பாக்.கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான் இராஜினாமா

295
PCB

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

வசீம் கான் கடந்த 2019இல் அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் இஷான் மணியால் அந்த நாட்டு கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த இஷான் மணியின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் விரும்பவில்லை.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக ரமீஸ் ராஜாவை பிரதமர் இம்ரான் கான் நியமித்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் இஷான் மணியால் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்ட வசீம் கான், தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார்.

வசீம் கானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவடைய இருந்தது. இதனால் அவரது பதவியை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

EMBERD LINKS

ஏவ்வாறாயினும், தனது பதவிக்காலம் நிறைவடைய மூன்று மாதங்களுக்கு முன் இவ்வாறு வசீம் கான் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டுக்;குப் பிறகு பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் வசீம் கானின் பங்கும் மிக முக்கிய இடத்தை வகித்தன.

இதேவேளை, அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானின் ஆலோசகர்களாக மெத்யூ ஹெய்டன் மற்றும் வேர்னன் பிளாண்டர் ஆகியோரை நியமிப்பதில் வசீம் கான் தொடர்புபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முக்கிய பதவியிலிருந்து பதவி விலகும் மூன்றாவது நபர் வசீம் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மிஸ்பா உல் ஹக் மற்றும் வகார் யூனிஸ் ஆகிய இருவரும் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினர்.

இதேவேளை, வசீம் கான் திடீரென இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ரமீஸ் ராஜா நேற்று முன்தினம் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகக் குழு உறுப்பினர்களை சந்தித்து, புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதனால், பாகிஸ்தான் சபையின் தலைவரான ரமீஸ் ராஜா புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<