தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு T20I போட்டிகளிலும் அரைச்சதம் கடந்திருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், T20I துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தை நெருங்கியுள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான T20I தொடரையடுத்து வெளியாகியுள்ள தரவரிசையின்படி, சூர்யகுமார் யாதவ் 2வது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
>> T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் மாயஜால தருணங்கள்
துடுப்பாட்ட வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டமை மாத்திரமின்றி, பாகிஸ்தான் வீரர் மொஹமட் ரிஸ்வானின் முதலிடத்தையும் நெருங்கியுள்ளார். மொஹமட் ரிஸ்வான் முதலிடத்தில் 854 புள்ளிகளுடன் உள்ளதுடன், சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், வெறும் 16 புள்ளிகளால் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் இவர் 50 மற்றும் 61 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தார். இதன்மூலம் அவருடைய புள்ளிகள் சற்று குறைந்துள்ள போதும், இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார். அதேநேரம் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஷாம் 801 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
பந்துவீச்சு தரவரிசையை பொருத்தவரை இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்க வீரர் டெப்ரைஷ் சம்ஷி 2 இடங்கள் பின்தள்ளி 5வது இடத்தை பிடித்துள்ள காரணத்தால் வனிந்து ஹஸரங்க 3வது இடத்தையும், அவுஸ்திரேலியாவின் அடம் ஷாம்பா 4வது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளனர்.
இதில் வனிந்து ஹஸரங்க 692 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், இரண்டாவது இடத்தில் உள்ள ரஷீட் கானை (696) விட நான்கு புள்ளிகள் குறைவாக உள்ளார்.
T20I பந்துவீச்சாளர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹெஷல்வூட் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், சகலதுறை வீரர்கள் வரிசையில் மொஹமட் நபி முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியை பொருத்தவரை துடுப்பாட்ட வரிசையில் பெதும் நிஸ்ஸங்க 8வது இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளதுடன், பந்துவீச்சாளர்கள் வரிசையில் மஹீஷ் தீக்ஷன 7வது இடத்தையும், சகலதுறை வீரர்கள் வரிசையில் வனிந்து ஹஸரங்க 4வது இடத்தையும் தக்கத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<