இம்முறை உலகக் கிண்ணத்தில் ஒரே தவறை மீண்டும் மீண்டும் எமது அணி செய்து வருவது கவலையளிப்பதாகவும், தமது வீரர்கள் பொறுப்புடன் விளையாடினால் தான் வெற்றி பெற முடியும் என ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் குல்படீன் நையிப் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று (15) நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த தென்னாபிரிக்க அணி, இம்முறை உலகக் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியைப் பதிவுசெய்ய, ஆப்கானிஸ்தான் கடந்த போட்டிகளைப் போல மீண்டும் ஒருமுறை அனைத்து துறைகளிலும் பின்னடைவை சந்தித்து நான்காவது தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், தென்னாபிரிக்க அணியுடனான தோல்விக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்படீன் நையிப் அளித்த பேட்டியில்,
நாங்கள அதே தவறை மீண்டும் செய்தோம், நாங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயற்பட்டோம், ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் மத்திய ஓவர்களில் பொறுப்புடன் விளையாடவில்லை. ரஷீன் கானுடன் சேர்த்து 9 ஆம் இலக்கம் வரை விளையாடுவதற்கு எமது அணியில் நிறைய துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர்.
உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு முதல் வெற்றி
This clip will only be available in Sri Lanka for viewing up…
ஆனால் மீண்டும் ஒருமுறை நாங்கள் 50 ஓவர்கள் கிரிக்கெட்டை முழுமையாக விளையாடவில்லை. கடந்த காலங்களில் நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடியிருந்தோம். உண்மையில் இவ்வாறான போட்டித் தொடர்களில் நிறைய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
எனவே இந்தப் போட்டியில் நாங்கள் நாணய சுழற்சியை இழந்தாலும், துடுப்பாட்டத்தின் போது எமது வீரர்கள் மத்திய ஓவர்களில் பொறுப்புடன் விளையாடவில்லை என்றார்.
இதேநேரம், நஜிபுல்லாஹ்வுக்கு இந்தப் போட்டியில் ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அஸ்கர் ஆப்கான் சிரேஷ்ட வீரர் என்பதால் அவருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பளித்தோம். கடந்த சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். ஆனால் அவரால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை.
அதேபோல, நஜிபுல்லாஹ் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர். எனவே எதிர்வரும் போட்டிகளில் அவருக்கு அணியில் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்த குல்படீன், எஞ்சியுள்ள போட்டிகளில் நாங்கள் இன்னும் சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணி, தமது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்வரும் 18 ஆம் திகதி சந்திக்கவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<