அதிக ஒப்பந்த தொகையைப் பெறும் வனிந்து, சமீர

809

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்காக வழங்கவிருக்கும் வருடாந்த ஒப்பந்த தொகை குறித்த விபரம் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றது.

>>கமிந்து ஹெட்ரிக் சதமடிக்க; 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் கசுன் ராஜித

இலங்கை கிரிக்கெட் சபை 7 பிரிவுகளில் இம்முறை வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்த தொகையினை வழங்கவிருப்பதுடன், அந்த ஒப்பந்த தொகையினை தேசிய கிரிக்கெட் அணியின் 20 வீரர்கள் பெறவிருக்கின்றனர்.

இதில் அதிக ஒப்பந்த தொகை, பிரிவு A1 இல் இடம்பெறும் வீரர்களுக்கு கிடைக்கவிருக்கின்றது. அதன்படி அதிக ஒப்பந்த தொகையைப் பெறுகின்ற இலங்கை அணியின் நான்கு வீரர்களாக வனிந்து ஹஸரங்க, துஷ்மந்த சமீர, திமுத் கருணாரட்ன மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் காணப்படுகின்றனர். இந்த வீரர்களுக்கு 100,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி சுமார் 2.5 கோடி ரூபா) வருடாந்த ஒப்பந்த தொகையாக வழங்கப்படுகின்றது.

>>இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக அன்டன் ரொக்ஸ்

கடந்த ஆண்டு பிரிவு A3 இல் காணப்பட்டிருந்த இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரட்ன கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் வெளிக்காட்டியிருந்த சிறந்த துடுப்பாட்டத்தினை அடுத்து இம்முறை பிரிவு A1 வீரராக உள்வாங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் 80,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி சுமார் 2 கோடி ரூபா) பெறுமதியான பிரிவு A2 இற்கான வருடாந்த ஒப்பந்தம் எந்த வீரர்களுக்கும் வழங்கப்படவில்லை. அதேநேரம் 65,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி சுமார் 1.5 கோடி ரூபா) பெறுமதியான பிரிவு B1 இற்கான வருடாந்த ஒப்பந்தம் இலங்கை அணியின் ஆறு வீரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதன்படி, இந்த ஒப்பந்தத்தினை பெறும் வீரர்களாக அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, லஹிரு திரிமான்ன, தசுன் ஷானக்க, தினேஷ் சந்திமால் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் காணப்படுகின்றனர்.

மறுமுனையில் 55,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி சுமார் 1.4 கோடி ரூபா) பெறுமதியான பிரிவு B2 ஒப்பந்தம் பெறுகின்ற வீரர்களாக சரித் அசலங்க, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் காணப்படுகின்றனர்.

>>ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் இணையும் லசித் மாலிங்க

45,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான (இலங்கை நாணயப்படி சுமார் 1.15 கோடி ரூபா) பிரிவு C1 ஒப்பந்தம் வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய வீரர்களுக்கு வழங்கப்படுகின்றது.

அதேநேரம் 35,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பிரிவு C2 (இலங்கை நாணயப்படி சுமார் 90 இலட்சம்) இற்குரிய வருடாந்த ஒப்பந்தம் சாமிக்க கருணாரட்ன, குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு வழங்கப்படுகின்றது.

இது தவிர அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக்க ராஜபக்ஷ உள்ளூர் வீரர்கள் பிரிவு ஒப்பந்தத்தினை பெறுவதோடு அவருக்கு ஒப்பந்த தொகையாக 25,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி சுமார் 63 இலட்சம்) வழங்கப்படுகின்றது.

அத்துடன் மகீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம ஆகியோரும் உள்ளூர்வீரர்கள் பிரிவு ஒப்பந்தத்தினைப் பெற்றிருப்பதோடு அவர்களில் தீக்ஷனவிற்கு 30,000 அமெரிக்க டொலர்களும் (இலங்கை நாணயப்படி சுமார் 76 இலட்சம்), ஜயவிக்ரமவிற்கு 20,000 அமெரிக்க டொலர்களும் (இலங்கை நாணயப்படி சுமார் 50 இலட்சம்) வழங்கப்படுகின்றது.

பிரிவு A1 (100,000 அமெரிக்க டொலர்கள்)

திமுத் கருணாரட்ன, துஷ்மன்த சமீர, வனிந்து ஹஸரங்க, தனன்ஞய டி சில்வா

பிரிவு A2 (80,000 அமெரிக்க டொலர்கள்)

பிரிவு B1 (65,000 (80,000 அமெரிக்க டொலர்கள்)

லசித் எம்புல்தெனிய, ரமேஷ் மெண்டிஸ், சரித் அசலன்க

பிரிவு B2 (55,000 அமெரிக்க டொலர்கள்)

அஞ்சலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, லஹிரு திரிமான்ன, தசுன் ஷானக்க, தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா

பிரிவு C1 (45,000 அமெரிக்க டொலர்கள்)

விஷ்வ பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ

பிரிவு C2 (35,000 அமெரிக்க டொலர்கள்)

சாமிக்க கருணாரட்ன, நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ்

உள்ளூர் வீரர்கள்

பிரவீன் ஜயவிக்ரம (20,000 அமெரிக்க டொலர்கள்), ஒசத பெர்ணான்டோ (15,000 அமெரிக்க டொலர்கள்), பானுக ராஜபக்ஷ (25,000 அமெரிக்க டொலர்கள்), லக்ஷான் சந்தகன் (30,000 அமெரிக்க டொலர்கள்), மகீஷ் தீக்ஷன (30,000 அமெரிக்க டொலர்கள்), நுவன் பிரதீப் (20,000 அமெரிக்க டொலர்கள்), பினுர பெர்னாண்டோ (15,000 அமெரிக்க டொலர்கள்), லஹிரு குமார (30,000 அமெரிக்க டொலர்கள்), மினோத் பானுக (15,000 அமெரிக்க டொலர்கள்), கமிந்து மெண்டிஸ் (15,000 அமெரிக்க டொலர்கள்)

செய்தி மூலம் – Sunday Times

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<