15 வயதின்கீழ் பாடசாலை கிரிக்கெட்டில் 700 ஓட்டங்கள் குவித்து சாதனை

446

இலங்கையின் 15 வயதின்கீழ் பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்து வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணி புதிய வரலாறு படைத்தது.

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கமும், இலங்கை கிரிக்கெட் சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 15 வயதின்கீழ் பிரிவு 1 (டிவிஷன்-1) பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில் வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணிக்கும், ராகம பசிலிக்கா கல்லூரி அணிக்கும் இடையிலான போட்டி நேற்று (25) ராகமயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 708 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் அந்தக் கல்லூரியின் அணித்தலைவர் இனேஷ் துலஞ்சன 130 பந்துகளில் 344 ஓட்டங்களைப் பெற்று அதிரடி காண்பித்தார். அவருடைய இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் மற்றும் 44 பௌண்டரிகள் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 200 ஓட்டங்களில் இருந்து 300 ஓட்டங்களை அடைவதற்கு இனேஷ் வெறும் 29 பந்துகளை மட்டுமே செலவிட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். மேலும், இந்தப் போட்டியில் ஜோசப் வாஸ் கல்லூரி அணியின் இன்னிங்ஸில் நான்காவது விக்கெட்டுக்காக இனேஷ் துலஞ்சன மற்றும் நெவின் சென்கித் ஜோடி 452 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர்.

இதனிடையே, ஜோசப் வாஸ் கல்லூரியின் துடுப்பாட்டம் சார்பில் நெவின் சென்கித் 111 ஓட்டங்களையும், விமுக்தி இஷார 109 ஓட்டங்களையும், டொமினிக் பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் 709 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராகம பசிலிக்கா கல்லூரி அணி, 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

பந்துவீச்சில் ஜோசப் வாஸ் கல்லூரியின் தெனெத் நிமெசர 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி, வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணி, 665 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

போட்டியின் சுருக்கம்

ஜோசப் வாஸ் கல்லூரி அணி – 708/5 (50) – இனேஷ் துலஞ்சன 344, நெவின் சென்கித் 111, விமுக்தி இஷார 109, டொமினிக் பெர்னாண்டோ 57*, ஹங்ச மிஹிரங்க 39

ராகம பசிலிக்கா கல்லூரி அணி – 43/10 (17) – தெனெத் நிமெசர 6/07

முடிவு – ஜோசப் வாஸ் கல்லூரி அணி 665 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<