தற்போது வெற்றிகரமாக அமையாத இலங்கை கிரிக்கெட் அணி குறித்து பலராலும் பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவும் தற்போதைய தனது தாயக அணி தொடர்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழும் அனைத்து அணிகளினதும் வரலாற்றை எடுத்துப்பார்க்கும்போது, அனைத்து அணிகளுக்கும் ஒரு மோசமான காலம் காணப்பட்டிருக்கின்றது. அனைத்து நாடுகளும் அந்த மோசமான காலகட்டத்தினை கடந்தே இன்று சாதனை அணிகளாக மாறியுள்ளன.
சனத் உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு ராஜினாமா
தற்போது நடைபெற்றுவரும் இந்தியாவுடனான தொடரை அடுத்து தமது பதிவியில்…
இப்படியாக சாதித்த அணிகளை இலங்கை முன்னுதாரணமாக எடுக்கும் எனில், மீண்டும் சவால் மிக்க ஒரு அணியாக வலம் வர முடியும் என குமார் சங்கக்கார மேற்கிந்திய தீவுகளில் இருந்து இலங்கையின் செய்தி நாளிதழ்களில் ஒன்றான தி சன்டே டைம்ஸ் (The Sunday Times) இற்கு வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா போன்ற நாடுகள் மோசமான நிலைமை ஒன்றில் காணப்பட்டிருந்த போது சில மாற்றங்களை மேற்கொண்டது. அந்த மாற்றங்கள் அந்நாட்டினை இன்று ஒரு எடுத்துக்காட்டான அணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது என்னும் விதத்தில் கருத்து தெரிவித்த சங்கா, இவ்வாறு மேலும் பேசியிருந்தார்.
“அவர்கள் (இந்திய அணியினர்), தங்களது கிரிக்கெட்டின் முழுக்கட்டமைப்பிலும் மாற்றங்களை கொண்டு வந்தனர். அவுஸ்திரேலிய அணியும் அவ்வாறே, இங்கிலாந்தும் அப்படியே. நாம் ஏன் அவர்களுக்குப் பின்னால் நிற்கின்றோம்? நாம் உதாரணங்களை பார்த்து பழகுபவர்களாயின் நல்ல உதாரணங்களை பார்த்து அவற்றினை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.“ எனக் குறிப்பிட்டு தற்போதைய இலங்கை அணி, வெற்றிகரமாக செயற்படும் அணிகளிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியத்தினையும் உணர்த்தியிருந்தார்.
திறமைமிக்க வீரர்களை இனங்கண்டு அவர்களுக்கு அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது அணியினை பலப்படுத்துவதோடு மட்டுமன்றி அவர்களை மிகவும் சிறந்த வீரர்களாக மாற்ற வழிவகைகள் செய்யும் என்றும் சங்கா குறிப்பிட்டார்.
அவ்வாறான திறமையான வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டு மீண்டும் அவர்களை நிரூபிக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருப்பது மிகவும் சிறந்த செயல் என்னும் வகையிலும் குறித்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
“சந்திமால் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என நினைக்கின்றேன். டெஸ்ட் அணித் தலைவரான அவர் தற்போது குழாத்தில் இருப்பதும் மகிழ்ச்சியான விடயம் ஒன்றே. ஒரு நாள் போட்டிகளில் ஆடுவது அவருக்கு அவ்வளவு சிரமமான ஒரு விடயம் இல்லை. “
“அவரது அண்மைய பதிவுகள் சற்று மோசமாக அமைந்திருக்கலாம். இருப்பினும் இவ்வாறான வீரர்கள் இனம்காணப்படுமிடத்து, நாம் அவர்களுக்கு நிலையான இடமொன்றை வைத்து தொடர்ந்தும் வாய்ப்பளிக்க வேண்டும். திரிமான்னவும் அவ்வாறே. இவ்வாறான வீரர்கள் உயர்தரமான ஆட்டத்தினை காட்டக்கூடியவர்கள் “ என சங்கக்கார குறிப்பிட்டிருந்தார்.
சங்காவை அடுத்து இலங்கை அணியை உற்சாகமூட்டும் மஹேல
இளம் வீரர்களை அதிகமாகக் கொண்ட இலங்கை அணிக்கு அண்மைக்காலமாக…
இன்னும் , இலங்கை அணி சார்பாக ஒரு தொழில்சார் கிரிக்கெட் வீரராக அதிக ஓட்டங்களை குவித்திருக்கும் சங்கக்கார, சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் இலங்கை அணி இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் சாதிக்காது போயிருந்தமை பற்றி எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதில் வழங்கியிருந்தார். அதில், இலங்கையின் இளம் வீரர்களுக்கு இத்தொடர் அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு களமாக அமைந்திருந்தாகவும், இவ்வாறான அதிகமான டெஸ்ட் போட்டிகளில் கிடைக்கும் அனுபவங்கள் எதிர்காலத்தில் சாதிக்க அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றவாறு கூறி, இலங்கை அணி வரும் காலங்களில் நல்ல முடிவுகளை காட்டும் என நம்பிக்கையினையும் வெளியிட்டிருந்தார்.
the more tests our boys play the better off they will be in the future. Positive results can only come with more exposure
— Kumar Sangakkara (@KumarSanga2) August 7, 2017
அனுபவமற்ற இளம் வீரர்களையே தற்போதைய குழாத்தில் கொண்டிருக்கும் இலங்கை அணி மீண்டெழ, உபாதைக்கு உள்ளாகியிருக்கும் சில முக்கிய வீரர்களின் மீள்வருகையும் தேவையாக இருக்கின்றது. காயமடைந்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களான நுவான் பிரதீப் மற்றும் தம்மிக்க பிரசாத், சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்ன, அதிரடி ஆட்டக்காரர் குசல் பெரேரா ஆகியோர் இல்லாமல் போயிருந்தது சமீபத்திய காலங்களில் இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக காணப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இன்னும், இலங்கை அணி தோல்விகளை சந்திக்கும் போது, இரசிகர்கள் மற்றும் வீரர்கள் அடையும் ஏமாற்றம் தனக்குத் தெரியும் என முன்னர் வெளியிட்ட கருத்து ஒன்றில் கூறியிருந்த சங்கா, அவ்வாறான தருணங்களில் அனைவரும் அணிக்கு அதிக ஆதரவும், அன்பும் வழங்கி விடயங்கள் சரியான இடத்தில் வைக்கப்படும் வரை பொறுமை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
>> மேலும் பல செய்திகளைப் படிக்க <<