ஐசிசி இன் ஆடவர் T20 அணியில் இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க இடம்பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை சார்பில், கடந்த ஆண்டு (2021) T20 போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட வீர, வீராங்கனைகள் அடங்கிய சிறந்த 11 பேர் கொண்ட கனவு அணி நேற்று (19) வெளியிடப்பட்டது.
இதன்படி, 2021 ஆம் ஆண்டில் 14 T20 போட்டிகளில் ஆடி 589 ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் மற்றும் கடந்த ஆண்டில் 1326 ஓட்டங்களைக் குவித்துள்ள பாகிஸ்தானின் மொஹமட் ரிஸ்வான் ஆகிய இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
3 ஆம் இலக்கத்தில் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாமை பெயரிட்டுள்ள ஐசிசி, அவரையே இந்த அணியின் தலைவராகவும் நியமித்துள்ளது.
தென்னாபிரிக்காவின் எய்டன் மார்க்ரமை 4 ஆம் இலக்க வீரராகவும், அவுஸ்திரேலிய அணி T20 உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த மிட்செல் மார்ஷை 5 ஆம் இலக்க வீரராகவும், 6 ஆம் இலக்க வீரர் மற்றும், பினிஷராக தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லரையும் ஐசிசி தேர்வு செய்துள்ளது.
அத்துடன், சுழல் பந்துவீச்சாளராக இலங்கையின் வனிந்து ஹஸரங்க மற்றும் தென்னாபிரிக்காவின் தப்ரைஸ் ஷம்ஸியும் இடம்பெற்றுள்ளனர். இதில் வனிந்து ஹஸரங்க கடந்த ஆண்டில் 20 T20 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், வேகப் பந்துவீச்சாளர்களாக அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், பங்களாதேஷின் முஸ்தபிசூர் ரஹ்மான் மற்றும் பாகிஸ்தானின் ஷஹீன் ஷா அப்ரிடியும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, ஐசிசி இனால் பெயரிடப்பட்டுள்ள கடந்த ஆண்டின் சிறந்த T20 அணியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 3 வீரர்களும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 வீரர்களும் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், இந்தியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த எந்தவொரு வீரரும் கடந்த ஆண்டின் ஐசிசி இன் சிறந்த T20 அணியில் இடம்பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று ஐசிசி பெண்கள் T20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா மட்டுமே இடம்பெற்றுள்ளார். இதனிடையே, பெண்கள் அணிக்கு இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் தலைவராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐசிசி இன் 2021ஆம் ஆண்டின் சிறந்த T20 அணி:
ஜோஸ் பட்லர், மொஹமட் ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), பாபர் அசாம் (அணித்தலைவர்), எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், டேவிட் மில்லர், தப்ரைஸ் ஷம்ஸி, ஜோஷ் ஹேசில்வுட், வனிந்து ஹஸரங்க, முஸ்தபிசூர் ரஹ்மான், ஷஹீன் அப்ரிடி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<