தற்போது இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு FIFA வினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தான் எந்தவித நிபந்தனைகளும் இன்றி யாருடனும் இணைந்து செயற்படுவதற்கு தயார் என்று இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது. குறித்த தேர்தல் இடம்பெற இருந்த இறுதித் தருவாயில், தலைவர் பதவிக்கு போட்டியிடவிருந்த ஜஸ்வர் உமர் விளையாட்டுத் துறை அமைச்சினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
- FIFAவின் இலங்கை மீதான தடையை நீக்க என்ன செய்ய வேண்டும்?
- இலங்கை கால்பந்துக்கு FIFA தடை
- கால்பந்து சம்மேளனத்திற்கு எதிரான தற்காலிக தடை நீக்கம்
பின்னர், இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீ ரங்கா இலங்கை கால்பந்தின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர் தலைமையிலான புதிய நிர்வாக உறுப்பினர்கள் கடந்த வாரம் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்
இவ்வாறான ஒரு நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனங்களின் சங்கம் (FIFA) கடந்த 21ஆம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில் இலங்கை கால்பந்து சம்மேளனம் மீது இடைக்கால தடை விதித்தது.
இவ்வாறான ஒரு நிலையில், தன்னை தேர்தலில் போட்டியிட விடாமை மற்றும் FIFAவின் இலங்கை மீதான தடை என்பன குறித்து விளக்கமளிக்கும் ஒரு ஊடக சந்திப்பை ஜஸ்வர் உமர் திங்கட்கிழமை (23) ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது இலங்கை மீதான தடை குறித்து கருத்து தெரிவித்த அவர், ”FIFAவினால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ள அதன் சட்டதிட்டங்கள் ஒழுங்காக பின்பற்றப்படாமையினாலேயே எம்மீது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கால்பந்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்குமே ஒரு கருப்புப் புள்ளியாக உள்ளது.
இந்த தடையினால் கால்பந்து சம்மேளனம் தடைக்கு உள்ளாவது மாத்திரமன்றி எமது வீரர்கள், சர்வதேச நடுவர்கள், போட்டி மத்தியஸ்தர்கள் என அனைத்து தரப்பினரும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாத ஒரு கவலையான நிலைமை உருவாகி உள்ளது” என்றார்.
மேலும், இந்த தடையில் இருந்து இலங்கையை நீக்க தனது தரப்பில் இருந்து கொடுக்கப்படும் ஆதரவு குறித்து கருத்து தெரிவித்த அவர், ”கால்பந்து என்பது எமது இரத்தத்துடன் உள்ள ஒன்று, நாம் இந்த விளையாட்டை முழுமையாக நேசிக்கின்றோம். எனவே, எம் மீது விதித்துள்ள இந்த தடையை நீக்குவதற்கு நாம் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது.
இதற்காக நான் அனைத்து தரப்பினரையும் அழைக்கின்றேன். எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி இந்த விடயத்திற்காக யாருடனும் இணைந்து செயற்பட நான் தயாராக உள்ளேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். ஏனைய அனைத்து விடயங்களையும் விட எமக்கு இப்பொழுது முதன்மையாக உள்ள தேவை இந்த தடையை நீக்குவதாகும்” என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, நடந்து முடிந்த பொதுத் தேர்தலின்போது இறுதி நேரத்தில் தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த ஜஸ்வர், ”இது எனக்கு மட்டும் இன்றி முழு விளையாட்டுத் துறைக்கும் இழைக்கப்பட்ட ஒரு அநீதி. இவ்வாறான ஒரு அநீதி எனக்கல்ல, யாருக்கும் இழைக்கப்பட கூடாது. எனினும், எனக்கு எதிராக நடந்த இந்த அநீதிக்கு எதிராக நான் போராடி நிச்சயம் சட்ட ரீதியில் வெற்றி பெறுவேன்” என்றார்.
>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<