பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியது போல, பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரையும் வெல்ல வேண்டும் என்பதுதான் எமது அடுத்த குறிக்கோளாக உள்ளது என தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பதில் தலைவராகச் செயற்பட்ட டீன் எல்கர் தெரிவித்தார்.
தென்னாபிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவுற்றது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்னாபிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுனில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா.
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை வைட் வொஷ் செய்த தென்னாபிரிக்கா
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் ….
இந்த நிலையில், ஜொஹனஸ்பேர்க்கில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டில் தென்னாபிரிக்கா 107 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3-0 என பாகிஸ்தானை வெள்ளையடிப்புச் செய்தது.
குறித்த போட்டியில் தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராகச் செயற்பட்ட டீன் எல்கர் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில்,
”இந்த வருடத்தை வெற்றியுடன் ஆரம்பிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்ற வேண்டும் என நாங்கள் வீரர்களிடம் தெரிவித்து இருந்தோம். எனினும், இப்பருவகாலத்தில் எமக்கு வழங்கப்பட்ட இலக்கில் அரைவாசியை தற்போது பூர்த்தி செய்துவிட்டோம். இதேபோல, பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரையும் வெல்ல வேண்டும் என்பதுதான் எமது அடுத்த குறிக்கோளாக உள்ளது.
பாகிஸ்தான் அணியை 3 டெஸ்ட் போட்டிகளிலும் வீழ்த்தியுள்ளோம். ஆனாலும், பாகிஸ்தான் அணியுடன் விளையாடியதை இலகுவான விடயமாகக் கருதவில்லை. எமது வேகப்பந்துவீச்சாளர்கள் மீது நாம் மிகுந்த நம்பிக்கை வைத்தோம். எமக்கு தேவையான வெற்றியை அவர்கள் சரியான நேரத்தில் பெற்றுக் கொடுத்தார்கள்” என தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் வெற்றியினை அடுத்து டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் தென்னாபிரிக்க அணி 110 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
மேலும் வெள்ளையடிப்புக்கு உள்ளான பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளை இழந்து 6ஆவது இடத்திலிருந்து 88 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திற்கு பின்னிறங்கி உள்ளது. இதன்மூலம் 91 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி 6ஆவது இடத்திற்கு முன்னேறியது.
தென்னாபிரிக்காவின் வெற்றியால் இலங்கைக்கு தரவரிசையில் முன்னேற்றம்
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0…..
இதேநேரம், சர்வதேச டெஸ்ட் தரப்படுத்தலில் முன்னிலை அணியாக மாறுவதற்கு இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வெற்றி கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் எல்கர் தெரிவித்தார்.
இதுஇவ்வாறிக்க, இம்மாதம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2 டெஸ்ட் மற்றும் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவினால் 87 புள்ளிகளுடன் மீண்டும் 7ஆவது இடத்துக்கு பின்தள்ளப்படும்.
எனினும், இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர்களையும் 1-0 என்று வெற்றி பெற்றால் அல்லது சமநிலையில் முடித்தால் இலங்கை அணி 6ஆவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும்.
இதேவேளை, இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், இலங்கை அணி இறுதியாக கடந்த 2016/17 காலப்பகுதியில் தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது, இலங்கை அணி டெஸ்ட் தொடரை 3-0 எனவும், ஒரு நாள் தொடரை 5-0 எனவும் வைட்வொஷ் முறையில் இழந்தது. எனினும், டி-20 தொடரை இலங்கை அணி 2-1 எனக் கைப்பற்றியது.
இதனையடுத்து கடந்த வருடம் தென்னாபிரிக்க அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதன்போது, இலங்கை அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்ற, ஒரு நாள் தொடரை 3-2 என தென்னாபிரிக்காவும், ஒற்றை டி-20 போட்டியை இலங்கை அணியும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<