தென்னாபிரிக்க அணி வீரர் அண்டில் பெஹலுக்வாயோவின் நிறத்தினை சாடும் வகையில் பேசியிருந்த பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ப்ராஷ் அஹமட் பகிரங்க மன்னிப்பு கோரியதால், அவரை அணி சார்பாக மன்னித்து விடுவதாக தென்னாபிரிக்க அணித் தலைவர் பெப் டு ப்ளசிஸ் தெரிவித்துள்ளார்.
எதிரணி வீரரின் நிறம் பற்றி கருத்து வெளியிட்ட சர்ச்சையில் சர்ப்ராஸ்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான சர்ப்ராஸ் ….
பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ப்ராஷ் அஹமட், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, அண்டில் பெஹலுக்வாயோவை பார்த்து உருது மொழியில் சாடுவதை போல் பேசியிருந்தார். அவர் பேசியிருந்த விடயம் விக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த ஒலி வாங்கியில் பதிவாகியது. இதனை மொழிப்பெயர்ப்பு செய்து பார்த்ததில், சர்ப்ராஷ் “கறுப்பு இனத்தவர்” என பெஹலுக்வாயோவை சாடியிருந்தமை தெரிய வந்தது. இதனையடுத்து சர்ப்ராஷ் அஹமட்டுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பையும் கோரியிருந்தார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் பயிற்சிக்கு பின்னர் கருத்து வெளியிட்ட டு ப்ளசிஸ், சர்ப்ராஷ் அஹமட்டை அணி மன்னித்து விடுவதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“சர்ப்ராஷ் மன்னிப்பு கோரியுள்ளதால் நாம் அவரை மன்னித்து விட்டோம். அவர் மன்னிப்பு கோரியதுடன், அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பிலான முடிவு எமது கையில் இல்லை. ஐசிசிதான் இது தொடர்பிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கும்” என்றார்.
“சர்ப்ராஷ் இதனை நிச்சயமாக உள்நோக்கங்களுடன் கூறியிருக்க மாட்டார் என்பது தெரியும். ஆனால் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது, நிறம் தொடர்பிலான கருத்துக்களை வெளியிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், இந்த கருத்துக்காக எத்தகைய பின் விளைவுகளை அவர் சந்திக்க போகிறார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த விடயத்தில் சர்ப்ராஷ் உடனடியாக மன்னிப்பு கோரியதன் காரணமாகவே அதனை நாம் பெரிதுப்படுத்தவில்லை. அதனால், நாம் இந்த விடயத்தை சாதாரணமாகவும் எடுத்துக்கொள்ளவில்லை. பெஹலுக்வாயோ சர்ப்ராஷ் கூறியதை கவனிக்கவில்லை என என்னிடம் குறிப்பிட்டார். ஏனென்றால் நேரடியாக குறித்த விடயத்தினை கூறுவது போன்று தோன்றவில்லை. அத்துடன் மொழி வித்தியாசம் என்பதால், அவர் கூறியதில் எவ்வித பெரிய வித்தியாசங்களையும் நாம் காணவில்லை”
ஒருநாள் அரங்கில் கோஹ்லியின் சாதனையை முறியடித்த ஹசிம் அம்லா
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் வேகமாக 27 சதங்களை பெற்ற…
இறுதியாக இந்த விடயத்தில் உள்ள பதற்றத்தை குறைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட டு ப்ளசிஸ், “எங்களது அணி மிகவும் இரக்கமான அணி. நாம் இலகுவாக மன்னித்துவிடுவோம். அது அவுஸ்திரேலிய அணியாக இல்லாமல் இருந்தால் மாத்திரமே” என்று குறிப்பிட்டார்.
தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும், நிறைவு பெற்றுள்ள நிலையில் தொடர் 1-1 என சமனிலையாகி உள்ளது. இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை (25) செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது.