இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் T20 உலகக் கிண்ணத் தொடரின் சுபர் 12 சுற்றில் ஆடும் தீர்மானம் கொண்ட போட்டி இன்று (25) அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் ஆரம்பமாகின்றது.
>> அவுஸ்திரேலியாவுடன் இலங்கை அணிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சவால்
இந்தப் போட்டிக்கு முன்னதாக சுபர் 12 சுற்றில் அயர்லாந்தை எதிர்கொண்ட இலங்கை அதில் இலகு வெற்றியினைப் பதிவு செய்ததோடு மறுமுனையில் அவுஸ்திரேலியா இதற்கு முன்னர் தமது முதல் மோதலில் நியூசிலாந்து அணியுடன் அதிர்ச்சி தோல்வியினை சந்திந்திருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் இந்த போட்டி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வழங்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழல்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்ஷன அவுஸ்திரேலிய அணியினை விட இலங்கை அதிக நம்பிக்கையுடன் காணப்படுவதாக தெரிவித்திருந்தார்.
”அவர்கள் நியூசிலாந்துடன் (சுபர் 12 சுற்றின் முதல் போட்டியில்) தோல்வியடைந்திருக்கின்றனர். நாங்கள் (அயர்லாந்துடன்) வெற்றி பெற்றிருக்கின்றோம். எங்களிடம் நம்பிக்கை இருக்கின்றது. அத்துடன் எங்களது நம்பிக்கை அவுஸ்திரேலிய அணியினை விட சிறப்பாக உள்ளது.”
இலங்கை கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு செல்வது தொடர்பாகவும் கருத்து வெளியிட்ட தீக்ஷன இவ்வாறு குறிப்பிட்டார்.
”போட்டியொன்றினை வெற்றி பெறுவது எப்போதும் நல்லதாக இருக்கும். எங்களது எதிர்பார்ப்பும் இறுதி நான்கு அணிகளில் ஒன்றாக (அதாவது அரையிறுதி செல்லும் நான்கு அணிகளில்) வருவதாக காணப்படுகின்றது. நாங்கள் இறுதி நான்கு அணிகளில் ஒன்றாக வருவதற்கு அவுஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும். அவர்களிடம் நல்ல வேகப்பந்துவீச்சாளர்களும், சுழல்பந்துவீச்சாளர்களும் இருக்கின்றனர்.”
”நியூசிலாந்து மோதலில் தோல்வியுற்றதால் அவர்கள் (இலங்கை மோதலில்) மீண்டு வருவதற்கு முடியும் எனவும் நான் நினைக்கின்றேன். அவர்களே உலகக் கிண்ணத் தொடரின் நடப்புச் சம்பியன்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் தொடரில் இருக்க வேண்டுமெனில் அவர்கள் வெற்றி பெற வேண்டும். அவர்களிடம் நல்ல வேகப்பந்துவீச்சு இருக்கின்றது. எங்களிடம் நல்ல துடுப்பாட்டம் இருக்கின்றது. நாங்கள் அவர்களுடனான போட்டியில் 160 தொடக்கம் 170 வரையிலான ஓட்டங்கள் பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.”
அதேநேரம் உபாதை சிக்கல்களுக்கு முகம் கொடுத்த பெதும் நிஸ்ஸங்க பற்றி பேசியிருந்த தீக்ஷன இப்போது பெதும் நிஸ்ஸங்க நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக தெரிவித்ததோடு, அவர் அடுத்த போட்டியில் ஆடுவார் எனவும் கூறியிருந்தார்.
>> மேலும் மூன்று வீரர்களை ஆஸி. வரவைக்கும் இலங்கை கிரிக்கெட் அணி
விக்கெட்டுக்களை எடுத்த பின்னர் தான் அம்பு விடுவது போன்று பின்பற்றும் புதிய வெற்றிக் கொண்டாட்ட முறை (Celebration) குறித்தும் கருத்து தெரிவித்த தீக்ஷன அது Arrow என்னும் தொலைக்காட்சி தொடரினை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறியிருந்தார்.
இறுதியாக வனிந்து ஹஸரங்கவுடன் இணைந்து பந்துவீசுவது பற்றி குறிப்பிட்ட அவர் இரண்டு வீரர்களும் தாம் வீசுகின்ற நான்கு ஓவர்களிலும் எப்போதும் 24 இற்கு குறைவான ஓட்டங்களை கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இருப்பதன் காரணமாகவே முன்னணி துடுப்பாட்டவீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய முடியுமாக இருக்கின்றது எனத் தெரிவித்திருந்தார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<