வனிந்து ஹஸரங்கவை தக்கவைத்த மென்செஸ்டர் அணி

280

இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரட் (The Hundred) கிரிக்கெட் தொடரில் மீண்டும் மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க தக்கவைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரட் தொடருக்கு முன் ஒவ்வொரு அணிகளாலும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விபரம் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதன்படி, ஆடவர் மற்றும் மகளிர் தி ஹண்ட்ரட் தொடரில் ஒவ்வொரு அணிகளுக்கும் தலா நான்கு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல, ஆடவர் பிரிவில் ஒவ்வொரு அணிகளுக்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பள வரம்பிற்குள் 10 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, இந்த ஆண்டு தி ஹண்ட்ரட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹஸரங்கவை தமது அணியில் தக்க வைத்துக்கொள்வதற்கு மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தி ஹண்ட்ரட் தொடரில் மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக வனிந்து ஹஸரங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட போதிலும், குறித்த தொடர் நடைபெற்ற காலப்பகுதியில் ஆசியக் கிண்ணம் மற்றும் T20 உலகக் கிண்ணத் தொடர்களுக்கு தயாராக வேண்டியதன் காரணமாக அதில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

இதனிடையே, வனிந்து ஹஸரங்கவைத் தவிர, லியெம் லிவிங்ஸ்டன், சதாப் கான், கிளென் மெக்ஸ்வெல், ஜோஸ் பட்லர், சுனில் நரைன், ரஷீத் கான், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரை தத்தமது அணியில் தக்கவைக்க அந்தந்த அணிகளின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாப் டு பிளெசிஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆடம் ஸம்பா உள்ளிட்ட முன்னணி வீரர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள தி ஹண்ட்ரட் தொடருக்கான வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வீரர்கள் ஏலம் மார்ச் 23ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<