சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (13) வெளியிட்டுள்ள பந்துவீச்சாளர்களுக்கான புதிய T20i தரவரிசையில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நிறைவடைந்த 2 போட்டிகள் கொண்ட T20i தொடரில் 6 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் வனிந்து ஹசரங்க தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி, 696 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
குறித்த தொடரின் முதலாவது T20i போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்ற அவர், 2ஆவது போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இது இவ்வாறிருக்க, ஐசிசி T20i கிரிக்கெட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் வனிந்து ஹசரங்க 5ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மற்றுமொரு இலங்கை வீரரான மஹீஷ் தீக்ஷன, பந்துவீச்சாளர்களுக்கான புதிய T20i தரவரிசையில் 684 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் உள்ளார். அத்துடன், மதீஷ பத்திரன 22 இடங்கள் முன்னேறி 31ஆவது இடத்துக்கும், நுவன் துஷார 28 இடங்கள் முன்னேறி 48வேது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
- வனிந்து ஹஸரங்க ஒருநாள் தொடரில் ஆடுவது சந்தேகம்
- லங்கா T10 சுபர் லீக்கில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர்கள்
- இலகு வெற்றியுடன் T20 தொடரில் முன்னிலை அடைந்த இலங்கை வீரர்கள்
ஐசிசி இன் T20i பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து சுழல்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் 725 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அத்துடன், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அக்கீல் ஹொசெய்ன் 691 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளார்.
T20i போட்டிகளுக்கான துடுப்பாட்ட வரிசையை பொருத்தவரை, அவுஸ்திரேலியாவின் ட்ரவிஸ் ஹெட் முதலிடத்தையும், இங்கிலாந்தின் பில் சோட் 2ஆவது இடத்தையும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 3ஆவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அதேபோல, இலங்கை அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க மாத்திரம் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து 672 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதே நேரத்தில் குசல் மெண்டிஸ் (15) 3 இடங்கள் பின்தங்கியுள்ளார். இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க 2 இடங்கள் முன்னேறி (37), குசல் ஜனித் பெரேரா (41) ஒரு இடம் முன்னேறி உள்ளனர்.
இந்த நிலையில், ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலின் முதல் 8 இடங்களில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. இதில் முதல் இடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் நீடிக்கும் நிலையில், அடுத்தடுத்த இடங்களில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர்.
அதேசமயம் இந்த தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க ஒரு இடம் முன்னேறி 9ஆவது இடத்தையும், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப் 2 இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதுதவிர்த்து இலங்கை அணியின் இளம் ஆரம்ப துடுப்;பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க 8ஆவது இடத்தையும் தக்கவைத்துள்ளார்.
இதனிடையே, பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டையலில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சஹீன் அப்ரிடி 3 இடங்கள் முன்னேறி முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அதேசமயம், முதலிடத்தில் இருந்த கேசவ் மஹாராஜ் 2 இடங்கள் பின்தள்ளப்பட்டு 3ஆவது இடத்திற்கும், இந்திய அணியின் குல்தீப் யாதவ் ஒரு இடம் பின்தள்ளி 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேசமயம், ஒருநாள் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆப்கானின் மொஹமட் நபி முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அதே அணியின் ரஷித் கான் ஒரு இடம் முன்னேறி 3ஆம் இடத்தையும், பங்களாதேஷின் மெஹிதி ஹசன் மிராஸ் 4 இடங்கள் முன்னேறி 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<