வனிந்து ஹஸரங்கவை 10.75 கோடிக்கு வாங்கியது RCB

IPL Auction 2022

856

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் இன்றைய தினம் (12) இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்று வருகின்றது.

>> IPL ஏலத்தில் இடம்பிடித்துள்ள 23 இலங்கை வீரர்கள்!

இந்தநிலையில், இலங்கை அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்கவை அணியில் இணைக்க, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் கடுமையான போட்டிகளை மேற்கொண்டிருந்த நிலையில், ஏலத்தை தலைமை ஏற்று நடத்திவந்த ஏலதாரர் ஹக் எட்மீட்ஸ் திடீரென மயக்கமுற்று விழுந்தார். இதனால், வைத்தியர்கள் அவருக்கு சிகிச்சைகளை மேற்கொண்டனர். இதனால், சாரு சர்மா ஏலத்தை தொடர்ந்திருந்தார்.

இதன்படி ஹக் எட்மீட்ஸின் ஏலத்தின் போது, 10.75 கோடி ரூபாவுக்கு (இந்திய ரூபாய்) வனிந்து ஹஸரங்க ஏலம் கேட்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆரம்பித்திருந்த ஏலத்தில் அதே தொகைக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார். இவர், கடந்த ஆண்டும் பெங்களூர் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தை வகிக்கும் வனிந்து ஹஸரங்க, நேற்றைய தினம் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதுமாத்திரமின்றி, இவர் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக பிரகாசிக்கக்கூடிய வீரராக உள்ளார்.

இலங்கை அணியைச்சேர்ந்த 23 வீரர்கள் ஐ.பி.எல். ஏலத்தில் பெயரிடப்பட்டுள்ளதுடன், இதுவரையில் வனிந்து ஹஸரங்கவின் பெயர் மாத்திரமே ஏலத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<