இங்கிலாந்தை எதிர்கொள்ளும் அளவிற்கு பயிற்சி ஆட்டம் போதுமற்றது : கருணாரத்ன

916
Dimuth Karunarathne

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் என்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோரின் துல்லியமான பந்துகளை சந்திக்க இங்கிலாந்து மண்ணில் பயிற்சி ஆட்டங்கள் போதுமானதல்ல என்று இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன கூறியுள்ளார்.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றுத் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. நாளை 9ஆம் திகதி 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

குசல் மென்டிசின் புதிய திட்டம்

பொதுவாக இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடர் விளையாடச் செல்லும் அணிக்கு பெரிய தலைவலிதான். அங்குள்ள சூழ்நிலையில் மற்ற அணிகள் விளையாடுவது மிகக்கடினம். சில நேரங்களில் இங்கிலாந்திற்கு ஈடுகொடுக்க முடியாத பரிதாப நிலைகள் கூட ஏற்படும்.

தற்போது இலங்கை அணிக்கு இதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 2ஆவது போட்டியில் 9 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் போட்டி 3 நாட்களிலும், 2ஆவது போட்டி 4 நாட்களிலும் முடிவடைந்தது.

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குமுன் இலங்கை அணி எசெக்ஸ் மற்றும் லேசெஸ்டெர்ஷைர் அணிகளுக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட தலா ஒரு பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட  வீரர் திமுத்  கருணாரத்ன நான்கு இன்னிங்ஸில் 8, 16 (ஆட்டம் இழக்காமல்), 0 மற்றும் 100 (ஆட்டம் இழக்காமல்) ஓட்டங்கள் பெற்றிருந்தார். இந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களும் இங்கிலாந்து அணியை எதிர்கொள்வதற்கான தகுந்த ஆட்டங்கள் இல்லை என்று குமுறியுள்ளார்.

இதுகுறித்து திமுத் கருணாரத்ன கூறுகையில் ‘‘பயிற்சி ஆட்டத்தில் நான் அடித்த சதம் மிகவும் திருப்தியானது என்று நான் நினைக்கவில்லை. இதுபோன்ற பயிற்சி ஆட்டம் இங்கிலாந்து தொடருக்கான நல்ல முன்னேற்றமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. எங்களுக்கு எதிராக விளையாடிய வீரர்கள், அடிப்படையில் 2ஆவது நிலை வீரர்கள்தான். எங்களுடைய 2ஆவது பயிற்சி ஆட்டத்தில் அவர்கள் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும்தான் வைத்திருந்தார்கள். சதம் அடித்தபின் நான் மிகவும் மகிழ்ச்சியாக இல்லை” என்று திருப்தியில்லாமல் பேசியுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்