பிரான்ஸை விட எமது அணி சிறந்த அணியாக இருந்தது – ஜெர்மனி பயிற்சியாளர்

319
We were the 'better team' against France - Germany coach Joachim Low

ஐரோப்பிய கிண்ண  கால்பந்து போட்டியின் அரை இறுதியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உலக சம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி குறித்து ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோ தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

15வது ஐரோப்பிய கிண்ண (யூரோ) கால்பந்து போட்டி பிரான்ஸ்  நாட்டில் நடந்து வருகிறது. இதன் முதலாவது அரை இறுதிப்போட்டியில் போர்த்துக்கல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வேல்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு மார்செலியில் நடந்த 2வது அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, நடப்பு உலக சம்பியன் ஜெர்மனியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2014ம் ஆண்டு உலக கோப்பை கால் இறுதிப்போட்டியில் ஜெர்மனியிடம் கண்ட தோல்விக்கு பிரான்ஸ் அணி பழிதீர்த்தது.

பெரிய அளவிலான போட்டிகளில் ஜெர்மனி, பிரான்ஸ் அணியிடம் தோல்வி அடைவது கடந்த 58 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

தோல்வி குறித்து ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோ கருத்து தெரிவிக்கையில், ‘பிரான்ஸ் அணியை விட நாங்கள் தான் சிறப்பாக செயல்பட்டோம். வலுவான அணியாகவும் இருந்தோம். கோல் அடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக அதை கோலாக்க முடியாமல் போனது. உண்மையிலேயே இந்த ஆட்டத்தில் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை.

வீரர்கள் தங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். அவர்கள் மீது குற்றம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பெனால்டி வழங்கிய நடுவரின் முடிவு குறித்து நான் எதுவும் கருத்து சொல்லவில்லை. நடுவரின் முடிவு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். பெனால்டி அளித்தது சரியான முடிவா? என்பது எனக்கு தெரியாது. பாஸ்டியன் ஸ்வெய்ன்டீகர் பந்தை கையால் கையாண்டதை குறை சொல்ல முடியாது. இது மாதிரியான ஆட்டத்தில் இது போல் நடப்பது சகஜம் தான்என்றார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்