இலங்கை அணியின் தோல்விகள் குறித்து விசாரணை

619

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பின்னடைவுக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் புதிய தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் தடவையாக ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு தகுதிகாண் சுற்றில் விளையாட நேரிட்டுள்ளமை மிகவும் வேதனை அளிப்பதாகவும், குறித்த தகுதிகாண் சுற்றுக்கான திட்டங்கள், ஆயத்தங்கள் தொடர்பில் பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகளுடன் விசேட பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கான நியமனங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது.

இந்த நிலையில், குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய பதிலளிக்கையில்,

”எம்மீது நம்பிக்கை வைத்து இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் அங்கத்தவர்களாக நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் குழுவானது கிரிக்கெட் வியூகத்தில் எந்தவொரு பாரிய மாற்றத்தையும் செய்யாது. எனவே இதுதொடர்பில் எவரும் பயப்பட வேண்டியதில்லை. இதற்கு முன் அரவிந்த டி சில்வா தொழில்நுட்பக் குழுவின் தலைவராக பணியாற்றியிருந்தார்.

இதன்படி, இந்தப் புதிய தொழில்நுட்ப குழு இலங்கை அணியின் அண்மைக்கால தோல்விகளுக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட கிரிக்கெட் முகாமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதேபோல, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களாக அதால பாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்வது எப்படி?, அதற்கு எவ்வாறான தீர்வுகளை எம்மால் வழங்க முடியும் என்பன

உள்ளிட்ட விடயங்களை விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒத்துழைப்புடன் முன்னெடுப்பது தான் எமது பிரதான குறிக்கோளாகும்” என தெரிவித்தார்.

அத்துடன், கடந்த போட்டிகளின் தோல்விகள் தொடர்பில் தமது குழு விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும் அவர்கள் தமது கடமைகளை நிறைவேற்றினால் பிரச்சினை ஏற்படாது எனவும் சனத் ஜயசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.

“1979ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை அணி ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் களமிறங்கவுள்ளது. இது ஒரு துரதிஷ்டமான நிலை, முன்னாள் தலைவராக தனிப்பட்ட முறையில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இலங்கை அணியின் அண்மைக்கால தோல்விகள் குறித்து விசாரிக்க வேண்டும். அதற்காக கிரிக்கெட் தேர்வுக் குழு, பயிற்சியாளர்கள், கிரிக்கெட் சபையின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

குறிப்பாக, இந்த தோல்விகளுக்கு தேர்வுக் குழு எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுடன், தோல்விக்கான பொறுப்பையும் அவர்கள் ஏற்க வேண்டும். எமது வீரர்கள் திறமையானவர்கள். கிரிக்கெட் விளையாடுகின்ற சுதந்திரமான ஒரு மனநிலையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

எது எவ்வாறாயினும், இலங்கை அணியை உலகக் கிண்ணத்துக்கு அழைத்துச் செல்வதே எங்களது நோக்கம். தேவைப்படும் போது கடுமையான தீர்மானங்களை எடுக்கத் தயார“ எனவும் அவர் கூறினார்.

இதனிடையே, நியூசிலாந்துடன் நடைபெற்ற மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை தோல்வியை தழுவியமை தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

”நியூசிலாந்துடன் நடைபெற்ற டெஸ்ட், அதன்பிறகு நடைபெற்ற ஒருநாள் மற்றும் T20i தொடர்களை நாம் பறிகொடுத்தோம். அந்த மூன்று தொடர்களிலும் இலங்கை வீரர்களுக்கு என்ன நடந்தது என்பதை முதலில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எமது அணி முகாமைத்துவம், பயிற்சியாளர்கள் அனைவரும் அணியுடன் இருந்தும் அவர்களால் அணிக்கு எந்தவொரு பயன்களையும் ஏன் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது என்பதை தேடிப் பார்க்க வேண்டும்.

அதுமாத்திரமின்றி, எமது வீரர்களால் ஏன் திறமைகளை வெளிப்படுத்த முடியவில்லை என்பதையும் ஆராய வேண்டும். இதற்கு வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எனவே, இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்காக நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு தீர்வு தொடர்பிலும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்துவோம்” என சனத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் சனத் கருத்து தெரிவிக்கையில்,

”இலங்கை அணி முகாமைத்துவம் அடுத்து என்ன திட்டங்களை வைத்துள்ளார்கள் என்பதை தொழில்நுட்பக் குழு என்றவகையில் நாங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் ஜுலை மாதம் ஜிம்பாப்வேயில் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதற்கான திட்டங்கள் என்ன என்பதை எமக்கு தெரியப்படுத்த வேண்டும். அந்த திட்டங்களை எழுத்து மூலம் எமக்கு சமர்பிக்குமாறு நாங்கள் கோரிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளோம். கிரிக்கெட் மூலம் தான் முழு உலகமும் இலங்கை என்ற நாட்டை அறிந்து கொண்டது. எனவே, இலங்கை கிரிக்கெட்டில் என்ன நடக்கின்றது என்பதை எமது மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்” என கூறினார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஒழுக்க விதிமுறை கோவையொன்றை இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்மொழிய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<