டெஸ்ட் போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்கும் வனிந்து ஹஸரங்க

303

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து சகலதுறைவீரரான வனிந்து ஹஸரங்க டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

>> தனன்ஜயவின் சுழலில் வீழ்ந்தது பி-லவ் கண்டி அணி

கடந்த 2020ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வனிந்து ஹஸரங்க இலங்கை அணிக்காக மொத்தமாக 04 போட்டிகளில் மாத்திரமே ஆடியிருப்பதோடு அதில் 04 விக்கெட்டுக்களை மொத்தமாகக் கைப்பற்றியிருக்கின்றார்.

கடைசியாக 2021ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியொன்றில் ஆடிய அவர் அதன் பின்னர் இலங்கை டெஸ்ட் குழாத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் ஒருநாள் மற்றும் T20 என மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் மாத்திரம் தொடர்ந்து ஆடிவரும் அவர் குறித்த போட்டிகளில் மாத்திரம் தனது எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

வனிந்து ஹஸரங்க டெஸ்ட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறும் முடிவினை இலங்கை கிரிக்கெட் சபைக்கு உத்தியோபூர்வமாக அறிவித்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக இயக்குனர் ஏஷ்லி டி சில்வா குறிப்பிட்டிருப்பதோடு ஹஸரங்கவின் முடிவினை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

இதேவேளை வனிந்து ஹஸரங்க தற்போது லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் பி-லவ் கண்டி அணியின் தலைவராக செயற்பட்டு வருவதோடு துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<