பராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிரியந்தவிற்கு பலத்த வரவேற்பு மற்றும் பதவி உயர்வு

349
Dinesh Priyantha

பராலிம்பிக் – 2016 போட்டிகளில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை பெற்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத் தாய்நாட்டிற்கு வருகை தந்ததும், அவருக்கு பலத்த வரவேற்பு மற்றும் பதவி உயர்வு என்பன வழங்கப்பட்டுள்ளன.

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள ஒலிம்பிக் அரங்கில் இம்மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான பராலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக வீர, வீராங்கனைகள் ஒன்பது பேர் பங்கு கொண்டனர்.

இதில் இலங்கை ராணுவப் படையின் கஜபா படைப்பிரிவில் பணியாற்றி, தற்பொழுது ஓய்வு பெற்றுள்ள தினேஷ் பிரியந்த ஹேரத், ஆண்களுக்கான எப் 46 பிரிவுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டார். குறித்த போட்டியில் 58.23 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்த அவர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். இவரது பிரிவுக்கான போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்க பதக்கத்தையும், சீன வீரர் குவோ சுன் லியாங் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் இவ்வருடத்திற்கான பராலிம்பிக் போட்டிகள் அனைத்தும் நேற்று நிறைவடைந்தன. அதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு கட்டுனாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வரவேற்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, மிகவும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்வுகளுடன் அவர் நாட்டிற்கு வருகை தந்தார்.

அதன் பின்னரும் அவரை வரவேற்று, கௌரவப்படுத்தும் சிறப்பு நிகழ்வொன்றும் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரிகள், இலங்கை ஒலிம்பிக் குழுவின் முக்கிய அதிகாரிகள், விளையாட்டுத்துறை அதிகாரிகள் உட்பட அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வின்போது, தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு பெரும் தொகை பணப்பரிசு மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. மேலும் அவரது பயிற்றுவிப்பாளர் ரோஹித பெர்னாண்டோவுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

அது மட்டுமன்றி, பராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடிக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு இந்நிகழ்வின்போது ராணுவப் படையின் கோப்ரல் தரத்திலிருந்து சர்ஜன்ட் தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்