் மத்திய கல்லூரி அணியினருக்கு, இந்த வெற்றியானது மிகுந்த உற்சாகத்தினை அளிக்கும் அதேவேளை, கடந்த சில வாரங்களாகவே பருவகாலத்திற்கான தயார்படுத்தல்களினை ஆரம்பித்திருக்கும் நாட்டின் உயர் மட்ட பாடசாலை கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடிவரும் வெஸ்லி கல்லூரிக்கு இந்த தோல்வி அதிர்ச்சியாகவே இருக்கும். பருவகால போட்டிகள் ஆரம்பமாக முன்னர் அவர்கள் அணியை பலமாக கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருப்பதனை இந்த போட்டியின் முடிவு உணர்த்தியிருக்கின்றது.
இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த த வெஸ்லி – யாழ் மத்தி அணிகளிடையேயான தொடர் இனி வருடாந்தம் இடம்பெறும் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியையும் இரு கல்லூரி சமூகத்தினரும் அறியத்தந்துள்ளனர்.
போட்டியின் சுருக்கம்
யாழ் மத்திய கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 286 (84) – கஜன் 102, சன்சஜன் 41, செமில 5/75, ராகுல் 3/63
வெஸ்லி கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 96 (40.1) – ஆகிப் 33, இயலரசன் 4/20, வியாஸ்கந்த் 2/24, விதுஷன் 2/25
வெஸ்லி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 71 – வியாஸ்கந்த் 4/30, கவிதர்சன் 3/3
போட்டி முடிவு – இன்னிங்ஸ் மற்றும் 119 ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<