கடந்த வெள்ளிக்கிழமை வெஸ்லி மற்றும் திரித்துவக் கல்லூரிகளுக்கு இடையிலான ரக்பி போட்டியில் இடம்பெற்ற முறுகல் சம்பவத்துக்காக வெஸ்லி கல்லூரி அதிபர், திரித்துவக் கல்லூரிக்கு நேரில் சென்று அவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ள சம்பவம் அக்கல்லூரி அதிபரினதும், பாடசாலையினதும் பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.
பாடசாலைகளுக்கு இடையிலான பருவகால ரக்பி போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்தன. இதன் முதல் போட்டியாக கொழும்பு வெஸ்லி கல்லூரிக்கும் கண்டி திரித்துவக் கல்லூரிக்குமிடையிலான பலப்பரீட்சை நடைபெற்றது. குறித்த போட்டியின்போது வெற்றியீட்டும் நிலையில் இருந்த கண்டி திரித்துவக் கல்லூரி அணி, 10ஆவது ட்ரையை வைத்த பொழுது இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு மோதல் ஏற்பட்டது.
சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளுமா இசிபதன கல்லூரி?
ஏற்கனவே தோல்வியை தழுவும் நிலையில் இருந்த வெஸ்லி கல்லூரி வீரரொருவர், எதிரணிக்காக ட்ரை வைத்த வீரரோடு தனது தோல் பட்டையினால் கடுமையான முறையில் மோதியதால், இரு அணியினருக்கும் இடையில் சண்டை உருவானது. அதேநேரம், அதை பார்த்துக்கொண்டிருந்த இரு கல்லூரிகளினது ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட, நிலைமை மோசமடைந்தது. எனினும், அங்கிருந்த பொலிசார் மற்றும் கள நடுவர்கள் தலையீடு செய்து குழப்ப நிலையை சமரசம் செய்தனர்.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெஸ்லி கல்லூரி அதிபர் திரு. அவங்க பெர்னாண்டோ, உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றின் மூலம் குறித்த சம்பவத்துக்கான மன்னிப்பை கோரிய அதேநேரம், குறித்த சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, அதனுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த திரு. அவங்க பெர்னாண்டோ, ”நான் தனிப்பட்ட ரீதியில் திரித்துவக் கல்லூரி அதிபருடன் கதைத்தேன். மேலும், நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கோரினேன். அத்துடன், என்னுடைய மாணவர்களின் தவறான நடத்தைக்காக திரித்துவக் கல்லூரி ரக்பி அணியிடமும் எனது மாணவர்கள் சார்பாக மன்னிப்புக் கேட்டேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், ”நான் தனிப்பட்ட ரீதியில் எங்களுடைய ரக்பி அணியின் தலைவர் மற்றும் துணைத் தலைவருடன் திரித்துவக் கல்லூரிக்கு சென்று அவர்களுடைய ரக்பி அணியிடம் மன்னிப்பு கேட்கவுள்ளோம்.
இதன்மூலம் எங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் வலுவான உறவினை மேம்படுத்தி முன்பிருந்ததை போலவே எதிர்காலத்திலும் எமக்கிடையிலான தொடர்பை கொண்டு செல்வோம்” என்றார்.
தெரிவித்தது போன்றே, வெஸ்லி கல்லூரியின் அதிபர், ரக்பி அணியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் திரித்துவக் கல்லூரிக்கு நேரில் சென்று அவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
அதேநேரம், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், அதற்கான ஒழுக்க நடவடிக்கைகளை எடுக்க கல்லூரியின் உரிய அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பெருமளவான பாடசாலைகள் ஒழுக்கத்தையோ அல்லது விளையாட்டின் பெருமதியினையோ கவனத்தில் கொள்ளாது எவ்வாறெனினும் போட்டிகளில் வெற்றியீட்ட வேண்டும் என்று விளையாட்டு வீரர்களை கட்டாயப்படுத்துகின்ற இந்த காலகட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த செயல்பாட்டை ThePapare.com பாராட்டுகின்றது.
வெஸ்லி கல்லூரி அதிபரின் இந்த செயல், ஆர்வத்தையும் நம்பிக்கையும் தருகின்ற அதேவேளை, கூச்சலிட்டு சண்டையுடன் விளையாடும் கல்லூரிகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணத்தையும் வழங்கியுள்ளது.