பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மன்னிப்பு கோர வேண்டும் – வசீம் அக்ரம்

212
Wasim Akram crictizes PCB for leaving out Imran Khan

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான வசீம் அக்ரம் தனது நாட்டு கிரிக்கெட் சபையின் செயல் குறித்து விமர்சித்திருக்கின்றார்.  

>> வனிந்துவின் அதிரடிப் பந்துவீச்சில் ஜப்னாவை வெளியேற்றிய கண்டி

பாகிஸ்தானின் சுதந்திர தினம் கடந்த 14ஆம் திகதி கொண்டாடப்பட்டிருந்தது. இந்த சுதந்திர தினத்தை முன்வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வீடியோ காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தது 

குறிப்பிட்ட வீடியோ காணொளி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 1952ஆம் ஆண்டு தொடக்கம் கிரிக்கெட் அரங்கில் அடைந்த முக்கிய தருணங்கள், முக்கிய வீரர்கள் என்பவற்றினை நினைவு கூறும் வகையில் அமைந்திருந்தது. எனினும் பாகிஸ்தானுக்கு ஒருநாள் உலகக்  கிண்ணத்தினை வென்று கொடுத்த ஒரே தலைவராக இருக்கும் இம்ரான் கான் இந்த காணொளியில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இவ்வாறான செயற்பாடு இரசிகர்கள் உட்பட பலரினை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருந்ததோடு, வசீம் அக்ரமும் தனது விமர்சனத்தினை தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு வாயிலாக தெரிவித்திருக்கின்றார் 

”இம்ரான் கான் இடம்பெறாத, பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றைப் பேசும் காணொளியைப் பார்த்தது என் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும் இம்ரான் கான் கிரிக்கெட் உலகின் முக்கிய வீரர்களில் ஒருவர். அவருடைய காலத்தில் வலுவான அணியை உருவாக்கியதோடு சரியான பாதையையும் அமைத்தவர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த வீடியோ காணொளியை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார். 

வசீம் அக்ரம் உட்பட பலரும் விமர்சனம் செய்திருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை குறித்த காணொளியினை நீக்கியதுடன் இம்ரான் கானின் பதிவுகள் அடங்கியவாறு காணொளியினை மீண்டும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் அரசியல் பிரச்சினைகளில் இம்ரான் கான் சிக்கியது வீடியோ காணொளியில் இம்ரான் கான் இடம்பெறாமல் போனமைக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது 

கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின்னர் அரசியலில் களமிறங்கிய இம்ரான் கான் 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டதோடு, பின்னர் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவி விலக்கப்பட்டிருந்தார். இதேநேரம் இம்ரான் கான் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<