பாகிஸ்தான் அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியது இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு காரணம் என தெரிவித்த அணியின் தலைவர் லஹிரு திரிமான்ன, குறித்த போட்டியில் 50 சதவீதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியதாகவும், அடுத்த போட்டியில் எஞ்சிய 50 சதவீதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என கூறினார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (30) கராச்சியில் நடைபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 305 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 46.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இலங்கை அணியின் தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட லஹிரு திரிமான்ன,
”எமது அணியில் அனைத்து வீரர்களுக்கும் துடுப்பெடுத்தாடுகின்ற திறமை உண்டு. எனினும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வீரர்கள் சர்வதேசப் போட்டியொன்றில் விளையாடினர். ஆனால் அதற்காக வேண்டி அவர்களை மன்னிக்க முடியாது. எனவே, நாங்கள் மிக விரைவில் இதிலிருந்து மீண்டு வருவோம் என நான் நினைக்கிறேன்” என்றார்.
ஷானக, ஷெஹானின் சாதனை இணைப்பாட்டம் வீண்
இலங்கை அணிக்கு எதிராக கராச்சி மைதானத்தில்…….
இலங்கை அணி ஆரம்பத்தில் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனவே இலங்கை அணியின் தோல்விக்கு முன்வரிசை வீரர்களின் மோசமான துடுப்பாட்டம்தானா காரணம் என ஊடகவியிலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு லஹிரு திரிமான்ன பதில் தெரிவிக்கையில்,
உண்மையில் எமது தோல்விக்கு அதுவும் முக்கிய காரணமாக இருந்தது. முதல் 10 ஓவர்களில் நாங்கள் சிறப்பாக துடுப்பாடவில்லை. எனினும், ஷெஹான் ஜயசூரியவும், தசுன் ஷானக்கவும் பெறுமதியான இணைப்பாட்டமொன்றை மேற்கொண்டு அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். எனினும், எம்மால் வெற்றிபெற முடியாமல் போனது.
நாங்கள் 300 என்ற ஓட்ட இலக்கை துரத்தியடிக்கும் போது முன்வரிசையில் வந்து விளையாடுகின்ற நான்கு பேரில் குறைந்த பட்சம் ஒருவராவது நின்று விளையாட வேண்டும். ஆனால், அதை எம்மால் செய்ய முடியாமல் போனது. எனவே, எமக்கு திருத்திக்கொள்ள இன்னும் நிறைய இடங்கள் உள்ளன.
மறுபுறத்தில் அவர்களது பந்துவீச்சாளர்களும் நேர்த்தியான முறையில் பந்துவீசியிருந்தனர். இதனால் எமக்கு வேகமாக துடுப்பெடுத்தாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, அடுத்துவரும் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
எனவே, இந்தப் போட்டியில் தோல்வி அடைவதற்கான முழு பொறுப்பையும் அனைத்து வீரர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், அடுத்த போட்டியில் அந்த தவறை திருத்திக் கொண்டு விளையாட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையுடன் சதமடித்து கோஹ்லியின் சாதனையை தகர்த்த பாபர் அசாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட……
இதேநேரம், 5ஆம் இலக்கத்தில் களமிறங்கியதற்கான காரணத்தை வெளியிட்ட திரிமான்ன, ”எங்களிடம் சமபலமிக்க அணியொன்று உள்ளது. அதிலும் ஆறு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் அணியில் உள்ளனர். எனவே, அந்த வீரர்களுக்கும் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
எனவே, இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளது. அந்தப் போட்டியில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் என தெரிவித்தார்
இதேவேளை, அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களின் திறமைகள் தொடர்பில் திருப்தி கொள்ள முடியுமா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், அணியின் தலைவராக நான் மிகவும் திருப்தி அடைகிறேன். எமக்கு இந்தத் தொடரில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற வேண்டியுள்ளது.
எனினும், இந்தப் போட்டியில் ஷெஹான் மற்றும் தசுன் விளையாடிய விதம் பாராட்டுக்குரியது. ஏனெனில் நாங்கள் முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தோம். எனவே, எமது வீரர்களின் திறமை குறித்து உண்மையில் நான் திருப்தி அடைகிறேன்.
தோல்வியிலும் சாதனை படைத்த ஷெஹான் ஜயசூரிய – தசுன் ஷானக்க ஜோடி
சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் …….
எனவே, அடுத்த போட்டிகளில் நிறைய இடங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். எமது பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ஒருசில இடங்களில் நேர்த்தியான முறையில் பந்துவீசியிருந்தோம். ஆனால் தேவையில்லாத இடங்களில் அதிக ஓட்டங்களை கொடுத்து விட்டோம்.
அதேபோல தான் துடுப்பாட்டத்திலும், களத்தடுப்பிலும் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டும். நாங்கள் இந்தப் போட்டியில் 50 சதவீதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். இன்னும் 50 சதவீதம் நாங்கள் கட்டாயம் முன்னேற்றம் காண வேண்டும் என கூறினார்.
இதேநேரம், ஷெஹான் ஜயசூரியவின் உபாதை குறித்து கருத்து வெளியிட்ட திரிமான்ன, ஷெஹானுக்கு காலில் தசைப்பிடிப்பொன்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அது மிகப் பெரிய பாதிப்பினை அவருக்கு கொடுக்காது என நான் நினைக்கிறேன் என்றார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<