பாகிஸ்தானை வீழ்த்தும் வாய்ப்பை தவறவிட்டது ஏமாற்றம் அளிக்கிறது -குல்படின்

240
Getty images

பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு கடுமையாகப் போராடியும் தோல்வியை சந்திக்க நேரிட்டமை ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்த குல்படின் நயிப், வேகப் பந்துவீச்சாளர் ஹமீட் ஹசன் உபாதைக்குள்ளாகியது தமது அணிக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியிருந்ததாக குறிப்பிட்டார். 

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

ஆப்கான் வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துக் கொண்ட பாகிஸ்தான்

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of…

கையில் இருந்த வெற்றியை அணித் தலைவர் குல்படின் நயிபின் தவறான முடிவுகளால் ஆப்கானிஸ்தான் அணி கோட்டை விட்டது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 9 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 4 ஆவது இடத்திற்கு முன்னேற, ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக 8 ஆவது தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தோல்வி குறித்து குல்படின் நயிப் கருத்து வெளியிடுகையில், 

இந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே எங்களுக்கு துரதிஷ்டம் ஏற்பட்டது. எமது அணியில் உள்ள முக்கிய வேகப் பந்து வீச்சாளரான ஹமீத் ஹசன் உபாதைக்குள்ளாகி மைதானத்தை விட்டு வெளியேறினார். அதேபோன்று, இந்த ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. எனவே என்னைப் போன்ற மிதவேகப் பந்து வீச்சாளர்களுக்கு அது ஆதரிக்கவில்லை.

ஆனால் துரதிஷ்டம் என்னவென்றால், ஹமீத் ஹசனுக்கு தொடர்ந்து பந்துவீச முடியாமல் போனது. அவர் போட்டியின் இறுதிவரை இருந்திருந்தால், அது பாகிஸ்தான் அணிக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதுடன் போட்டியில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

நாங்கள் பாகிஸ்தானுக்கு சிறந்த போட்டியொன்றைக் கொடுத்தோம். ஆனால் இறுதியில் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தோம். இதற்கான அனைத்து பாராட்டுக்களும் பாகிஸ்தானைச் சாரும். இமாத் வசீம் மிகவும் சிறப்பாக விளையாடினார், சதாப் அவருக்கு சிறந்ததொரு இணைப்பாட்டத்தை வழங்கினார். நாங்கள் இவ்வாறான பலமிக்க அணிகளுடன் விளையாடும் போது இந்த மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டும்.

இன்று எங்களுக்கு துரதிஷ்டமான நாள். ஹமீத் ஹசன் காயமடைந்தார். விக்கெட் மெதுவாகவும், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருந்தது. எனவே மொஹமட் நபி, முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான் மற்றும் சமிஉல்லாஹ் ஆகியோர் பந்துவீசிய விதம் பாராட்டுக்குரியது. ஆனால் நாங்கள் ஹமீட்டை தவறவிட்டோம். 

போட்டியின் தொடக்கத்தில் 30-40 ஓட்டங்களைக் குவிப்பது போதாது, 60-70 அல்லது 100 ஓட்டங்களை எடுக்க வேண்டும். இதனால் நல்லதொரு ஓட்ட எண்ணிக்கையை இலக்காக நிர்ணயிக்கலாம். ஆனால் நான் உட்பட ஒவ்வொரு துடுப்பாட்ட வீரரும் ஒரு படி மேலே செல்ல வேண்டும். நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம், எனவே எதிர்காலத்தில் நாங்கள் சிறப்பாக செயற்படுவோம் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, மைதானத்தில் ஆரம்பம் முதலே இரு நாடுகளையும் சேர்ந்த ஒரு சில ரசிகர்ளுக்கிடையில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சில தாக்குதல்களும் மைதானத்தில் இடம்பெற்றன. 

ஒரு கட்டத்தில் கூச்சல் தாங்க முடியாத சக ரசிகர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்களை வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டனர். இதன் காரணமாக அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்களை வெளியேற்றினர். வெளியே செல்லும்போது கடுப்பில் இருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சில பாகிஸ்தான் ரசிகர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் போட்டி முடிந்த பின்னரும் தொடர்ந்தன. 

இந்த நிலையில், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் குல்படின் நயிப் கருத்து வெளியிட்ட போது, 

எனது அணியைப் பற்றியும் எனது நாட்டைப் பற்றியும் ஒரு நல்ல அபிப்பிராயத்தை விட்டுச் செல்வதற்கு நாங்கள் இங்கு வந்துள்ளோம். எனவே நீங்கள் எனது நாட்டைப் பார்த்தால், கடந்த 40, 45 ஆண்டுகளில் நல்ல விடயங்கள் எதுவும் நடக்கவில்லை. எனவே, எம்மிடம் உள்ள நட்பை முழு உலகிற்கு காட்ட நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம் 

அனைத்து ரசிகர்களும் இவ்வாறான கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பார்கள். இது ஒரு போட்டி மட்டுமே. தயவுசெய்து ஒரு விளையாட்டைப் போலவே பாருங்கள். இரு தரப்பினரையும் உற்சாகப்படுத்த இந்த வகையான பார்வையாளர்களை நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் வீரர்களை நேசிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். எனவே அவர்களை சந்திக்கவும் கட்டிப்பிடிக்கவும் அவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள்.

ஆனால் மைதானத்தில் வந்து வீரர்களை கேலி செய்வது அல்லது மைதான ஊழியர்களை மற்றும் பிற ஊழியர்களை கேலி செய்வது நல்லதல்ல. எல்லோரும் தமது நாட்டு வீரர்களை ஹீரோக்களாக நேசிக்கிறார்கள், எனவே அவர்கள் யாருக்கும் தீங்கு செய்ய விரும்பவில்லை என தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<